அமேதியில் சுற்றுப் பயணம்: ராகுலுக்கு பாஜகவினர் எதிர்ப்பு

காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு ராகுல் காந்தி உத்தரப் பிரதேசத்தின் அமேதி தொகுதியில் மேற்கொண்ட சுற்றுப் பயணத்தின்போது பாஜகவினர் அவரை எதிர்த்து ஆர்ப்பாட்டங்களில்

காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு ராகுல் காந்தி உத்தரப் பிரதேசத்தின் அமேதி தொகுதியில் மேற்கொண்ட சுற்றுப் பயணத்தின்போது பாஜகவினர் அவரை எதிர்த்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். இதனால் அவரது சுற்றுப் பயணத்துக்கான வழித்தடம் மாற்றப்பட்டது.
ராகுல் காந்தி, உத்தரப் பிரதேசத்தில் உள்ள ரே பரேலி மற்றும் அமேதி மக்களவைத் தொகுதிகளில் இரண்டு நாள் பயணத்தை மேற்கொண்டார். தனது தாயார் சோனியாவின் தொகுதியான ரே பரேலிக்கு அவர் திங்கள்கிழமை வந்தார். அங்கு அவரை எதிர்த்து பாஜக ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், ராகுல் காந்தி தனது பயணத்தின் இரண்டாம் நாளான செவ்வாய்க்கிழமை, தனது சொந்தத் தொகுதியான அமேதியின் பல்வேறு பகுதிகளுக்கும் வருகை தந்தார். ஜமோ சாலையில் அவர் வந்தபோது சாலையின் இருபுறமும் காங்கிரஸ் தொண்டர்கள் திரண்டு நின்று அவரை வரவேற்றனர். அங்கிருந்து ராகுல் காந்தி இரண்டு கி.மீ. தூரத்துக்கு நடைப்பயணம் மேற்கொண்டு கௌரிகஞ்ச் பகுதியை அடைந்தார்.
வழியில் பாஜக ஆதரவாளர்கள் ராகுலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் 'காணாமல் போய்விட்ட தொகுதி எம்.பி.' என்ற வாசகம் எழுதப்பட்ட பதாகைகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதேபோல், சலோன் என்ற இடத்துக்குச் சென்ற ராகுல் காந்தி அங்கிருந்து பார்ஷ்தேர்பூர் பகுதிக்குப் புறப்பட்டபோதும் பாஜக ஆதரவாளர்கள் அவருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அங்கு காங்கிரஸாருக்கும் பாஜகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இருதரப்பினரையும் போலீஸார் விலக்கினர். அப்போது காங்கிரஸார் மீது போலீஸார் தடியடி நடத்தியதாகவும் தெரிகிறது.
இதனிடையே, பாஜக தொண்டர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து ராகுலின் பயண வழித்தடம் மாற்றி அமைக்கப்பட்டது. அதன் பின், அவர் தனது பயணத்தை முடித்துக் கொண்டு தில்லி புறப்பட்டுச் சென்றார்.
காங்கிரஸ் கண்டனம்: இந்நிலையில், அமேதி தொகுதியில் ராகுலை வரவேற்க வந்த காங்கிரஸ் தொண்டர்கள் மீது போலீஸார் தாக்குதல் நடத்தியதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. 
இது குறித்து அக்கட்சிப் பிரமுகர் பிரமோத் திவாரி கூறுகையில், உத்தரப் பிரதேசத்தை ஆளும் பாஜக, அரசு இயந்திரத்தை தவறாகப் பயன்படுத்தி எதிர்க்கட்சித் தொண்டர்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது என்று குற்றம்சாட்டினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com