கூடுதல் செலவுக்காக ரூ.6,522 கோடி நிதி ஒதுக்கீடு: பேரவையில் மசோதா நிறைவேற்றம்

அரசுத் துறைகளுக்கு கூடுதல் செலவுக்காகத் தேவைப்படும் ரூ.6,522.03 கோடி நிதியை ஒதுக்க வகை செய்யும் சட்ட மசோதா பேரவையில் வெள்ளிக்கிழமை நிறைவேறியது
கூடுதல் செலவுக்காக ரூ.6,522 கோடி நிதி ஒதுக்கீடு: பேரவையில் மசோதா நிறைவேற்றம்

அரசுத் துறைகளுக்கு கூடுதல் செலவுக்காகத் தேவைப்படும் ரூ.6,522.03 கோடி நிதியை ஒதுக்க வகை செய்யும் சட்ட மசோதா பேரவையில் வெள்ளிக்கிழமை நிறைவேறியது. இம்மசோதாவை வெள்ளிக்கிழமை தாக்கல் செய்து, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியது:
கடந்த ஆண்டு மார்ச் 16-ஆம் தேதியன்று நிகழ் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதன்பிறகு, பல்வேறு புதுப் பணிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டது. அதற்கு பேரவையின் ஒப்புதலைப் பெற வேண்டியுள்ளது. அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கான ஓய்வுகாலப் பலன்கள், நிலுவைகள் உள்ளிட்ட தேவைகளுக்காக போக்குவரத்துக் கழகங்களுக்கு முன்பணமாக ரூ.2,519.25 கோடியை அரசு அனுமதித்துள்ளது.
அனைவருக்கும் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ், 8 ஆயிரத்து 272 குடியிருப்புகளையும், 1.57 லட்சம் தனி வீடுகளையும் கட்டுவதற்காக, ரூ.588.12 கோடியை அரசு கூடுதலாக அனுமதித்துள்ளது. 
இந்தத் தொகையில் ரூ.307.46 கோடியானது, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் மானியக் கோரிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகையானது மானியத்தில் ஏற்படும் மீதத்தில் இருந்து மறுநிதி ஒதுக்கத்தின் மூலமாகச் செலவிடப்படும்.
மத்திய அரசின் பிரதம மந்திரி கிரிஷி சின்சாய் யோஜனா திட்த்தின் கீழ், நுண்ணீர்ப் பாசனத் திட்டத்தைச் செயல்படுத்த ரூ.268.07 கோடி கூடுதலாக அரசு அனுமதித்துள்ளது. வேளாண்மைத் துறையின் மானியக் கோரிக்கையில் நிதி ஒதுக்கத்தின் அடையாளமாக ரூ.1,000 சேர்க்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகை மானியத்தில் ஏற்படும் மீதத்தில் இருந்து மறுநிதி ஒதுக்கத்தின் மூலம் செலவிடப்படும்.
மீனவர்களின் சாதாரணப் படகுகளை மீன்பிடிப் படகுகளாக மாற்றி இயக்க, ரூ.286 கோடியை அரசு அனுமதித்துள்ளது. இதில், துறையின் மானியக் கோரிக்கையில் ரூ.19.80 கோடியும், மீதத் தொகை மானியத்தில் ஏற்படும் மீதத்தில் மறுநிதி ஒதுக்கத்தின் மூலம் செலவிடப்படும்.
தேசிய வேளாண் காப்புறுதித் திட்டத்தின் கீழ் இழப்பீட்டுத் தொகை வழங்க, மாநில அரசின் பங்கான ரூ.177.86 கோடியை அரசு அனுமதித்துள்ளது. துறையின் மானியக் கோரிக்கையில் ஆயிரம் ரூபாயும், மீதமுள்ள தொகை மானியத்தில் ஏற்படும் மீதத்தில் மறுநிதி ஒதுக்கத்தின் மூலமும் செலவிடப்படும்.
நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறப் பகுதிகளில் வறட்சி நிவாரண நடவடிக்கையாக, சீரான முறையில் குடிநீர் வழங்குவதற்கான பணிகளை மேற்கொள்ள ரூ.120 கோடியை வழங்க அரசு அனுமதித்துள்ளது. இத்துடன் மாநிலப் பேரிடர் நிவாரண நிதியத்துக்கு ரூ.1,799.75 கோடியும் தேவைப்படுகிறது. எனவே, இந்த நிதிகள் இயற்கைச் சீற்றங்கள் குறித்த துயர் தணிப்பு என்ற பிரிவின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளது.
சென்னை பெருநகர மாநகராட்சி, கோவை, சேலம் மாநகராட்சிகளுக்கு வட்டியில்லாத வழிவகை முன்பணமாக ரூ.793.81 கோடியை அரசு அனுமதித்துள்ளது. இத்தொகை துறையின் மானியக் கோரிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது. மாநில, முக்கியச் சாலைகளை குறித்த காலத்தில் பராமரிப்புச் செய்வதற்காக கூடுதலாக ரூ.300 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது. 
புறவழிச் சாலைகள், வட்டச்சாலை, ஆறு வழிப்பாதைகள் அமைப்பதற்காக நிலம் கையப்படுத்தும் பணிகளுக்காக அரசு ரூ.594.58 கோடிக்கு நிர்வாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மீதத் தொகை மானியத்தில் ஏற்படும் மீதத்தில் இருந்து மறுநிதி ஒதுக்கத்தின் மூலம் செலவிடப்படும்.
அரியலூர் சிமெண்ட் அலகின் விரிவாக்கத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஏதுவாக, டான்செம் நிறுவனத்துக்கு வழிவகை முன்பணமாக ரூ.300 கோடியை அனுமதித்துள்ளது. இதற்கான அடையாள நிதி ஒதுக்கமாக ஆயிரம் ரூபாய் சேர்க்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகை மானியத்தில் ஏற்படும் மீதத்தில் இருந்து மறுநிதி ஒதுக்கத்தின் மூலம் செலவிடப்படும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com