செய்தியாளர்களை சந்தித்தது ஏன்? உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விளக்கம்

நீதித் துறை மீதான எங்கள் கவலைகளை நாட்டு மக்களிடம் தெரிவிக்கவே செய்தியாளர்களை சந்தித்ததாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர்.
செய்தியாளர்களை சந்தித்தது ஏன்? உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விளக்கம்


புது தில்லி: நீதித் துறை மீதான எங்கள் கவலைகளை நாட்டு மக்களிடம் தெரிவிக்கவே செய்தியாளர்களை சந்தித்ததாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர்.

உச்ச நீதிமன்றத்தைப் பாதுகாக்க நாங்கள் எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வி அடைந்தது. நீதித்துறைக்கு சுதந்திரம் இல்லை என்றால், ஜனநாயகம் நிலைக்காது. ஜனநாயகம் மட்டுமல்ல நீதிமன்றம் சரியாக இல்லை என்றால் நாடும் சரியாக இயங்காது. மீண்டும் மீண்டும் சொல்லிப்பார்த்தோம். நடவடிக்கை எடுக்காதால் பொதுமக்களிடம் கொண்டு செல்ல முடிவெடுத்தோம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நான்கு பேர் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசினர்.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் செல்லமேஸ்வரர், ரஞ்சன் கொகோய், குரியன் ஜோசப், மதன் லோகூர் ஆகிய 4 நீதிபதிகள் இன்று மதியம் 12.15 மணியளவில் தில்லியில் உள்ள உச்ச நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது கூட்டாக செய்தியாளர்களிடம் பேசிய நீதிபதிகள், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா குறித்து குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர். வழக்குகளை ஒதுக்குவது, எந்தெந்த அமர்வில் எந்தெந்த நீதிபதிகள் இடம்பெற வேண்டும் என்பது உள்ளிட்ட அனைத்து முடிவுகளையும் தீபக் மிஸ்ராவே எடுக்கிறார். வழக்குகளை நீதிபதிகளுக்கு ஒதுக்குவதில் பிரச்னைகள் உள்ளன. பிரச்னைகளை தலைமை நீதிபதி மூலம் சரி செய்ய முயன்றது தோல்வியில் முடிந்தது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக கண்டனம் தீர்மானம் கொண்டு வருவது குறித்து நாட்டு மக்கள்தான் முடிவு செய்யவேண்டும். தீபக் மிஸ்ராவை நீக்குவது குறித்து நாட்டு மக்கள்தான் சிந்திக்க வேண்டும் என்று கூறினர்.

மேலும் அவர்கள் பேசுகையில், அரசியல் சாசன வரலாற்றில் இது அசாதாரண நிகழ்வு. உச்ச நீதிமன்ற நிர்வாகம் சரியில்லை.

உச்ச நீதிமன்ற நீதிபதிகளான நாங்கள் 4 பேரும் நீதித் துறையில் இருக்கும் பிரச்னைகள் குறித்த கடிதத்தை சில மாதங்களுக்கு முன்பே தலைமை நீதிபதிக்கு அனுப்பினோம். நீதித்துறையில் இருக்கும் குளறுபடிகள் குறித்து தலைமை நீதிபதியிடம் முறையிட்டும் நீதி கிடைக்கவில்லை என்பதால் மக்களிடம் தெரிவிக்க விரும்பினோம்.

இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத நிகழ்வாக நாங்கள் பேச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக விரும்பத்தகாத நிகழ்வுகள் உச்ச நீதிமன்ற நிர்வாகத்தில் நடந்து கொண்டிருக்கின்றன. நீதித்துறையை சரிசெய்யாவிட்டால் நாட்டில் ஜனநாயகம் சீர்கெட்டுவிடும். எனவே, அசாதாரண சூழ்நிலையில் தான் செய்தியாளர்களைச் சந்திப்பதாக நீதிபதிகள் கூறினர்.

மேலும் அவர்கள் பேசுகையில், நீதித்துறை மீதான எங்கள் கவலையை மக்களுக்குக் கூற விரும்பியதால் செய்தியாளர்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

நீதித்துறையில் சுதந்திரம் இல்லை என்றால் ஜனநாயகம் நிலைக்காது. நீதித்துறையில் சில விதிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை. வழக்குகளை நீதிபதிகளுக்கு ஒதுக்கீடு செய்வதில் பிரச்னைகள் உள்ளன என்று கூறினர்.

மேலும், உச்ச நீதிமன்ற நிர்வாகத்தில் இருக்கும் பிரச்னைகள் குறித்து தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதத்தை செய்தியாளர்களுக்கு வழங்குவதாகவும் கூறியுள்ளனர்.

இந்திய வரலாற்றிலேயே இதுவரை நடந்திராத நிகழ்வாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் செய்தியாளர்களை சந்தித்துள்ளனர்.

இந்த சந்திப்பு குறித்து ஒரு சில நிமிடங்களுக்கு முன்புதான் செய்தியாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், செய்தியாளர் சந்திப்பு குறித்து இன்று காலைதான் முடிவெடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com