நீதித்துறை விவகாரத்தில் மத்திய அரசின் நிலை வரவேற்கத்தக்கது: இந்திய பார் கௌன்சில் தலைவர்

நீதித்துறை விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என்று பார் கௌன்சில் தலைவர் மனன் மிஸ்ரா சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.
நீதித்துறை விவகாரத்தில் மத்திய அரசின் நிலை வரவேற்கத்தக்கது: இந்திய பார் கௌன்சில் தலைவர்

உச்ச நீதிமன்றத்தின் நான்கு மூத்த நீதிபதிகளான செலமேஸ்வர், ரஞ்சன் கோகோய், எம்.பி.லோக்குர், குரியன் ஜோசஃப் ஆகியோர் தில்லியில் வெள்ளிக்கிழமை திடீரென்று செய்தியாளர் சந்திப்புக்கு அழைப்பு விடுத்தனர். தலைமை நீதிபதிக்கு அடுத்தபடியாக உள்ள மூத்த நீதிபதியான செலமேஸ்வரின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. சுதந்திர இந்தியாவில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் செய்தியாளர்களைச் சந்திப்பது இதுவே முதல் முறையாகும். 

செய்தியாளர்களிடம் நீதிபதி செலமேஸ்வர் கூறியதாவது:

இந்தச் செய்தியாளர் சந்திப்பானது ஓர் அசாதாரண நிகழ்வாகும். கடந்த சில மாதங்களில் பல்வேறு விரும்பத்தகாத விஷயங்கள் நடைபெற்றுள்ளன. நான் உள்ளிட்ட நான்கு நீதிபதிகளும் இன்று காலையில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவைச் சந்தித்தோம். அப்போது இந்த அமைப்பை (உச்ச நீதிமன்றம்) பாதிக்கக் கூடிய விஷயங்களை அவரிடம் எழுப்பினோம்.

இந்த அமைப்பு பாதுகாக்கப்படா விட்டால் இந்த நாட்டில் ஜனநாயகம் நீடிக்காது. உச்ச நீதிமன்றத்தில் சில விஷயங்கள் ஓர் ஒழுங்கில் இல்லாததால் அவற்றைச் சரிசெய்வதற்கான நடவடிக்கைகளை நீங்கள் உடனடியாக எடுக்க வேண்டும் என்று தலைமை நீதிபதியிடம் நாங்கள் வலியுறுத்தினோம்.

ஆனால் அதை அவர் ஏற்கச் செய்வதற்கான எங்களது முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. தற்போது ஜனநாயகத்துக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்பதிலும் அண்மைக் காலத்தில் பல்வேறு சம்பவங்கள் நடந்துவிட்டன என்பதிலும் நாங்கள் ஒருமித்த கருத்தைக் கொண்டுள்ளோம்.

என்ன பிரச்னைகள் ஏற்பட்டன? என்று கேட்கிறீர்கள். அவற்றில் தலைமை நீதிபதி எங்களுக்கு வழக்குகளை ஒதுக்குவது உள்ளிட்டவையும் அடங்கும். எல்லா முடிவுகளையும் அவரே எடுக்கிறார். உச்ச நீதிமன்றத்தில் ஜனநாயகம் இல்லை; நிர்வாகமும் சரியில்லை என்பது எங்களின் ஒட்டுமொத்த கருத்தாகும்.

எங்களுக்கு இந்த அமைப்புக்கும், நாட்டுக்கும் ஆற்ற வேண்டிய கடமைப் பொறுப்பு உள்ளது. இந்த அமைப்பைக் காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளை தலைமை நீதிபதியை எடுக்க வைப்பதில் எங்கள் முயற்சிகள் தோல்வியடைந்து விட்டன. 

இந்த விதத்தில் செய்தியாளர் சந்திப்பை நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது மிகவும் வேதனையளிக்கிறது. இந்தச் சந்திப்பானது நாட்டின் வரலாற்றிலும், நீதிபரிபாலன அமைப்பிலும் அசாதாரணமான நிகழ்வாகும்.

இவ்விவகாரம் தொடர்பாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி, மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் அன்று இரவே அவரச ஆலோசனையில் ஈடுபட்டனர். இதையடுத்து நீதிபதிகளுக்கு இடையிலான கருத்து வேறுபாட்டில் மத்திய அரசு தலையிடாது என மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துவிட்டார்.

இருப்பினும் ஜனநாயகம் குறித்த நீதிபதிகளின் கருத்து கவனிக்கப்பட வேண்டியதே நீதியை விரும்புவோரின் எதிர்பார்ப்பாக உள்ளது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில், நீதிபதிகளுக்கு இடையிலான கருத்து வேறுபாட்டை சுமூகமாக தீர்ப்பதற்கு 7 பேர் அடங்கிய குழுவை அமைப்பதாக இந்திய பார் கௌன்சில் தெரிவித்துள்ளது.  

இதுகுறித்து இந்திய பார் கௌன்சில் தலைவர் மனன் மிஸ்ரா செய்தியாளர்களிடம் பேசியதாவது:

நீதித்துறையின் இந்த விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என்று அரசியல் கட்சிகளுக்கு பார் கௌன்சில் சார்பாக நான் கோரிக்கை விடுக்கிறேன். நீதித்துறையின் மதிப்பு குலைந்து போக நாங்கள் விரும்பவில்லை. இவ்விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு வரவேற்கத்தக்கது. இவ்விவகாரத்தில் சுமூக முடிவை அடைய நாங்கள் அனைத்து முயற்சிகளையும் செய்ய தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com