உச்ச நீதிமன்றத்தில் தற்போது நெருக்கடி ஏதுமில்லை: இந்திய பார் கவுன்சில் தகவல்

உச்ச நீதிமன்றத்தில் தற்போது நெருக்கடி ஏதுமில்லை என்றும் விரைவில் அங்கு இயல்பு நிலை ஏற்படுத்தப்பட்டு விடும் என்றும் இந்திய பார் கவுன்சில் (வழக்குரைஞர்கள் சங்கம்) தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் தற்போது நெருக்கடி ஏதுமில்லை என்றும் விரைவில் அங்கு இயல்பு நிலை ஏற்படுத்தப்பட்டு விடும் என்றும் இந்திய பார் கவுன்சில் (வழக்குரைஞர்கள் சங்கம்) தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பார் கவுன்சில் தலைவர் மனன்குமார் மிஸ்ரா, தில்லியில் பிடிஐ செய்தியாளரிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
தில்லியில் கடந்த 12-ஆம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்த 4 மூத்த நீதிபதிகளில் ஒருவரான ரஞ்சன் கோகோயை எங்களது பார் கவுன்சில் சார்பில் அமைக்கப்பட்ட 7 உறுப்பினர்கள் குழு திங்கள்கிழமை சந்தித்துப் பேசியது. அப்போது, நெருக்கடி முடிவுக்கு வந்துவிட்டதாக நீதிபதி கோகோய் தெரிவித்தார். தற்போது எந்த சச்சரவும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
உச்ச நீதிமன்றத்தில் ஏற்பட்ட நெருக்கடி இன்னும் தீரவில்லை என்று சில ஊடகங்கள் எந்த அடிப்படையில் செய்திகளை வெளியிட்ட என்பது எனக்குத் தெரியாது. நிலைமை மேலும் மோசமாக்க வேண்டிய அவசியமில்லை. 
அதேபோல் நான்கு மூத்த நீதிபதிகளில் மற்றொருவரான எம்.பி.லோக்குரையும் நாங்கள் சந்தித்தோம். அவரும் நெருக்கடி ஏதுமில்லை என்றே கூறினார்.ஏனெனில், அவர்கள் எழுப்பிய விவகாரத்தில் தனிப்பட்ட விஷயம் ஏதுமில்லை.
உச்ச நீதிமன்றத்தில் பிரச்னை இன்னும் தீரவில்லை என்று மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் கூறியுள்ளது குறித்துக் கேட்கிறீர்கள். அட்டர்னி ஜெனரல் ஏன் அவ்வாறு கூறுகிறார், எப்படி அவ்வாறு கூறுகிறார் என்பது எனக்குத் தெரியாது.
அனைத்து நீதிபதிகளும் தங்கள் நீதிமன்றப் பொறுப்பை ஆற்றி வருகின்றனர். உச்ச நீதிமன்றத்தில் பணிகள் இயல்பாக நடைபெற்று வருகின்றன.
எனவே, இனி வெளிப்படையாக எந்த விஷயமும் வராது. விரைவில் அனைத்துப் பிரச்னைகளும் தீர்க்கப்பட்டு விடும். இப்போதைக்கு எந்த நெருக்கடியும் இல்லை என்று மனன்குமார் மிஸ்ரா தெரிவித்தார்.
'நெருக்கடி விரைவில் தீர்க்கப்படும்': இதனிடையே, இந்த விவகாரம் குறித்து மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், தில்லியில் செய்தியாளர்களிடம் கூறுகையில் 'நெருக்கடி இன்னும் தீரவில்லை. இன்னும் 2-3 நாள்களில் பிரச்னை முழுமையாகத் தீர்ந்துவிடும் என்று நம்புவோம். தலைமை நீதிபதியையோ, அவருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய 4 நீதிபதிகளையோ நான் சந்திக்கவில்லை' என்றார்.
இந்த விவகாரம் குறித்து உச்ச நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கத்தின் (எஸ்சிபிஏ) தலைவர் விகாஸ் சிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்த வார இறுதிக்குள் நெருக்கடி தீர்ந்து விட வாய்ப்புள்ளது. எங்கள் சங்கம் சார்பில் இயற்றப்பட்ட தீர்மானத்தை நான் தலைமை நீதிபதியிடம் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒப்படைத்தேன். அப்போது நெருக்கடி தீர்ந்து விடும் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டது. 
ஒரு வாரத்துக்குள் இயல்புநிலை ஏற்பட்டு விடும் என்ற நம்பிக்கையுடன் தலைமை நீதிபதி இருக்கிறார். தற்போது அனைத்து விஷயங்களும் இயல்புக்குத் திரும்பி வருவதாகவே தோன்றுகிறது என்று விகாஸ் சிங் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com