100% சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ஒற்றை இலச்சினை (சிங்கிள் பிராண்ட்) சில்லறை வர்த்தகத்தில், மத்திய அரசிடம் உரிய அனுமதி பெறாமல் 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்க மத்திய அமைச்சரவைக்
100% சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ஒற்றை இலச்சினை (சிங்கிள் பிராண்ட்) சில்லறை வர்த்தகத்தில், மத்திய அரசிடம் உரிய அனுமதி பெறாமல் 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்க மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் புதன்கிழமை ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதன் மூலம், பல பன்னாட்டு நிறுவனங்கள் மத்திய அரசின் அனுமதி பெறாமல் இந்தியாவில் நேரடியாக தங்கள் விற்பனையகங்களைத் திறக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதுதவிர, பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியாவில், வெளிநாட்டு விமான நிறுவனங்கள் 49 சதவீதம் வரை நேரடி முதலீடு செய்யவும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
விதிகள் தளர்வு: தில்லியில் புதன்கிழமை பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றது. இதில் பல்வேறு துறைகளில் அந்நிய நேரடி முதலீட்டு வரம்பையும், அது தொடர்பான விதிகளையும் தளர்த்துவது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
முக்கியமாக ஒற்றை இலச்சினை சில்லறை வர்த்தகம், கட்டுமானத் துறையின் தரகர்கள் சேவைப் பிரிவில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த 100 சதவீத அந்நிய முதலீடும் நேரடி முறையில் அதாவது மத்திய அரசு மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் அனுமதி இல்லாமல் இந்தியாவுக்குள் வர முடியும் என்று விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன. முன்பு 49 சதவீத அந்நிய நேரடி முதலீடு, அரசு அங்கீகாரம் இல்லாமல் அனுமதிக்கப்பட்டிருந்தது. 49 சதவீதத்துக்கு மேல் அதிகரிக்கப்படும் முதலீட்டுக்கு அரசு அனுமதி தேவை.
பன்னாட்டு நிறுவனங்களுக்கு வாய்ப்பு: இதன் மூலம் சர்வதேச அளவில் வீட்டு உபயோகத்துக்கான மரச்சாமான்கள் உள்ளிட்ட பொருள்களை விற்பனை செய்யும் பன்னாட்டு நிறுவனமான ஐகேஇஏ, ஆடைத் தயாரிப்புத் துறையில் பன்னாட்டு அளவில் செயல்படும் எச் அண்ட் எம் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்தியாவில் நேரடியாகத் தடம் பதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இனி, இந்திய வர்த்தகர்கள் பன்னாட்டு நிறுவனங்களின் விற்பனையாளர்களுடன் நேரடியாகப் போட்டியில் ஈடுபட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
முன்னதாக, ஐகேஇஏ, எச் அண்ட் எம் உள்ளிட்ட நிறுவனங்கள், இந்தியாவில் அவர்கள் தொழில் நடத்த உள்நாட்டு மூலதனத்தை 30 சதவீதம் அளவுக்கு பயன்படுத்தினால் போதுமானது என்று விலக்கு அளிக்க கோரியிருந்தனர். அந்தக் கோரிக்கைக்கு ஏற்பவும் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
ஏர் இந்தியாவில் 49 சதவீத அந்நிய நேரடி முதலீடு: ஏர் இந்தியாவில் வெளிநாட்டு விமான நிறுவனங்கள் 49 சதவீதம் அளவுக்கு அந்நிய நேரடி முதலீட்டை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு மத்திய அரசு அல்லது இந்திய ரிசர்வ் வங்கியின் அனுமதியைப் பெற வேண்டும். நஷ்டத்தில் இயங்கி வரும் ஏர் இந்தியாவில் தனியார் முதலீட்டை அனுமதிக்க மத்திய அரசு ஏற்கெனவே முடிவு செய்திருந்தது. இப்போது, இதில் அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும்: இந்த நடவடிக்கைகள் மூலம் இந்தியாவில் தொழில்களில் வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்வதற்கான வழிமுறைகள் எளிதாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நமது நாட்டில் பெருமளவில் அந்நிய நேரடி முதலீடு குவியும். இதனால் நாட்டின் வேலைவாய்ப்பும், வருமானமும் அதிகரிக்கும். இதன் தொடர் விளைவாக நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கட்டுமானத் துறையில்... இது தவிர கட்டுமானத் துறையின் தரகர்கள் சேவைப் பிரிவில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டை நேரடி முறையில் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. அதேபோல, மின் பகிர்மானத் துறையில் அந்நிய நிறுவன முதலீடுகள் மூலமும், பங்குச் சந்தை மூலமும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 100 சதவீதம் நேரடியாகப் பங்கேற்க முடியும். இதற்கு முன்பு 49 சதவீத அந்நிய நேரடி முதலீட்டுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது.
இது தவிர மருத்துவ உபகரணங்கள் தயாரிப்புத் துறை, கணக்குத் தணிக்கை துறை சார்ந்த நிறுவனங்களிலும் அந்நிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு எதிர்ப்பு: சில்லறை வர்த்தகத்தில் அரசு அனுமதியின்றி 100 சதவீத அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்பட்டிருப்பதற்கு அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு (சிஏஐடி) எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
'மத்திய அரசின் இந்த நடவடிக்கை மூலம் பன்னாட்டு நிறுவனங்கள் எளிதாக சில்லறை வர்த்தகத்தில் ஈடுபட அனுமதிக்கப்பட்டுள்ளது. இது தேர்தலின்போது பாஜக அளித்த வாக்குறுதிக்கு எதிரானது. இந்தியாவில் உள்ள சிறு வர்த்தகர்களின் நலனுக்கு எதிராக மத்திய அரசு முடிவெடுத்துள்ளது' என்று சிஏஐடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், மத்திய அரசின் நடவடிக்கைக்கு இந்திய சில்லறை விற்பனையாளர்கள் சங்கம் வரவேற்புத் தெரிவித்துள்ளது. 'வெளிநாட்டு நிறுவனங்களின் வருகை மூலம் இந்தியாவில் வெளிநாட்டு, உள்நாட்டு விற்பனையாளர்களை சேர்த்து கையாள முடியும்' என்று அந்த அமைப்பின் தலைவர் குமார் ராஜகோபாலன் கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com