ஆர்டிஐ மனுக்களில் தாமதம்: பிரதமர் அலுவலகம் விளக்கமளிக்க மத்திய தகவல் ஆணையர் உத்தரவு

ஆர்டிஐ மனுக்களை, சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளுக்கு அனுப்பி வைப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் தொடர்பாக விளக்கமளிக்குமாறு, பிரதமர் அலுவலகத்துக்கு மத்திய தகவல் ஆணையர்

ஆர்டிஐ மனுக்களை, சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளுக்கு அனுப்பி வைப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் தொடர்பாக விளக்கமளிக்குமாறு, பிரதமர் அலுவலகத்துக்கு மத்திய தகவல் ஆணையர் ஆர்.கே.மாத்தூர் உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக, தகவல் ஆணையர்கள் நியமனம், பிரதமரின் பயணங்களுக்கான செலவு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பான விவரங்களைக் கேட்டு, கடற்படை முன்னாள் அதிகாரியான லோகேஷ் பத்ரா என்பவர், பிரதமர் அலுவலகத்தில் 4 மனுக்கள் தாக்கல் செய்திருந்தார். 
ஆனால், அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளுக்கு அனுப்பி வைப்பதில் பிரதமர் அலுவலகம் தாமதம் காட்டியதாக தெரிகிறது.
ஆர்டிஐ சட்டத்தின்படி, ஒரு அரசு அமைப்புக்கு வரும் ஆர்டிஐ மனு, மற்றொரு அரசுத் துறையின் செயல்பாட்டுக்கு தொடர்புடையதாக இருக்கும் பட்சத்தில், அதனை 5 நாள்களுக்குள் அந்த துறைக்கு அனுப்பிவைக்க வேண்டும்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மத்திய தகவல் ஆணையத்தில் லோகேஷ் பத்ரா புகார் மனு அளித்தார். அதில், தாம் கோரிய தகவல்களை அளிப்பதில், பிரதமர் அலுவலகம் நீண்ட தாமதம் காட்டி வருவதாகவும், கடந்த காலங்களிலும் தமக்கு இதுபோன்ற அனுபவங்கள் ஏற்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த மனு மீது மத்திய தகவல் ஆணையர் ஆர்.கே.மாத்தூர் முன் வெள்ளிக்கிழமை விசாரணை நடைபெற்றது. அப்போது, ஆர்டிஐ மனுக்களை, சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி வைப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து ஒரு மாதத்துக்குள் எழுத்துப்பூர்வமாக விளக்கமளிக்கும்படி பிரதமர் அலுவலகத்தின் தகவல் அதிகாரிக்கு ஆர்.கே.மாத்தூர் உத்தரவிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com