பிகார் முதல்வர் நிதீஷ் குமாரின் கார் அணிவகுப்பு மீது கற்கள் வீச்சு

பிகார் முதல்வர் நிதீஷ் குமாரின் கார் அணிவகுப்பு மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் அதிர்ஷ்டவசமாக அவர் காயமின்றி தப்பினார்.

பிகார் முதல்வர் நிதீஷ் குமாரின் கார் அணிவகுப்பு மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் அதிர்ஷ்டவசமாக அவர் காயமின்றி தப்பினார்.
பிகார் மாநிலம் முழுவதும் வளர்ச்சி யாத்திரை எனும் பெயரில் நிதீஷ் குமார் யாத்திரை மேற்கொண்டு உள்ளார். பக்ஸர் அருகே உள்ள தும்ராவ்ன் பகுதிக்கு நிதீஷ் குமார் வெள்ளிக்கிழமை சென்றார். அப்போது அவரது கார் அணிவகுப்பு மீது சிலர் கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர்.
இதில் நிதீஷ் குமாரோ, அவருடன் வந்த அதிகாரிகளோ காயமடையவில்லை.
இதையடுத்து, தும்ராவ்னில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, ரூ.272 கோடி மதிப்புடைய 168 திட்டங்களை நிதீஷ் குமார் தொடங்கி வைத்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
மாநில வளர்ச்சியில் நான் கொண்டுள்ள உறுதியைக் கண்டு சிலர் கலக்கமடைந்துள்ளனர். அவர்கள் மக்களை தவறாக வழிநடத்தவும், மிரட்டவும் முயற்சிக்கின்றனர். ஆனால், இதைக் கண்டு மக்கள் யாரும் கவலைப்படக் கூடாது.
மாநிலத் தலைநகரில் இருந்து கொண்டு, அரசை நடத்துவது எனது நோக்கம் இல்லை. மக்களின் உண்மையான நிலையையும், சாலைகள், குடிநீர் உள்ளிட்டவை தொடர்பான திட்டங்கள் அமல்படுத்தப்படுவது குறித்தும் நான் ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. குறிப்பாக, மாநிலத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் இதற்காக செல்ல வேண்டியிருக்கிறது. எனது திட்டத்தை யாரும் குறைகூறும்பட்சத்தில், அவர்களுக்கு யதார்த்த நிலேயே பதில் கூறும்; அதனால் எனது திட்டத்துக்கு பாதிப்பு ஏற்படாது.
இந்தக் கூட்டத்துக்கு பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள போலீஸாரிடம், யாரேனும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டால் அதைக் கண்டு கவலைப்பட வேண்டாம் என்று நான் கேட்டுக் கொண்டுள்ளேன் என்று நிதீஷ் குமார் கூறினார்.
அவரது கார் அணிவகுப்பு மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தியவர்கள் யார் எனத் தெரியவில்லை. இதுகுறித்து நிதீஷ் குமாருடன் காரில் சென்ற மூத்த அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கல்வீச்சு தாக்குதல் சம்பவத்தால், முதல்வரின் பயணத்துக்கு எந்தப் பாதிப்பும் இல்லை' என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com