பத்மாவத் திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும்: மத்திய அமைச்சர் அதாவாலே

பத்மாவத் திரைப்படத்தில் இருக்கும் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கினால் மட்டுமே, அந்தப் படத்தை திரையிட அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதாவாலே வலியுறுத்தினார்.

பத்மாவத் திரைப்படத்தில் இருக்கும் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கினால் மட்டுமே, அந்தப் படத்தை திரையிட அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதாவாலே வலியுறுத்தினார்.
இதுகுறித்து மும்பையில் அவர் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
சர்ச்சைக்குரிய திரைப்படமான பத்மாவதியின் பெயரை பத்மாவத் என மாற்றினால் மட்டும் போதாது. படத்தின் பெயரை மாற்றுவதால், அதில் இருக்கும் காட்சிகள், கதையமைப்பு மாறிவிடாது. படத்தில் இருக்கும் சர்ச்சைக்குரிய காட்சிகள், படத்தை வெளியிடும் முன்பு நீக்கப்பட வேண்டும்.
அந்தப் படம் குறித்து ராஜபுத்திர இன மக்கள் தெரிவித்த ஆட்சேபனைகள் இன்னும் சரி செய்யப்படவில்லை. எனவே, அதை திரையிட அனுமதிக்க வேண்டாம். இதுதொடர்பாக மத்திய திரைப்பட தணிக்கை வாரியத் தலைவர் பிரசூன் ஜோஷியை விரைவில் சந்தித்து நான் பேசவுள்ளேன் என்றார் ராம்தாஸ் அதாவாலே.
சர்ச்சைக்குரிய பத்மாவத் திரைப்படத்துக்கு முன்பு பத்மாவதி என்று பெயரிடப்பட்டிருந்தது. அந்தப் படத்தில் ராஜபுத்திர ராணி பத்மாவதிக்கு எதிரான கருத்துகள் இருப்பதாக தெரிவித்து வடமாநிலங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதையடுத்து கடந்த டிசம்பர் மாதம் வெளியாக இருந்த படம் ஒத்திவைக்கப்பட்டது. 
இந்நிலையில், அந்தப் படத்தை திரையிட அனுமதிக்க வேண்டுமானால், அதன் பெயரை பத்மாவத் என மாற்ற வேண்டும் என்று மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் நிபந்தனை விதித்ததாகத் தெரிகிறது. இதையடுத்து, அந்தப் படத்தின் பெயர் பத்மாவத் என்று மாற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com