அமலாக்கத் துறையின் சோதனை கேலிக்கூத்தானது: ப.சிதம்பரம்

கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்டது கேலிக்கூத்தானது என்றும், அமலாக்கத் துறையினர் எதையும் கண்டறியவில்லை என்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்
அமலாக்கத் துறையின் சோதனை கேலிக்கூத்தானது: ப.சிதம்பரம்

கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்டது கேலிக்கூத்தானது என்றும், அமலாக்கத் துறையினர் எதையும் கண்டறியவில்லை என்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.
ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்தம் தொடர்பான வழக்கில், சட்ட விரோத பணப் பரிவர்த்தனை குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் அமலாக்கத் துறையினர், ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான இடங்களில் சனிக்கிழமை சோதனை மேற்கொண்டனர். தில்லி, சென்னை ஆகிய இடங்களில் இச்சோதனைகள் நடைபெற்றன.
இதுதொடர்பாக, தில்லியில் செய்தியாளர்களுக்கு ப.சிதம்பரம் பேட்டியளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:
சென்னையில் அமலாக்கத் துறையினர் மீண்டும் சோதனை நடத்தியுள்ளனர். ஆனால், தில்லியில் ஜோர்பாக் பகுதியில் நான் வசித்து வரும் வீட்டிலும் அவர்கள் சோதனை நடத்தியது கேலிக்கூத்தானது. அந்த வீட்டில் கார்த்தி சிதம்பரம் வசிக்கிறார் என்ற நம்பிக்கையில் அதிகாரிகள் வந்தனர். அவர்களிடம், கார்த்தி சிதம்பரம் சென்னையில் வசிக்கிறார்; இந்த வீட்டில் நான்தான் வசிக்கிறேன் என்று கூறினேன்.
எனினும், சோதனை நடத்துவதற்கான உத்தரவை அவர்கள் வைத்திருந்ததால், நான் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. சமையலறை, குளியலறை உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. அவர்கள் எதையும் கண்டறியவில்லை. தங்களது சோதனையை நியாயப்படுத்த வேண்டும் என்பதற்காக, ஏர்செல் - மேக்சிஸ் விவகாரத்தில் கடந்த 2012-13ஆம் ஆண்டுகளில் நாடாளுமன்றத்தில் நான் தாக்கல் செய்த அறிக்கைகள் தொடர்பான ஆவணங்களை எடுத்துச் சென்றனர். எதிர்காலத்தில் இதுபோன்ற சோதனைகளில் அதிகாரிகளால் எதையாவது கண்டறிய முடிந்தால், அவர்களை நானே பாராட்டுவேன்.
ஏர்செல் - மேக்சிஸ் விவகாரத்தில், திட்டமிடப்பட்ட குற்றம் என்ற பிரிவில் சிபிஐ உள்ளிட்ட எந்த விசாரணை அமைப்பும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவில்லை. இதுதொடர்பாக சட்ட விரோத பணப் பரிவர்த்தனை சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறை விசாரணை மேற்கொள்ள எந்த முகாந்திரமும் இல்லை.
"அடிபணியமாட்டேன்': மத்திய அரசின் கட்டளையின்பேரில், தனது அதிகாரத்தை அமலாக்கத் துறை தவறாக பயன்படுத்துகிறது. எந்த நெருக்கடிக்கும் நான் அடிபணியமாட்டேன். தொடர்ந்து எனது கருத்துக்களை தெரிவிப்பேன் என்றார் ப.சிதம்பரம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com