இலாகா ஒதுக்கீட்டில் அதிருப்தி: குஜராத் அமைச்சரவைக் கூட்டத்தை புறக்கணித்தார் புருஷோத்தம் சோலங்கி

குஜராத் அமைச்சரவையில் தமக்கு ஒதுக்கப்பட்ட இலாகாவால் அதிருப்தியடைந்துள்ள மூத்த அமைச்சர் புருஷோத்தம் சோலங்கி, அமைச்சரவைக் கூட்டத்தை புதன்கிழமை புறக்கணித்துள்ளார்.

குஜராத் அமைச்சரவையில் தமக்கு ஒதுக்கப்பட்ட இலாகாவால் அதிருப்தியடைந்துள்ள மூத்த அமைச்சர் புருஷோத்தம் சோலங்கி, அமைச்சரவைக் கூட்டத்தை புதன்கிழமை புறக்கணித்துள்ளார். இதனால், அந்த மாநில அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
குஜராத் அமைச்சரவையில் மீன்வளத்துறை இலாகா மட்டும் ஒதுக்கப்பட்டதால் அமைச்சர் சோலங்கி அதிருப்தி அடைந்துள்ளார். இதுகுறித்து அவர் செவ்வாய்க்கிழமை கூறுகையில், '5 முறை எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்ட பிறகும் எனக்கு சரியான இலாகாக்கள் ஒதுக்கப்படவில்லை. எனக்கு பிறகு புதிதாக எம்எல்ஏவாக தேர்வானவர்களுக்கு பெரிய இலாகாக்கள் அளிக்கப்படுகின்றன. குஜராத் முதல்வரான விஜய் ரூபானி தன்னிடம் 12 இலாகாக்களை வைத்துள்ளார்; இதேபோல், மேலும் பல அமைச்சர்களும் ஏராளமான இலாகாக்களை வைத்துள்ளனர்' எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஆமதாபாதில் புதன்கிழமை நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்தையும், தனது எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் அவர் புறக்கணிப்புச் செய்தார்.
இதனிடையே, காந்திநகரில் உள்ள சோலங்கியின் இல்லத்தில் அவரது ஆதரவாளர்கள், கோலி சமூகத் தலைவர்கள், அவரது சகோதரரும், முன்னாள் பாஜக எம்எல்ஏவுமான ஹிரா சோலங்கி உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர். இதையடுத்து அமைச்சர் சோலங்கி செய்தியாளர்களிடம் கூறுகையில், ' கோலி சமூகத் தலைவர்களை நான் அழைக்கவில்லை. தங்களது ஆதரவை தெரிவிப்பதற்கு, அவர்களாகவே இங்கு வந்துள்ளனர். எனது சமூக மக்கள், அமைச்சரவையில் எனக்கு கூடுதல் இலாகாக்கள் ஒதுக்கப்பட வேண்டும் என விரும்புகின்றனர்' என்றார்.
ஹிரா சோலங்கி செய்தியாளர்களிடம் பேசுகையில், 'நீதி கிடைக்கும் என்று கோலி சமூக மக்கள் நம்புகின்றனர்' என்றார்.
குஜராத் அமைச்சரவையில் புருஷோத்தம் சோலங்கிக்கு, மீன்வளத்துறை இலாகா ஒதுக்கப்பட்டுள்ளது. முந்தைய பாஜக அமைச்சரவையில் அவருக்கு இணையமைச்சர் அந்தஸ்து அளிக்கப்பட்டிருந்தது.
முன்னதாக, துணை முதல்வர் நிதின் படேலும் தனக்கு சரியான இலாகா ஒதுக்கப்படவில்லை என்று தெரிவித்து, முதல்வர் விஜய் ரூபானிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினார். பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தலையிட்டதால், அவருக்கு நிதி இலாகா மீண்டும் ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com