அடேங்கப்பா...ஆயிரம் கோடியை அள்ளிய சேவல் சண்டை சூதாட்டம்! 

அடேங்கப்பா...ஆயிரம் கோடியை அள்ளிய சேவல் சண்டை சூதாட்டம்! 

பொங்கல் பண்டிகையை ஒட்டி ஆந்திராவின் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற சேவல் சண்டையை முன்வைத்த சூதாட்டத்தில், ரூ.1000 கோடி அளவிலான பணம் கைமாறியுள்ள தகவல் வெளியாகியுள்ளது.

விஜயவாடா: உச்ச நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும், பொங்கல் பண்டிகையை ஒட்டி ஆந்திராவின் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற சேவல் சண்டையை முன்வைத்த சூதாட்டத்தில், ரூ.1000 கோடி அளவிலான பணம் கைமாறியுள்ள தகவல் வெளியாகியுள்ளது.

ஆந்திராவில் பொங்கலுக்கு முந்தைய நாளான போகி துவங்கி பொங்கலுக்கு மறுநாளான 'கனுமா' எனப்படும் விழா வரையிலான மூன்று நாட்களும் அறுவடைத் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. அதனை ஒட்டி கிராமப்புறங்களில் நடக்கும் சேவல் சண்டை மிகவும் பிரசித்தமானது. ஆனால் பங்கேற்கும் சேவல்களின் கால்களில் கத்திகளை கட்டி நடைபெறும் இந்தப் போட்டியில் பல் சேவல்கள் களத்தில் கொல்லப்படும்.சுருக்கமாக ரத்தக்களரியாக இந்த போட்டிகள் நடைபெறுவதால் இதனைத் தடை செய்யக் கோரி ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தொடரப்பட்டது.   

அந்த வழக்கில் சேவல் போட்டிகளைத் தடை செய்து தீர்ப்பு வந்தது. பின்னர் இந்த தீர்ப்பானது உச்ச நீதிமன்றத்தாலும் உறுதி செய்யப்பட்டது. ஆனாலும் தற்பொழுது நடந்து முடிந்த பொங்கல் திருவிழாவின் பொழுது, ஆந்திராவின் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற சேவல் சண்டையை முன்வைத்து நடந்த  சூதாட்டத்தில், ரூ.1000 கோடி அளவிலான பணம் கைமாறியுள்ள தகவல் வெளியாகியுள்ளது.  

உச்ச நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த முயற்சிகளை எடுத்ததாக காவல்துறையினர் சமாதானங்கள் கூறினாலும், அரசியல்வாதிகளின் ஆதரவினால் பல்வேறு பகுதிகளில் சேவல் சண்டைகள் நடந்துள்ளன. முக்கியமாக ஆளுங்கட்சியினர் இத்தகைய போட்டி ஏற்பாடுகளுக்கு முழு அளவில் ஆதரவளித்துள்ளனர். பல இடங்களில் ஆளும்கட்சிப் பிரமுகர்கள் உற்சாகத்துடன் இந்தப்போட்டிகளில் பங்கேற்றதனைக் காண முடிந்தது. பல்வேறு இடங்களில் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் உற்சாகமாக செய்யப்பட்டிருந்தன. அரசியல்வாதிகள் பங்கு கொள்வதற்காக சிறப்பு ஏற்பாடுகள் அமைப்பாளர்களால் மேற்கொள்ளப்பட்டிருந்தன.  இதன் காரணமாக சூதாட்டத்தில் ஈடுபடுவோர்களை அரசியல்வாதிகள் காப்பாற்றுவது தெளிவாகத் தெரிந்தது.  

குறிப்பாக மேற்கு கோதாவரி எம்.எல்.ஏவான பிரபாகரின் பாதுகாப்பு அதிகாரிகள் 'கொப்பகா' என்னும் இடத்தில் சேவல் சண்டை நடைபெற்ற திடலுக்குள் காவல்துறையினரை அனுமதிக்க மறுத்துள்ள விஷயம் தெரிய வந்துள்ளது.

அத்துடன் இந்த மூன்று நாட்களும் சேவல் சண்டையை முன்வைத்த சூதாட்டத்தில் மேற்கு மற்றும் கிழக்கு கோதாவரி மாவட்டங்களில் மட்டும் ரூ.500 கோடிக்கும் மேலான தொகை கைமாறியுள்ளதாகத் தெரிய வருகிறது. அதேபோல கிருஷ்ணா மாவட்டத்தில் ரூ.100 கோடி பணம் புழங்கியுள்ளது. ஒட்டு மொத்தமாக மாநிலத்தில் ரூ.800 கோடி முதல் ரூ.1000 கோடி வரை இந்த சூதாட்டத்தில், ரூ.1000 கோடிஅளவிலான பணம் கைமாறியுள்ளதாக கணக்கிடப்படுகிறது.          

பொங்கல் பண்டிகையின் இறுதிநாளான திங்களன்று மாநிலங்களின் பெரும்பாலான ஏ.டி.எம்களில்  பணம் இல்லாத காரணத்தால், சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் மூலமும் பணம் பெற்றுக் கொண்டுள்ள தகவலும் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.      

இது தொடர்பாக பெயர் வெளியிட விரும்பாத ஆந்திர மாநில காவல்துறை அதிகாரியொருவர் கூறியதாவது:

ஆமாம்; சேவல் சண்டைகள் நடந்தது உண்மைதான். அதிக அளவிலான பணம் இதில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. எங்களால் இயன்றதைச் செய்தோம். எங்களுக்கு அதிக அவிலான அழுத்தங்கள் கொடுக்கப்பட்டது. இவ்வளவுதான் எங்களால் முடியும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com