முத்தலாக் விவகாரத்தில் காங்கிரஸ் இரட்டை நிலைப்பாடு: அருண் ஜேட்லி குற்றச்சாட்டு

முத்தலாக் தடை மசோதா விவகாரத்தில், நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சி இரட்டை நிலைப்பாட்டை கடைப்பிடிப்பதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி குற்றம்சாட்டினார்.
முத்தலாக் விவகாரத்தில் காங்கிரஸ் இரட்டை நிலைப்பாடு: அருண் ஜேட்லி குற்றச்சாட்டு

முத்தலாக் தடை மசோதா விவகாரத்தில், நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சி இரட்டை நிலைப்பாட்டை கடைப்பிடிப்பதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி குற்றம்சாட்டினார்.
இதுகுறித்து தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற பாஜக ஆட்சிமன்றக் குழு கூட்டத்தில் அவர் பேசியதாவது:
மக்களவையில் முத்தலாக் தடை மசோதாவுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்தது. ஆனால், மாநிலங்களவையில் அந்த மசோதாவுக்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்புத் தெரிவிக்கிறது. அதாவது, நாடாளுமன்ற இரு அவைகளிலும் இரு வேறு நிலைப்பாட்டை காங்கிரஸ் கட்சி கடைப்பிடிக்கிறது.
முத்தலாக் தடை மசோதா மீது விவாதம் நடத்த வேண்டும் என்று மத்திய அரசு விரும்புகிறது. நாடாளுமன்றத்தில் ஜிஎஸ்டி மசோதா ஒருமித்த ஆதரவோடு நிறைவேற்றப்பட்டது போல, முத்தலாக் தடை மசோதாவும் நிறைவேற்றப்பட வேண்டும் என மத்திய அரசு நினைக்கிறது. இதுதொடர்பாக காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்று அருண் ஜேட்லி கூறினார்.
கூட்டத்தில் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அனந்த் குமார் பேசுகையில், 'இதர பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு அரசியலமைப்பு சட்ட ரீதியில் அங்கீகாரம் அளிக்கும் நோக்கில், மக்களவையில் மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றியது. இந்த மசோதா, மாநிலங்களவையில் வந்தபோது, அதில் எதிர்க்கட்சிகள் திருத்தங்களைக் கொண்டு வந்தன. இதனால், அந்த மசோதா, மக்களவையில் மீண்டும் எடுத்துக் கொள்ளப்பட இருக்கிறது' என்றார்.
இதைத் தொடர்ந்து, இதர பிற்படுத்தப்பட்டோர் ஆணைய மசோதா குறித்து பாஜக எம்.பி.க்களுக்கு மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் தாவர் சந்த் கெலாட் விளக்கினார்.
மத்திய சிறுபான்மை விவகாரங்கள் துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி பேசியபோது, ஹஜ் யாத்திரைக்கு ஆண் பாதுகாப்பு இல்லாமல் முஸ்லிம் பெண்கள் செல்லத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருவதாக தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, பாஜக எம்.பி.க்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முஸ்லிம் மதத்திலிருக்கும் சிலரால் பெண்களுக்கு விவாகரத்து அளிக்க முத்தலாக் எனும் நடைமுறை கடைப்பிடிக்கப்படுகிறது. இதை சட்ட ரீதியில் தடை செய்து, அதை மீறுவோருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த மசோதா, மக்களவையில் கடந்த வாரம் நிறைவேற்றப்பட்டது.
காங்கிரஸின் பொய்யான ஆதரவு: இதனிடையே, தில்லியில் நாடாளுமன்றத்துக்கு வெளியே அருண் ஜேட்லி செய்தியாளர்களிடம் பேசியபோது, முத்தலாக் தடை மசோதாவை ஆதரிப்பதாக காங்கிரஸ் கூறுவது சுத்தப் பொய் என்றார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
மக்களவையில் அந்த மசோதாவை காங்கிரஸ் ஆதரிக்கிறது. மாநிலங்களவையில் அதை எதிர்க்கிறது. இதிலிருந்து முத்தலாக் தடை மசோதாவை காங்கிரஸ் மறைமுகமாக எதிர்ப்பது தெளிவாகி விட்டது. அந்த மசோதாவை ஆதரிப்பதாக அக்கட்சி தெரிவிப்பது சுத்தப் பொய். மாநிலங்களவையில் அந்த மசோதாவை நிறைவேற விடாமல் தடுக்க அனைத்து முயற்சிகளிலும் அக்கட்சி ஈடுபட்டுள்ளது.
முஸ்லிம் பெண்களுக்கு எதிரான அநீதிகளுக்கு முடிவுகட்ட, நாடாளுமன்றத்துக்கு இன்று அருமையான சந்தர்ப்பம் கிடைத்தது. அக்கட்சியின் செயல்பாடுகளால், முஸ்லிம் பெண்கள் தொடர்ந்து அநீதியை சந்திக்கப் போகின்றனர்.
எனினும், நாட்டு மக்களில் பெரும்பாலானோரது ஆதரவு மசோதாவுக்கு இருப்பதை புரிந்து கொண்டு, காங்கிரஸும், பிற எதிர்க்கட்சிகளும் அதை ஆதரிக்கும் என மத்திய அரசு நம்புகிறது என்றார் அருண் ஜேட்லி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com