உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு எதிராக 4 நீதிபதிகள் போர்க்கொடி

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை எதிர்த்து நான்கு மூத்த நீதிபதிகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக தில்லியில் செய்தியாளர்களுக்கு வெள்ளிக்கிழமை பேட்டி அளித்த மூத்த நீதிபதிகள்  குரியன் ஜோசஃப், செலமேஸ்வர், ரஞ்சன் கோகோய், எம்.பி.லோக்குர்.
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக தில்லியில் செய்தியாளர்களுக்கு வெள்ளிக்கிழமை பேட்டி அளித்த மூத்த நீதிபதிகள்  குரியன் ஜோசஃப், செலமேஸ்வர், ரஞ்சன் கோகோய், எம்.பி.லோக்குர்.

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை எதிர்த்து நான்கு மூத்த நீதிபதிகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். பல்வேறு பிரச்னைகளைக் குறிப்பிட்டுள்ள அவர்கள், இந்திய ஜனநாயகத்துக்கு இதனால் பாதிப்பு வரலாம் என்றும் எச்சரித்துள்ளனர்.
உச்ச நீதிமன்றத்தின் நான்கு மூத்த நீதிபதிகளான செலமேஸ்வர், ரஞ்சன் கோகோய், எம்.பி.லோக்குர், குரியன் ஜோசஃப் ஆகியோர் தில்லியில் வெள்ளிக்கிழமை திடீரென்று செய்தியாளர் சந்திப்புக்கு அழைப்பு விடுத்தனர். தலைமை நீதிபதிக்கு அடுத்தபடியாக உள்ள மூத்த நீதிபதியான செலமேஸ்வரின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. சுதந்திர இந்தியாவில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் செய்தியாளர்களைச் சந்திப்பது இதுவே முதல் முறையாகும். செய்தியாளர்களிடம் நீதிபதி செலமேஸ்வர் கூறியதாவது:
இந்தச் செய்தியாளர் சந்திப்பானது ஓர் அசாதாரண நிகழ்வாகும். கடந்த சில மாதங்களில் பல்வேறு விரும்பத்தகாத விஷயங்கள் நடைபெற்றுள்ளன.
நான் உள்ளிட்ட நான்கு நீதிபதிகளும் இன்று காலையில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவைச் சந்தித்தோம். அப்போது இந்த அமைப்பை (உச்ச நீதிமன்றம்) பாதிக்கக் கூடிய விஷயங்களை அவரிடம் எழுப்பினோம். இந்த அமைப்பு பாதுகாக்கப்படா விட்டால் இந்த நாட்டில் ஜனநாயகம் நீடிக்காது.
உச்ச நீதிமன்றத்தில் சில விஷயங்கள் ஓர் ஒழுங்கில் இல்லாததால் அவற்றைச் சரிசெய்வதற்கான நடவடிக்கைகளை நீங்கள் உடனடியாக எடுக்க வேண்டும் என்று தலைமை நீதிபதியிடம் நாங்கள் வலியுறுத்தினோம். ஆனால் அதை அவர் ஏற்கச் செய்வதற்கான எங்களது முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.
தற்போது ஜனநாயகத்துக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்பதிலும் அண்மைக் காலத்தில் பல்வேறு சம்பவங்கள் நடந்துவிட்டன என்பதிலும் நாங்கள் ஒருமித்த கருத்தைக் கொண்டுள்ளோம். என்ன பிரச்னைகள் ஏற்பட்டன? என்று கேட்கிறீர்கள். அவற்றில் தலைமை நீதிபதி எங்களுக்கு வழக்குகளை ஒதுக்குவது உள்ளிட்டவையும் அடங்கும். எல்லா முடிவுகளையும் அவரே எடுக்கிறார். உச்ச நீதிமன்றத்தில் ஜனநாயகம் இல்லை; நிர்வாகமும் சரியில்லை என்பது எங்களின் ஒட்டுமொத்த கருத்தாகும் என்றார் செலமேஸ்வர்.
குஜராத்தில் நடைபெற்ற சொராபுதீன் என்கவுன்ட்டர் தொடர்பான வழக்கை விசாரித்து வந்த சிறப்பு சிபிஐ நீதிபதி பி.ஹெச்.லோயாவின் மர்ம மரணம் குறித்த விவகாரத்தை உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு ஏற்றுள்ள நிலையில், நீதிபதி செலமேஸ்வரின் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது. அவர் மேலும் கூறியதாவது:
எங்களுக்கு இந்த அமைப்புக்கும், நாட்டுக்கும் ஆற்ற வேண்டிய கடமைப் பொறுப்பு உள்ளது. இந்த அமைப்பைக் காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளை தலைமை நீதிபதியை எடுக்க வைப்பதில் எங்கள் முயற்சிகள் தோல்வியடைந்து விட்டன. 
இந்த விதத்தில் செய்தியாளர் சந்திப்பை நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது மிகவும் வேதனையளிக்கிறது. இந்தச் சந்திப்பானது நாட்டின் வரலாற்றிலும், நீதிபரிபாலன அமைப்பிலும் அசாதாரணமான நிகழ்வாகும்.
இச்செய்தியாளர் சந்திப்புக்கு நாங்கள் மகிழ்ச்சியோடு ஏற்பாடு செய்யவில்லை என்றார்.
மேலும், நான்கு நீதிபதிகளும் தலைமை நீதிபதிக்கு இரு மாதங்களுக்கு முன் எழுதிய கடிதமும் செய்தியாளர்களுக்கு வழங்கப்பட்டது. அதில் 'தலைமை நீதிபதி என்பவர் சம அதிகாரம் படைத்த நீதிபதிகளில் முதலாமவர் என்பதும் அவர் மற்ற நீதிபதிகளை விட மேம்பட்டவரும் அல்ல; குறைந்தவரும் அல்ல என்பதும் இந்த நாட்டின் சட்ட அமைப்பில் முடிவு செய்யப்பட்டு விட்ட ஒன்றாகும். இந்தத் தத்துவத்தை மீறும் வகையில் சில நிகழ்வுகள் அண்மைக் காலமாக நடந்து வருகின்றன' என்று கூறப்பட்டுள்ளது.
அப்போது நீதிபதிகளிடம் 'இவ்வாறு கருத்து தெரிவிப்பதன் மூலம் நீங்கள் விதிமுறைகளைப் பின்பற்றாமல் செயல்படுகிறீர்களா?' என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு நீதிபதி ரஞ்சன் கோகோய் பதிலளிக்கையில் 'நாங்கள் யாரும் விதிகளை மீறிச் செயல்படவில்லை. நாட்டுக்கு நாங்கள் பட்டுள்ள கடனைச் செலுத்துவதையே தற்போது செய்கிறோம்' என்றார். தற்போதைய தலைமை நீதிபதியான தீபக் மிஸ்ராவைத் தொடர்ந்து அந்தப் பதவிக்கு வரும் அக்டோபர் மாதம் பொறுப்பேற்க உள்ளவர் ரஞ்சன் கோகோய் ஆவார்.
'தலைமை நீதிபதியை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா?' என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு நீதிபதி செலமேஸ்வர் பதிலளிக்கையில் 'அதை இந்த தேசம் முடிவு செய்யட்டும்' என்று தெரிவித்தார்.
முன்னதாக, நீதிபதிகள் நியமனம் தொடர்பான நடைமுறைகளை இறுதிசெய்வது தொடர்பாக ஆ.பி.லூத்ரா என்ற வழக்குரைஞர் மத்திய அரசுக்கு எதிராகத் தொடர்ந்த வழக்கை நான்கு நீதிபதிகளும் தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதத்தில் சுட்டிக் காட்டியிருந்தனர். அந்த வழக்கை விசாரிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்ட விவகாரமே நீதிபதிகளின் அதிருப்திக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.
மேலும், சிபிஐ சிறப்பு நீதிபதி லோயாவின் மர்ம மரணம் தொடர்பான வழக்கை விசாரிக்கும் பொறுப்பு, மூத்த நீதிபதிகளில் 10ஆம் இடத்தில் இருக்கும் நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வுக்கு ஒப்படைக்கப்பட்டதும் செலமேஸ்வர் உள்ளிட்ட 4 நீதிபதிகளின் அதிருப்திக்குக் காரணமாகத் தெரிகிறது.
நீதிபதிகள் எழுப்பிய பிரச்னைகள் மிக முக்கியமானவை
'உச்ச நீதிமன்றம் பாதுகாக்கப்படா விட்டால் நாட்டில் ஜனநாயகம் நீடிக்காது என்று நீதிபதி செலமேஸ்வர் கூறியுள்ள கருத்து மிக மிக முக்கியமானது. அதைக் கவனத்துடன் பரிசீலிக்க வேண்டும். சொராபுதீன் என்கவுன்ட்டர் வழக்கை விசாரித்த நீதிபதி லோயாவின் விவகாரம் குறித்தும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். நீதிபதி லோயாவின் மர்ம மரணம் குறித்து உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும்.
நீதி என்ற சிந்தனையை விரும்பும் அனைத்துக் குடிமக்களும், உச்ச நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளவர்களும் இந்த விவகாரத்தை கவனித்து வருகின்றனர். இதைத் தீர்க்க வேண்டியது முக்கியம்' என்றார் ராகுல்.
பிரச்னையில் மத்திய அரசு தலையிடாது
'உச்ச நீதிமன்றத்தின் நான்கு நீதிபதிகள் எழுப்பியுள்ள பிரச்னைகள் நீதித்துறையின் உள்விவகாரம். அதில் மத்திய அரசு தலையிடாது' என்று மத்திய சட்டத்துறை இணையமைச்சர் பி.பி.சௌதரி தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில் 'இந்திய நீதித்துறை உலக அளவில் புகழ்பெற்றது; சுதந்திரமானது. அது இப்பிரச்னையை தானே தீர்த்துக் கொள்ளும். அரசு இந்த விவகாரத்தில் அரசு தலையிடாது' என்றார்.
இந்த விவகாரம் குறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில் 'நீதிபதிகள் எழுப்பியுள்ள பிரச்னைகளில் அரசுக்கு எந்த சம்பந்தமும் இல்லை. நீதித்துறையின் உள்விவகாரமான இதில் அரசு தலையிடாது. எனினும், உச்ச இந்த விவகாரத்தால் நீதித்துறை மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. எனவே , இந்தப் பிரச்னையை உச்ச நீதிமன்றம் விரைவில் தீர்த்துக் கொள்ள வேண்டும்' என்று தெரிவித்தன.
'செய்தியாளர் சந்திப்பை தவிர்த்திருக்க வேண்டும்'
மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் வேணுகோபால் கூறுகையில் 'நீதிபதிகளின் செய்தியாளர் சந்திப்பு தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். நீதித்துறையில் ஏற்பட்டுள்ள பிளவை முடிவுக்குக் கொண்டுவரவும், எதிர்காலத்தில் நல்லிணக்கமும் பரஸ்பர புரிதலும் நிலவுவதையும் உறுதிப்படுத்த நீதிபதிகள் தற்போது புத்திசாதுர்யத்துடன் செயலாற்ற வேண்டும். இந்த விவகாரத்தைக் கையாள்வதில் தலைமை நீதிபதி உள்ளிட்ட அனைத்து நீதிபதிகளும் வழக்கத்தைவிட சிறப்பாகச் செயல்படுவார்கள் என்று நம்புகிறேன்' என்று தெரிவித்தார். 
எனினும், தலைமை நீதிபதியுடனும், மற்ற சிலருடனும் தாம் நடத்திய சந்திப்பு தொடர்பான விவரங்களை அவர் வெளியிடவில்லை. 'ஊடகங்களிடம் பேச மாட்டேன் என்று நான் நீதிபதிகளிடம் வாக்குறுதி அளித்துள்ளேன்' என்று வேணுகோபால் குறிப்பிட்டார்.
நீதித்துறைக்கு பாதிப்பு
உச்ச நீதிமன்றம் தொடர்புடைய விவகாரங்களை நீதிபதிகள் பொதுவெளியில் பேசியதைக் கண்டு நான் மிகுந்த வேதனையடைந்தேன். இச்செயல் நீதித்துறைக்கு பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. அவர்களின் பிரச்னைகளை நியாயப்படுத்தலாம். ஆனால், ஊடகங்களிடம் சென்று அவர்கள் தீர்வைத் தேடுவது தவறானது.
என்.சந்தோஷ் ஹெக்டே
உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி

துரதிருஷ்டவசமானது
முன்னெப்போதும் இல்லாத வகையில் உச்ச நீதிமன்றத்தின் பிரச்னைகள் குறித்து நீதிபதிகள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளது துரதிருஷ்டவசமானது; இது வேதனை அளிக்கிறது. இந்த விவகாரத்தை நீதிபதிகள் தங்களுக்குள்ளேயே விவாதித்து தீர்த்துக் கொண்டிருக்க வேண்டும்.
கே.ஜி.பாலகிருஷ்ணன்
உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி

ஜனநாயகத்துக்கு ஆபத்து
உச்ச நீதிமன்றத்தில் நடக்கும் நிகழ்வுகளை நீதிபதிகள் பொதுவெளிக்குக் கொண்டுவரும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது இந்திய வரலாற்றில் சோகமான தினமாகும். நீதிபதிகள் கூறியதில் தவறு காண்பதற்குப் பதிலாக அவர்கள் எழுப்பியுள்ள பிரச்னைகளைத் தீர்க்க கூட்டு முயற்சி எடுக்கப்பட வேண்டும்.
அஸ்வினிகுமார்
முன்னாள் மத்திய சட்ட அமைச்சர்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com