பொதுவெளியில் கருத்துகளை வெளியிடுவேன்

மத்திய பாஜக அரசில் இடம்பெற்றுள்ள யாரையும் இனி சந்திக்கப் போவதில்லை என்றும், பொதுவெளியில் மட்டுமே தனது கருத்துகளை வெளியிடப் போவதாகவும் அக்கட்சியின் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா
பொதுவெளியில் கருத்துகளை வெளியிடுவேன்

மத்திய பாஜக அரசில் இடம்பெற்றுள்ள யாரையும் இனி சந்திக்கப் போவதில்லை என்றும், பொதுவெளியில் மட்டுமே தனது கருத்துகளை வெளியிடப் போவதாகவும் அக்கட்சியின் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.
மேலும், பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க 13 மாதங்களுக்கு முன்பே நேரம் கேட்டும், அவர் தன்னை சந்திக்கவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.
இதுதொடர்பாக, மத்தியப் பிரதேச மாநிலம், ஜபல்பூரில் செய்தியாளர்களிடம் அவர் புதன்கிழமை கூறியதாவது:
அடல் பிகாரி வாஜ்பாய், அத்வானி ஆகியோரது காலங்களில் இருந்தது போல இப்போது பாஜக இல்லை. அந்த காலங்களில், கட்சியின் சாதாரண தொண்டர் கூட தில்லிக்கு வந்து, எவ்வித முன்னேற்பாடும் இல்லாமல் கட்சித் தலைவர் அத்வானியை சந்திக்க முடிந்தது. ஆனால், இப்போதைய பாஜக தலைவரை, கட்சியின் மூத்த, முக்கிய தலைவர்கள் கூட எளிதில் சந்திக்க முடியாத நிலை உள்ளது. இது, வியப்பளிக்கிறது.
பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக விவாதிப்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க 13 மாதங்களுக்கு முன்பே நேரம் கேட்டிருந்தேன். ஆனால், இதுவரை அவர் நேரம் ஒதுக்கவில்லை. எனவே, மத்திய பாஜக அரசில் உள்ள எவரையும் இனி சந்திக்கப் போவதில்லை. என்ன சொல்ல வேண்டுமோ, அதை பொதுவெளியில் மட்டுமே சொல்வேன்.
எதிர்க்கட்சியாக இருந்தபோது எதிர்த்த கொள்கைகளையெல்லாம், மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு பாஜக ஏற்றுக் கொண்டு விட்டது. நாட்டில் விவசாயிகள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர் என்றார் யஷ்வந்த் சின்ஹா.
கட்சியில் முக்கிய தலைவராக இருந்த அத்வானி இப்போது சாதாரண தொண்டராக பார்க்கப்படுவதாகவும், கட்சி நிகழ்வுகளில் அவர் ஓரங்கட்டப்படுவதாகவும் சின்ஹா குற்றம்சாட்டினார்.
மத்தியப் பிரதேச மாநிலம், நரசிங்பூர் மாவட்டத்தில் விவசாயிகளின் பிரச்னைகளை முன்னிறுத்தி வியாழக்கிழமை போராட்டம் நடைபெறவுள்ளது. இதில், மாநில பாஜக அரசுக்கு எதிராக யஷ்வந்த் சின்ஹா பங்கேற்கவுள்ளார்.
முன்னதாக, பாஜக ஆட்சி நடைபெற்று வரும் மகாராஷ்டிர மாநிலத்திலும் விவசாயிகளின் பிரச்னைகளை முன்வைத்து, அவர் அண்மையில் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com