திருத்தப்பட்ட ஓபிசி மசோதா மக்களவையில் தாக்கல்

தேசிய இதர பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி) நல ஆணையத்துக்கு அரசமைப்புச் சட்ட அந்தஸ்து வழங்க வகை செய்யும் திருத்தப்பட்ட மசோதா, மக்களவையில் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டது

தேசிய இதர பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி) நல ஆணையத்துக்கு அரசமைப்புச் சட்ட அந்தஸ்து வழங்க வகை செய்யும் திருத்தப்பட்ட மசோதா, மக்களவையில் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.
தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்துக்கு ஒரு குறிப்பிட்ட சமூகத்தை பிற்படுத்தப்பட்ட பிரிவில் சேர்ப்பதற்கும் நீக்குவதற்கும் மட்டுமே அதிகாரம் உள்ளது. அதேவேளையில், தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையத்துக்கு கூடுதல் அதிகாரங்கள் உள்ளன. இந்த வேறுபாட்டை சரி செய்யும் வகையில், அரசமைப்புச் சட்ட (123-ஆவது திருத்தம்) மசோதா, மக்களவையில் கடந்த மழைக்கால கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. பின்னர், மாநிலங்களவையில் பல்வேறு திருத்தங்களுடன் நிறைவேறியது. இதனால், அந்த மசோதாவை மீண்டும் மக்களவையில் நிறைவேற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் தற்போது நடைபெற்று வரும் சூழலில், மக்களவையில் புதன்கிழமை அந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. மக்களவையில் கடந்த முறை நிறைவேற்றப்பட்ட மசோதாவில் இடம்பெற்றிருந்த பெரும்பாலான அம்சங்கள் புதிய மசோதாவிலும் இடம்பெற்றுள்ளன.
மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட், மசோதாவை தாக்கல் செய்து பேசியதாவது:
பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அதிகாரமளிப்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. புதிய மசோதாவின்படி, தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணைய உறுப்பினர்களில் ஒரு இடத்தை பெண்களுக்கும், மற்றொரு இடத்தை சிறுபான்மை சமூகத்தினருக்கும் ஒதுக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதில், பெண்களுக்கு பிரதிநிதித்துவம் அளிப்பது என்ற திருத்தத்தை மட்டும் மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. சிறுபான்மையினருக்கு ஏற்கெனவே தனி ஆணையம் இருப்பதால், அவர்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றார் கெலாட்.
இதேபோல, மாநிலங்களவையில் மேற்கொள்ளப்பட்ட மேலும் பல திருத்தங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதால், தற்போதைய மசோதாவுக்கு காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த விவகாரத்தில், மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்குக்கும், திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர் கல்யாண் பானர்ஜிக்கும் கடும் விவாதம் நடைபெற்றது. இதையடுத்து, அவையில் அமளி ஏற்பட்டதால், அவையை நாள் முழுவதும் ஒத்திவைப்பதாக அவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் அறிவித்தார்.
சிறுபான்மையினர் அந்தஸ்து விவகாரம்: இதனிடையே, மொழி சிறுபான்மையினருக்கு, சிறுபான்மை அந்தஸ்து வழங்கும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை என்று மக்களவையில் தெரிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி எழுத்துமூலம் அளித்த பதிலில் கூறியதாவது:
மொழி சிறுபான்மையினருக்கு, சிறுபான்மை அந்தஸ்து வழங்கும் திட்டம் மத்திய அரசிடம் இல்லை. தேசிய சிறுபான்மையினர் நல ஆணையச் சட்டத்தின்படி, முஸ்லிம்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், கிறிஸ்தவர்கள், பார்சி இனத்தவர், ஜெயின் சமூத்தினர் ஆகிய 6 பிரிவினரே சிறுபான்மையினராக அங்கீகரிக்கப்பட்டுள்ளனர் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com