கர்நாடகத்தில் காங்கிரஸ் அரசு மீது அதிருப்தி இல்லை: ராகுலை சந்தித்த பின் சித்தராமையா பேட்டி

கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சித் தலைமையிலான அரசாங்கத்தின் அதிருப்தி இல்லை என்று ராகுலை சனிக்கிழமை சந்தித்த பின்னர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
கர்நாடகத்தில் காங்கிரஸ் அரசு மீது அதிருப்தி இல்லை: ராகுலை சந்தித்த பின் சித்தராமையா பேட்டி

கர்நாடக முதல்வர் சித்தராமையா ஹிந்துக்களுக்கு எதிராக செயல்படுவதாக அங்குள்ள பாஜக தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.

இதனிடையே அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவும் இதே கருத்தை முன்வைத்தார். இவ்விகாரம் தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையா, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோருக்கு இடையில் ட்விட்டரில் காரசார விவாதங்கள் அரங்கேறின.

கர்நாடகத்தில் நடைபெற்று வரும் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் மக்களுக்கு எந்தவித அதிருப்தியும் இல்லாமல் நல்லரசு நிலவி வருவதால் பாஜக இதுபோன்ற குற்றச்சாட்டுகளை எழுப்புகிறது. நான் ஒரு ஹிந்து, மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ளும் அத்தனை பேரும் ஹிந்து. அதுவே ஹிந்து தர்மத்தின் அடிப்படை. ஹிந்துத்துவத்தின் பெயரைக் கொண்டு மனிதாபிமானமற்ற முறையில் நடந்துகொள்வது பயங்கரவாதத்துக்கு சமம் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா பதிலடி அளித்தார்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசிக்க கர்நாடக முதல்வர் சித்தராமையா, மாநில காங்கிரஸ் முக்கிய தலைவர்களான மல்லிகார்ஜுன கார்கே, வீரப்ப மொய்லி, கே.ஹெச்.முனியப்பா, ஆஸ்கர் ஃபெர்ணான்டஸ், கே.சி.வேணுகோபால் ஆகியோர் உடனடியாக சந்திக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் உத்தரவிட்டார்.

இதையடுத்து தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் நடந்த கூட்டத்தில் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர்களுடன், காங்கிரஸ் தலைவர் ராகுல் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கர்நாடக முதல்வர் சித்தராமையா பேசியதாவது:

கர்நாடகத்தில் எனது தலைமையிலான காங்கிரஸ் அரசின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்த ராகுல், மகிழ்ச்சி தெரிவித்தார். அதுபோல கர்நாடக மக்களிடமும் எங்கள் ஆட்சியின் மீது எந்த குறையும் கிடையாது.

எங்கள் ஆட்சி கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி விட்டது. எனவே அடுத்து வரும் தேர்தலிலும் மகத்தான வெற்றிபெற்று ஆட்சியை தக்க வைப்போம் என்பதில் சந்தேகம் கிடையாது.

இங்கு குறை கூறுவதற்கு பாஜக-வுக்கு எந்த முகாந்திரமும் கிடையாது. எனவேதான் ஹிந்து பிரச்னையை ஏற்படுத்துகின்றனர். ஹிந்துத்துவத்தின் பெயரால் தீமையை பரப்பும் அனைவரும் பயங்கரவாதிகளுக்கு சமம். இதில் என்னுடைய கருத்தில் இருந்து மாறப்போவதில்லை என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com