தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதத்தில் கூறப்பட்டிருக்கும் அதிரடிப் புகார்கள் என்ன?

தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதத்தில் கூறப்பட்டிருக்கும் அதிரடிப் புகார்கள் என்ன?

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு, நீதிமன்ற நிர்வாகத்தில் இருக்கும் குளறுபடிகள் குறித்து நீதிபதிகள் எழுதிய கடித்தில் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டுள்ளன.


புது தில்லி : உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு, நீதிமன்ற நிர்வாகத்தில் இருக்கும் குளறுபடிகள் குறித்து நீதிபதிகள் எழுதிய கடித்தில் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டுள்ளன.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் செல்லமேஸ்வரர் உட்பட 4 பேரும், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எழுதிய கடிதத்தின் நகல் செய்தியாளர்களுக்கு வழங்கப்பட்டது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 4 பேர் இன்று செய்தியாளர்களை சந்தித்து, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா குறித்து  குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர்.

இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நான்கு பேர் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசியுள்ளனர். அப்போது, இந்த விவகாரம் குறித்து தலைமை நீதிபதிக்கு சில மாதங்களுக்கு முன்பு எழுதிய கடிதத்தையும் அவர்கள் செய்தியாளர்களுக்கு வழங்கினர்.

அந்த கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது, உச்ச நீதிமன்றத்தில் நிர்வாகம் சரியில்லை. இது குறித்து உங்களை நேரில் சந்தித்து முறையிட்டும் பயனில்லை. எனவே இந்த கடிதத்தை எழுதுகிறோம். 

நீதிமன்ற நிர்வாகத்தில் குளறுபடி உள்ளது. அதனை சரி செய்யாவிட்டால் 20 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் தலைமுறை நம்மைப் பார்த்து சிரிக்கும் நிலை ஏற்படும்.

ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தின் மாண்பு அழிந்துவிட்டது. இந்த சமயத்திலாவது தலைமை நீதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் மேலும் உச்ச நீதிமன்றம் தனது மாண்பை இழந்துவிடும் என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் அந்த கடிதத்தில் நீதிபதிகள் கூறியிருப்பதாவது, நீதிபதிகளுக்கு பணி ஒதுக்குவதில் சிக்கல் உள்ளது. வழக்குகளை ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டப்படுகிறது. விதிகளையோ, நடைமுறைகளையோ பின்பற்றாமல் தலைமை நீதிபதி முடிவு எடுக்கிறார். அரசியல் சாசனம் தொடர்பான முக்கிய வழக்குகளை மூத்த நீதிபதிகளுக்கு தர மறுப்பு தெரிவிக்கிறார்.

முக்கிய வழக்குகள் அனுபவமற்ற நீதிபதிகளுக்கே தரப்படுகிறது. தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் என்பதால் முழு விவரத்தையும் எழுதவில்லை என்றும் கடிதத்தில் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

முன்னதாக, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் செல்லமேஸ்வரர், ரஞ்சன் கொகோய், குரியன் ஜோசப், மதன் லோகூர் ஆகிய 4 நீதிபதிகள் இன்று மதியம் 12.15 மணியளவில் தில்லியில் உள்ள உச்ச நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது கூட்டாக செய்தியாளர்களிடம் பேசிய நீதிபதிகள், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா குறித்து குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர். வழக்குகளை ஒதுக்குவது, எந்தெந்த அமர்வில் எந்தெந்த நீதிபதிகள் இடம்பெற வேண்டும் என்பது உள்ளிட்ட அனைத்து முடிவுகளையும் தீபக் மிஸ்ராவே எடுக்கிறார். வழக்குகளை நீதிபதிகளுக்கு ஒதுக்குவதில் பிரச்னைகள் உள்ளன. பிரச்னைகளை தலைமை நீதிபதி மூலம் சரி செய்ய முயன்றது தோல்வியில் முடிந்தது.

செய்தியாளர்களை சந்தித்தது ஏன்? உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விளக்கம்

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக கண்டனம் தீர்மானம் கொண்டு வருவது குறித்து நாட்டு மக்கள்தான் முடிவு செய்யவேண்டும். தீபக் மிஸ்ராவை நீக்குவது குறித்து நாட்டு மக்கள்தான் சிந்திக்க வேண்டும் என்றும் கூறினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com