மகாராஷ்டிரத்தில் சட்ட விரோத பதாகைகளை அகற்ற பிப்.23 வரை அவகாசம்: மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவு

மகாராஷ்டிர மாநிலத்தில் சட்ட விரோத விளம்பரப் பதாகைகள், விளம்பரப் பலகைகள், பேனர்கள், சுவரொட்டிகள் ஆகியவற்றை அகற்றுவதற்கு வரும் பிப்ரவரி 23-ஆம் தேதி வரை அவகாசம் அளித்து மும்பை

மகாராஷ்டிர மாநிலத்தில் சட்ட விரோத விளம்பரப் பதாகைகள், விளம்பரப் பலகைகள், பேனர்கள், சுவரொட்டிகள் ஆகியவற்றை அகற்றுவதற்கு வரும் பிப்ரவரி 23-ஆம் தேதி வரை அவகாசம் அளித்து மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் ஆங்காங்கே சட்ட விரோதமாக வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகளை, 2018-ஆம் ஆண்டு ஜனவரிக்குள் அகற்ற வேண்டும் என்று மும்பை உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டிருந்தது. அதைத் தொடர்ந்து, மாநில அரசின் கோரிக்கையை ஏற்று, சட்ட விரோத விளம்பரப் பலகைகளை அகற்றுவதற்கான அவகாசத்தை பிப்ரவரி மாதம் 23-ஆம் தேதி வரை நீதிமன்றம் நீட்டித்துள்ளது.
இதுதொடர்பான வழக்கு மும்பை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் அபய் ஓகா, ஏ.ஏ.சையது ஆகியோரைக் கொண்ட அமர்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநிலத்தில் சட்ட விரோத விளம்பரப் பலகைகளை அகற்றுவதற்காக, மாநகராட்சி மற்றும் நகராட்சி அதிகாரிகளுக்கு 21 உத்தரவுகளை நீதிபதிகள் பிறப்பித்தனர். அதைத் தொடர்ந்து நீதிபதிகள் கூறியதாவது:
விளம்பரப் பலகைகளை அகற்றும் நகராட்சிக் குழுவினருடன் காவலர்கள் உடனிருக்க வேண்டும். சட்ட விரோத விளம்பரப் பலகைகளை வைப்பவர்களுக்கு எதிராகக் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். மாநிலம் முழுவதும் சட்ட விரோத விளம்பரப் பலகைகள் இல்லாமல் செய்வது, அரசுக்கு சிரமமான பணியாக இருக்காது. ஆனால், அதற்கு உண்மையான முயற்சியை மாநில அரசு முன்னெடுக்கவில்லை. எனவே, கடைசி வாய்ப்பாக, மாநில அரசின் சம்பந்தப்பட்ட அனைத்து துறையினருக்கும் பிப்ரவரி மாதம் 23-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்படுகிறது.
மேலும், விளம்பரப் பலகைகளை அகற்றும் பணிகளை மேற்பார்வையிடுவதற்கு நகர்ப்புற மேம்பாட்டுத் துறையில் இருந்து இரு அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும்.
சரியான முறையில் நடவடிக்கை எடுக்கப்படாவிடில், சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com