சாதி மாறித் திருமணம் செய்த தம்பதிகளை 'காப்' பஞ்சாயத்தினர் தாக்குவது சட்டவிரோதம்: உச்ச நீதிமன்றம் 

சாதி மாறித் திருமணம் செய்த திருமண வயதினை எட்டிய தம்பதிகளை 'காப்' பஞ்சாயத்தினர் உள்ளிட்ட எந்த அமைப்பினரும் தாக்குவது சட்டவிரோதம் என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
சாதி மாறித் திருமணம் செய்த தம்பதிகளை 'காப்' பஞ்சாயத்தினர் தாக்குவது சட்டவிரோதம்: உச்ச நீதிமன்றம் 

புதுதில்லி: சாதி மாறித் திருமணம் செய்த திருமண வயதினை எட்டிய தம்பதிகளை 'காப்' பஞ்சாயத்தினர் உள்ளிட்ட எந்த அமைப்பினரும் தாக்குவது சட்டவிரோதம் என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது

'சக்தி வாஹினி'என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனமானது கடந்த 2010-ல் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றினைத் தொடர்ந்தது. இந்த வழக்கில் சாதி மாறித் திருமணம் செய்பவர்கள் 'காப்' எனப்படும் ஜாதி சார்ந்த கட்டப்பஞ்சாயத்து குழுக்களின் மூலம் தாக்கப்படுகின்றனர் என்றும், அவர்களை பிரித்து வைப்பது உள்ளிட்ட சம்பவங்கள் நடப்பது  குறித்தும் முறையிட்டிருந்தது.

மேலும் இத்தகைய செயல்களைத் தடுக்க உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலையும் கோரியிருந்தது. வடமாநிலங்களில் குறிப்பாக ஹரியாணா, உத்தரப் பிரதேச மாநிலங்களில் இத்தகைய கட்டப் பஞ்சாயத்து சம்பவங்கள் அதிகம் நடைபெறுகிறது என்பதும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் இத்தகைய கிராம பஞ்சாயத்துகளின் வன்முறைகளில் இருந்து பெண்களைக் காக்க, கண்காணிக்க உச்ச நீதிமன்றமே ஏதாவது வழிமுறையை சொல்ல வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தது.

இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவும் வகையில் பரிந்துரைகளை சேகரித்து வழங்குமாறு மூத்த வழக்கறிஞர் ராஜூ ராமச்சந்திரனை உச்ச நீதிமன்றம் நியமித்தது.

இந்நிலையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்பொழுது நீதிமன்றம் தெரிவித்த கருத்துக்களாவன:

சாதி மாறித் திருமணம் செய்த தம்பதிகளைத் தாக்குவது சட்டவிரோதமானது. வெவ்வேறு சாதியைச் சேர்ந்த திருமண வயதை எட்டிய ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொண்டால், அவர்களை கட்டப்பஞ்சாயத்து, சாதிஅமைப்பு பஞ்சாயத்து அல்லது  ஊர் பஞ்சாயத்து என்ற எந்தப்  பெயரிலும் தாக்குவது சட்டவிரோதமானது

மேலும் திருமண வயதை எட்டிய ஓர் ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்வதை ஊர் பஞ்சாயத்தோ, தனிநபரோ அல்லது இந்த சமூகமோ கேள்வி எழுப்ப முடியாது.

இவ்வாறு கூறியுள்ள உச்ச நீதிமன்றம் இந்த வழக்கின் விசாரணையை வரும் பிப்ரவரி 5-ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com