எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்: இந்திய வீரர் பலி

ஜம்மு - காஷ்மீரின் ரஜௌரி மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் படையினர் சனிக்கிழமை அத்துமீறி நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் பலியானார்.

ஜம்மு - காஷ்மீரின் ரஜௌரி மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் படையினர் சனிக்கிழமை அத்துமீறி நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் பலியானார்.
இதுதொடர்பாக ராணுவ செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியதாவது:
ரஜௌரி மாவட்டத்திலுள்ள சுந்தர்பானி செக்டாரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டையொட்டிய பகுதியில் பாகிஸ்தான் படையினர் சனிக்கிழமை அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், முரளிதர் பதானே (22) என்ற ராணுவ வீரர், குண்டு பாய்ந்து உயிரிழந்தார். இவர், மகாராஷ்டிர மாநிலம், துலே மாவட்டத்திலுள்ள காலேன் கிராமத்தைச் சேர்ந்தவர் என்றார் அந்த அதிகாரி. மேலும், பாகிஸ்தானின் அத்துமீறலுக்கு இந்திய தரப்பில் தக்க பதிலடி தரப்பட்டதாகவும் அவர் கூறினார்.
பாகிஸ்தானுடன் 3,323 கி.மீ. தொலைவு எல்லையை, இந்தியா பகிர்ந்துகொண்டுள்ளது. இதில் சுமார் 960 கி.மீ. தொலைவு எல்லை ஜம்மு - காஷ்மீரில் அமைந்துள்ளது. எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது. ரஜௌரி மாவட்டத்தில் பாகிஸ்தான் படையினர் கடந்த 31-ஆம் தேதி நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் பலியானார். இதேபோல், கடந்த 23-ஆம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரு அதிகாரி உள்பட ராணுவத்தினர் 4 பேர் உயிரிழந்தனர்.
சம்பா மாவட்டத்தில் சில தினங்களுக்கு முன் பாகிஸ்தான் படையினர் நடத்திய தாக்குதலில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து, பதிலடி நடவடிக்கையில் ஈடுபட்ட எல்லைப் பாதுகாப்புப் படையினர், பாகிஸ்தானின் இரு ராணுவ நிலைகளை தாக்கி அழித்தனர்.
கடந்த ஆண்டில் பாகிஸ்தான் படையினரின் அத்துமீறி நடத்திய தாக்குதல்களில் பொதுமக்கள் 35 பேர், ராணுவத்தினர் 19 பேர், எல்லைப் பாதுகாப்புப் படையினர் 4 பேர் என மொத்தம் 58 பேர் உயிரிழந்துவிட்டனர். கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த ஆண்டில் உயிரிழப்புகள் நேரிட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com