ரூ.3,176 கோடியில் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகள்: இஸ்ரேல் நிறுவன ஒப்பந்தத்தை ரத்து செய்தது இந்தியா
By DIN | Published on : 04th January 2018 01:03 AM | அ+அ அ- |
ரூ.3,176 கோடியில் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை தயாரித்து வழங்குவதற்காக, இஸ்ரேலின் பாதுகாப்பு தொழில்நுட்ப நிறுவனமான 'ரஃபேல்' நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்துள்ளது.
இதனை உறுதி செய்துள்ள அந்நிறுவனம், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு விரைவில் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவிருக்கும் நிலையில், இந்தியாவின் இந்த முடிவு வருத்தமளிப்பதாக தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, ரஃபேல் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் இஷாய் டேவிட், ஜெருசலேமில் பிடிஐ செய்தியாளரிடம் கூறியதாவது:
ரஃபேல் நிறுவனத்தின் 'ஸ்பைக்' ரக பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகள், உலகம் முழுவதும் 26 நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. நீண்ட நடைமுறைகளுக்கு பின்னர், தங்களது ராணுவத்துக்காக ஸ்பைக் ஏவுகணைகளை இந்திய பாதுகாப்புத் துறை தேர்வு செய்தது.
இந்நிலையில், இதுதொடர்பாக ரஃபேல் நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை, இந்திய பாதுகாப்புத் துறை ரத்து செய்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிக்கை, எங்களுக்கு தற்போது கிடைக்கப் பெற்றுள்ளது. இந்தியாவின் இந்த நடவடிக்கை, எங்களுக்கு வருத்தமளிக்கிறது. எனினும், இந்திய பாதுகாப்புத் துறையுடன் தொடர்ந்து ஒருங்கிணைந்து செயல்பட விரும்புகிறோம் என்றார் அவர்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இந்தியாவில் வரும் 14-ஆம் தேதி முதல் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். அவரது முதல் இந்தியப் பயணம் இதுவாகும். இந்தப் பயணத்தின்போது, ரஃபேல் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி உள்பட உயரதிகாரிகளும் உடன் வரவுள்ளனர். இந்திய அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தையின்போது, 'ஸ்பைக்' விவகாரத்தையும் முன்வைக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர். முன்னதாக, 'ஸ்பைக்' ஏவுகணை ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்ய வாய்ப்புள்ளதாக கடந்த மாதமே தகவல்கள் வெளியாகின.
'இந்தியாவில் தயாரிப்போம்' திட்டத்தின்கீழ் தொழில்நுட்பங்கள் முழுமையாக பரிமாறப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று ரஃபேல் நிறுவனத்திடம் இந்தியா வலியுறுத்தியதாகவும், ஆனால் அந்நிறுவனம் தயக்கம் காட்டியதால் ஒப்பந்தத்தை ரத்து செய்யும் முடிவு மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது.