ஜிஎஸ்டி இணையவழி ரசீது முறை: 'சரக்குப் போக்குவரத்து எளிதாகும்'

ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்துக்கு சரக்குகளை எடுத்துச் செல்வதற்கு, அடுத்த மாதம் 1-ஆம் தேதி முதல் இணையவழி ரசீது முறை (இ-வே பில்) கட்டாயமாக்கப்படவுள்ள நிலையில்,

ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்துக்கு சரக்குகளை எடுத்துச் செல்வதற்கு, அடுத்த மாதம் 1-ஆம் தேதி முதல் இணையவழி ரசீது முறை (இ-வே பில்) கட்டாயமாக்கப்படவுள்ள நிலையில், இதன் மூலம் சரக்குப் போக்குவரத்து எளிதாகும் என்று சரக்கு சேவை வரி தொழில்நுட்ப அமைப்பு (ஜிஎஸ்டிஎன்) தெரிவித்துள்ளது.
ரூ.50 ஆயிரத்துக்கு அதிகமான மதிப்புள்ள சரக்குகளை, ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்துக்கு கொண்டு செல்லும்போது, 'இ-வே பில்' இணையதளத்தில் பதிவு செய்து, ரசீது பெற வேண்டும். இந்த முறையானது, அடுத்த மாதம் 1-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் கட்டாயமாக்கப்படவுள்ளது. எனினும், 10 கிமீ தொலைவுக்கு குறைவான சரக்குப் போக்குவரத்துக்கு இணையவழி ரசீது பெற வேண்டிய தேவையில்லை.
இதுதொடர்பாக, சரக்கு சேவை வரி தொழில்நுட்ப அமைப்பின் தலைமைச் செயலர் பிரகாஷ் குமார், தில்லியில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
இணையவழி ரசீது முறையால், மாநிலங்களுக்கு இடையேயான சரக்குப் போக்குவரத்து எளிதாகும். சரக்குகளை எடுத்துச் செல்வோருக்கு, இணையவழி ரசீது மட்டுமே போதுமானது. வேறெந்த அனுமதி சீட்டுகளும் தேவையில்லை.
கர்நாடகம், ராஜஸ்தான், உத்தரகண்ட் மற்றும் கேரளம் ஆகிய 4 மாநிலங்களில் இணையவழி ரசீது முறை ஏற்கெனவே அமல்படுத்தப்பட்டுள்ளது. இம்மாநிலங்களில் தினமும் சுமார் 1.4 லட்சம் இணையவழி ரசீதுகள் பெறப்படுகின்றன. 'இ-வே பில்' இணையதளத்தில் தங்களுடைய ஜிஎஸ்டி எண்ணை பதிவு செய்து, இணையவழி ரசீதை உருவாக்க முடியும். ஜிஎஸ்டி எண் இல்லாதவர்கள், தங்களது நிரந்தர கணக்கு எண் (பான்) அல்லது ஆதார் எண்ணை பதிவு செய்து, இணையவழி ரசீதை உருவாக்கலாம்.
இந்த முறையை மேலும் மேம்படுத்துவது தொடர்பாக அனைத்து தரப்பினரிடமும் ஆலோசனைகளை கேட்டுள்ளோம் என்றார் பிரகாஷ் குமார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com