பயங்கரவாத அச்சுறுத்தல்களால் சர்வதேச அளவில் பாதிப்பு: இஸ்ரேல் பிரதமர்

தீவிரவாத அச்சுறுத்தல்களும், அதன் தொடர்ச்சியாக அரங்கேறும் பயங்கரவாத நடவடிக்கைகளும் சர்வதேச அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின்
பயங்கரவாத அச்சுறுத்தல்களால் சர்வதேச அளவில் பாதிப்பு: இஸ்ரேல் பிரதமர்

தீவிரவாத அச்சுறுத்தல்களும், அதன் தொடர்ச்சியாக அரங்கேறும் பயங்கரவாத நடவடிக்கைகளும் சர்வதேச அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
இத்தகைய சவால்களை எதிர்கொள்ள இந்தியா - இஸ்ரேல் இடையேயான ஒருங்கிணைப்பு மேலும் வலுவடைய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஆறு நாள்கள் அரசு முறைப் பயணமாக கடந்த 14-ஆம் தேதி இந்தியா வந்த நெதன்யாகு, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்நிலையில், செவ்வாய்கிழமை காலை, அவர் தனது மனைவியுடன் ஆக்ராவில் அமைந்துள்ள தாஜ்மஹாலைப் பார்வையிட்டார்.
அதன் பின்னர், தில்லியில் பன்னாட்டு பிரதிநிதிகள் பங்கேற்ற 'ராய்சினா மாநாட்டை' நெதன்யாகு தொடங்கி வைத்தார். இதில், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் நெதன்யாகு பேசியதாவது:
கடந்த ஆண்டு ஜூலை மாதம் இஸ்ரேலுக்கு இந்தியப் பிரதமர் மோடி வருகை தந்ததன் மூலம் புதிய அத்தியாயத்தை அவர் படைத்துள்ளார். 
ஏனெனில் 3,000 ஆண்டு கால வரலாற்றில் இஸ்ரேலிய மண்ணில் எந்த ஒரு இந்தியப் பிரதமரின் கால் தடமும் பதிந்ததில்லை. அதனை முறியடித்து இரு நாட்டு நல்லுறவையும் வலுப்படுத்தியவர் மோடி. மீண்டும் அவர் இஸ்ரேலுக்குப் பயணம் மேற்கொள்வதற்கான காலம் வெகுதொலைவில் இல்லை என்று நம்புகிறேன்.
மக்களுக்கான கருத்துரிமையையும், வழிபாட்டு உரிமையையும் உறுதி செய்து ஜனநாயக மாண்புகளைக் காக்கும் பண்புகள் இந்தியா மற்றும் இஸ்ரேலுக்கு தன்னகத்தே அமைந்துள்ளன. இரு நாடுகளுக்கும் இடையே இருப்பது நல்லுறவு என்பதைத் தாண்டி நட்புறவாக உள்ளது. பிரதமர் மோடியை எனது உற்ற நண்பர் என இந்தியர்கள் அடையாளப்படுத்துவதே அதற்கு சான்று.
இஸ்லாமிய தீவிரவாத அச்சுறுத்தல்களும், அதன் பயங்கரவாத நடவடிக்கைகளும் சர்வதேச அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. அதனை ஒருங்கிணைந்து எதிர்கொள்ள இந்தியாவுக்கும், இஸ்ரேலுக்கும் இடையேயான உறவு மேலும் வலுப்பெற வேண்டும் என்றார் நெதன்யாகு.
இதைத் தொடர்ந்து வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா நன்றியுரை வழங்கினார். தொடக்க விழாவில் மத்திய அமைச்சர்கள் வி.கே.சிங், ஜெயந்த் சின்ஹா, வெளியுறவுத் துறைச் செயலர் ஜெய்சங்கர், காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com