மகாராஷ்டிர கலவரத்துக்கு ஹிந்து அமைப்புகளே காரணம்: மக்களவையில் காங்கிரஸ் குற்றச்சாட்டு

மகாராஷ்டிர மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்து வரும் கலவரத்துக்கு ஹிந்து அமைப்புகளே காரணம் என்று மக்களவையில் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்து வரும் கலவரத்துக்கு ஹிந்து அமைப்புகளே காரணம் என்று மக்களவையில் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
மக்களவையில் புதன்கிழமை கேள்வி நேரத்துக்குப் பிறகு இந்தப் பிரச்னையை எழுப்பி, காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியதாவது:
மகாராஷ்டிர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்து வரும் கலவரத்துக்கு ஆர்எஸ்எஸ் மற்றும் ஹிந்து அமைப்புகள்தான் காரணம். மாநிலத்தில் மராத்தியர்களுக்கும், தலித் மக்களுக்கும் இடையே பிரிவினையை ஏற்படுத்த முயலுகின்றனர். இந்த விஷயத்தில் பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து அமைதி காப்பது ஏன்? என்பது தெரியவில்லை. தலித் மக்களுக்கு பிரச்னை ஏற்படும்போதெல்லாம் அதனைக் கண்டு கொள்ளாமல் பிரதமர் மெளன சாமியாராகி விடுகிறார்.
குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தலித்துகளுக்கு எதிராக வன்முறை வெடிக்கும்போதெல்லாம் பிரதமர் வேடிக்கை மட்டுமே பார்த்து வருகிறார். நாட்டில் உள்ள சில பாஸிச சக்திகள் தலித் மக்களை சமூகத்தின் அடித்தட்டில் வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படுகின்றன. மகாராஷ்டிரத்தில் நிகழும் கலவரம் தொடர்பாக உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும்' என்றார்.
இதற்கு பாஜக எம்.பி.க்கள் கடும் எதிர்த்துப் தெரிவித்து கோஷம் எழுப்பினர். பதிலுக்கு காங்கிரஸ் எம்.பி.க்களும் எதிர்ப்பு கோஷமிட்டனர். அப்போது ஆவேசமடைந்த கார்கே, தனது கையில் இருந்து சில காகிதத்தை கிழித்து வீசி பாஜக எம்.பி.க்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தார். அப்போது, மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் தலையிட்டு கார்கேவை அமைதிப்படுத்தினார்.
இதையடுத்துப் பேசிய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் அனந்த் குமார், 'மகாராஷ்டிரத்தில் எழுந்துள்ள பிரச்னையை அரசியலாக்க காங்கிரஸ் முயற்சிக்கிறது. பல்வேறு மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களில் தொடர் தோல்விகளைச் சந்தித்துள்ள காங்கிரஸ், கிடைக்கும் விஷயத்தை வைத்து அரசியல் நடத்த முயற்சிக்கிறது' என்று குற்றம்சாட்டினார்.
இதையடுத்து அவையின் மையப்பகுதிக்கு வந்த காங்கிரஸ் எம்.பி.க்கள், 'அம்பேத்கரை அவமதிப்பதை நிறுத்துங்கள்', 'நாட்டை பிளவுபடுத்துவதை நிறுத்துங்கள்', 'பிரதமர் வாய் திறந்து பேச வேண்டும்' என்று கோஷமிட்டனர். 
முன்னதாக, மகாராஷ்டிர மாநிலம், புணே மாவட்டத்தில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற பீமா-கோரேகான் போரின் 200-ஆவது ஆண்டு தினத்தை பல்வேறு தலித் அமைப்புகள் திங்கள்கிழமை வெற்றி தினமாகக் கொண்டாடின. இந்தப் போரில், மஹார் எனப்படும் தலித் பிரிவைச் சேர்ந்தவர்கள் ஆங்கிலேயர்களின் கிழக்கிந்தியப் படையில் வீரர்களாக இடம்பெற்றதாகவும் அவர்கள் அப்போதைய ஆட்சியாளர்களான பேஷ்வாக்களை தோற்கடித்ததாகவும் கூறப்படுகிறது. உயர் ஜாதியினரான பேஷ்வாக்களை வென்றதைக் குறிக்கும் வகையில் தலித் அமைப்புகள் திங்கள்கிழமை கொண்டாட்டத்தில் ஈடுபட்டன.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹிந்து ஏக்தா ஆகடி, சிவராஜ் பிரதிஷ்டான் உள்ளிட்ட ஹிந்து அமைப்புகள் கண்டனப் போராட்டங்களை நடத்தின. இதனால் புணே மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இரு தரப்புக்கும் இடையே மோதல்கள் வெடித்தன. பல்வேறு வாகனங்கள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன. புணே அருகே நடைபெற்ற கல்வீச்சில் ராகுல் படாங்கலே (28) என்ற தலித் இளைஞர் உயிரிழந்தார். 
இந்நிலையில், புணே மாவட்டத்தில் தலித் இளைஞர் உயிரிழப்புக்கும், வன்முறைக்கும் எதிர்ப்பு தெரிவித்து தலித் அமைப்புகள் மும்பையிலும், கோலாப்பூர், பர்பானி, லாத்தூர், அகமதுநகர், ஒளரங்காபாத், ஹிங்கோலி, நாந்தேட், தாணே ஆகிய மாவட்டங்களிலும் செவ்வாய்க்கிழமை போராட்டங்களை நடத்தின. இந்தப் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. மும்பையில் 160-க்கும் மேற்பட்ட பேருந்துகள் அடித்து நொறுக்கப்பட்டன. இது தொடர்பாக 100-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர். இதேபோல் மகாராஷ்டிர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் தலித் அமைப்புகள் நடத்திய போராட்டம் காரணமாக பதற்ற நிலை நீடித்து வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com