போஃபர்ஸ் வழக்கில் மேல்முறையீடு: பாஜக பிரமுகரிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி

போஃபர்ஸ் வழக்கில் மேல்முறையீடு: பாஜக பிரமுகரிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி

போஃபர்ஸ் ஊழல் வழக்கில் மேல்முறையீடு செய்வதற்கு உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? என்று பாஜக பிரமுகர் அஜய் அகர்வாலிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

போஃபர்ஸ் ஊழல் வழக்கில் மேல்முறையீடு செய்வதற்கு உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? என்று பாஜக பிரமுகர் அஜய் அகர்வாலிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது ராணுவத்துக்கு ரூ. 1,437 கோடி செலவில் ஹோவிட்சர் பீரங்கிகளை வாங்க ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த போஃபர்ஸ் நிறுவனத்திடம் மத்திய அரசு கடந்த 1986-இல் ஒப்பந்தம் செய்து கொண்டது. இந்த ஒப்பந்தம் தொடர்பாக இந்தியாவைச் சேர்ந்த முக்கிய அரசியல்வாதிகளுக்கும், ராணுவ அதிகாரிகளுக்கும் அந்த நிறுவனம் ரூ.64 கோடி லஞ்சம் கொடுத்ததாக ஸ்வீடன் வானொலி 1987, ஏப்ரல் 16-ஆம் தேதி செய்தி வெளியிட்டது.
இந்த விவகாரம் இந்திய அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியது. இதனிடையே, போஃபர்ஸ் ஊழல் தொடர்பாக போஃபர்ஸ் நிறுவனத்தின் அப்போதைய தலைவர் மார்ட்டின் அர்ட்போ, இடைத்தரகர் வின் சத்தா, ஹிந்துஜா சகோதரர்கள் 3 பேர் ஆகியோருக்கு எதிராக சிபிஐ 1990, ஜனவரி 22-ஆம் தேதி வழக்குப்பதிவு செய்தது. ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் இவ்வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இவ்வழக்கில், இடைத்தரகர்கள் வின் சத்தா, குவாத்ரோச்சி, அப்போதைய பாதுகாப்புத்துறை செயலர் எஸ்.கே.பட்நாகர், மார்ட்டின் அர்ப்டோ ஆகியோர் மீதும், போஃபர்ஸ் நிறுவனத்தின் மீதும் சிபிஐ 1999, அக்டோபர் 22-ஆம் தேதி முதல் குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்தது. ஹிந்துஜா சகோதரர்கள் மீது 2000-ஆம் ஆண்டில் துணைக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 
இவ்வழக்கை விசாரித்த தில்லி உயர் நீதிமன்றம், வழக்கில் இருந்து ராஜீவ் காந்தியை விடுவித்து கடந்த 2004-இல் தீர்ப்பளித்தது. அதைத் தொடர்ந்து, வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஹிந்துஜா சகோதரர்கள் மற்றும் போஃபர்ஸ் நிறுவனத்துக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் ரத்து செய்து 2005-இல் தீர்ப்பளித்தது. இதனிடையே, இவ்வழக்கை விசாரித்த தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம், குற்றம்சாட்டப்பட்ட குவாத்ரோச்சியை 2011-இல் வழக்கில் விடுவித்து தீர்ப்பளித்தது. அவர் 2013இல் உயிரிழந்தார்.
இந்நிலையில், போஃபர்ஸ் வழக்கில் இருந்து குற்றம்சாட்டப்பட்ட நபர்களை விடுவித்து தில்லி உயர் நீதிமன்றம் கடந்த 2005-இல் அளித்த தீர்ப்பை எதிர்த்து பாஜக பிரமுகரான அஜய் அகர்வால் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அவர் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியாவை எதிர்த்து ரே பரேலி தொகுதியில் போட்டியிட்டு, வெற்றி வாய்ப்பை இழந்தவர் ஆவார்.
அவரது மேல் முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, 'இவ்வழக்கில் சிபிஐ அமைப்பே மேல் முறையீடு செய்யவில்லை. எனவே, மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்வதில் தனக்கு என்ன உரிமை இருக்கிறது? என்பதை மனுதாரர் விளக்க வேண்டும்' என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். 
மேலும், விசாரணையை அடுத்த மாதம் (பிப்ரவரி) 2-ஆம் தேதிக்கு அவர்கள் ஒத்திவைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com