ஹஜ் மானியம் ரத்து: மத்திய அரசு அறிவிப்பு

ஹஜ் யாத்திரைக்காக அளிக்கப்பட்டு வந்த மானியம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
ஹஜ் மானியம் ரத்து: மத்திய அரசு அறிவிப்பு

ஹஜ் யாத்திரைக்காக அளிக்கப்பட்டு வந்த மானியம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
சிறுபான்மை சமூகத்தினருக்கு அதிகாரமளிப்பது தொடர்பாக எடுத்து வரும் நடவடிக்கைகளின் ஒருபகுதியே இது என்று மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.
இதுகுறித்து தில்லியில் மத்திய சிறுபான்மை விவகாரங்கள் துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
இந்தியாவில் இருந்து நிகழ் ஆண்டில் 1.75 லட்சம் முஸ்லிம்கள், ஹஜ் யாத்திரை செல்கின்றனர். இது சாதனை எண்ணிக்கையாகும். சவூதி அரேபியாவுக்கு இந்தியாவில் இருந்து முஸ்லிம்கள் கடந்த ஆண்டு ஹஜ் யாத்திரை சென்றதற்கு மானியமாக மத்திய அரசு ரூ.250 கோடி செலவு செய்தது. இனி அந்த மானியம் அளிக்கப்பட மாட்டாது. நிகழ் ஆண்டில் இருந்து, ஹஜ் மானியம் ரத்து செய்யப்படுகிறது.
கடந்த 2012-ஆம் ஆண்டில், மத்தியில் காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சியிலிருந்தபோது, ஹஜ் மானியத்தை ரத்து செய்யும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவின்படியே, ஹஜ் மானியம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
முஸ்லிம்களை திருப்திப்படுத்தும் நோக்கில், ஹஜ் மானியம் போன்றவை காங்கிரஸ் போன்ற அரசியல் கட்சிகளால் அளிக்கப்பட்டன. ஆனால், உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, அந்த மானியம் ஆண்டுதோறும் படிப்படியாக குறைக்கப்பட்டு வந்தது. சிறுபான்மையினரை திருப்திப்படுத்துவதற்குப் பதிலாக, அவர்களுக்கு மரியாதையுடன், அதிகாரமும் அளிப்பதற்கு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியே இதுவாகும்.
இந்தியாவில் இருந்து கடல்மார்க்கமாக கப்பல்கள் மூலம் ஹஜ் யாத்திரை வருவதற்கு சவூதி அரேபியா அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதுதொடர்பான நடைமுறைகளை, இருநாட்டு அரசு அதிகாரிகளும் ஆலோசித்து வகுப்பார்கள். இந்தியாவின் சில பகுதிகளில் வசிப்போருக்கு, எந்தப் பகுதியில் இருந்து ஹஜ் யாத்திரை செல்ல விருப்பம் இருக்கிறது என்பதை தேர்வு செய்ய வாய்ப்பளிக்கப்படும். இதனால், ஹஜ் யாத்திரை செலவில் 70 சதவீதம் வரையும் குறையும்.
ஹஜ் யாத்திரைக்கு நிகழாண்டில் இருந்து பெண்கள், ஆண் பாதுகாப்பு (மெஹரம்) இன்றி செல்ல முடியும். அதன்படி, நிகழாண்டில் மட்டும் 1,300 முஸ்லிம் பெண்கள் ஹஜ் யாத்திரை செல்கின்றனர். அவர்களுக்கு உதவியாக பெண் ஹஜ் உதவியாளர்கள் செல்வார்கள். அவர்கள் சவூதி அரேபியாவில் தங்குவதற்கு மத்திய அரசு ஏற்பாடுகள் செய்து தரும்.
உத்தரப் பிரதேச மாநிலம், லக்னௌவில் வரும் 18-ஆம் தேதியன்று, 'சிறுபான்மை சமூகத்தவரை திருப்திப்படுத்துவதற்கு பதிலாக அவர்களுக்கு அதிகாரமளிப்பது எப்படி?' என்பது குறித்த கருத்தரங்குக்கு எனது அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது. இதில் 9 மாநிலங்களைச் சேர்ந்த சிறுபான்மை விவகாரங்கள் துறை அமைச்சர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான அரசால், 8.5 லட்சம் சிறுபான்மை சமூக இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு செய்து கொடுக்கப்பட்டுள்ளது. 1.83 கோடி பேருக்கு கல்வி உதவித் தொகை அளிக்கப்பட்டுள்ளது என்றார் முக்தார் அப்பாஸ் நக்வி.
அப்போது அவரிடம், மானியம் ரத்து செய்யப்படுவதால், முஸ்லிம்களுக்கு ஹஜ் யாத்திரை செல்ல அதிக செலவாகாதா? என கேட்கப்பட்டது. அதற்கு நக்வி பதிலளிக்கையில், 'செலவை குறைப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது' என்றார்.
ஹஜ் யாத்திரை என்றால் என்ன?
சவூதி அரேபியா நாட்டின் மெக்கா நகருக்கு முஸ்லிம்கள் தங்களது வாழ்நாளில் ஒருமுறையேனும் செல்ல வேண்டும் என்பது அவர்களின் மதரீதியில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி, மெக்கா நகருக்கு முஸ்லிம்கள் பயணம் செல்வதே, ஹஜ் யாத்திரை என்று அழைக்கப்படுகிறது. இஸ்லாமிய நாள்காட்டியில் குறிப்பிடப்பட்டுள்ள கடைசி மாதமான து-அல்-ஹிஜ்ஜா மாதத்தில் இந்த யாத்திரை நடத்தப்படுகிறது.

மானியத்தை அரசு வழங்கும் முறை
ஹஜ் யாத்திரை செல்வோருக்கு, ஏர் இந்தியா போன்ற அரசு விமானங்களில் டிக்கெட் கட்டணத்தில் தள்ளுபடிகள் அளிக்கப்படுகின்றன. ஹஜ் யாத்திரையின்போது முஸ்லிம்களுக்கான மருத்துவம், உணவு, தங்குமிடம் போன்றவையும் அரசு செய்து தருகிறது. முதலில் விமான டிக்கெட்டுக்கான தள்ளுபடி, மும்பை-ஜெட்டா இடையே இயக்கப்பட்ட விமானங்களில் அளிக்கப்பட்டது. பிறகு, சவூதி அரேபியா-இந்தியா இடையே இயக்கப்படும் அனைத்து அரசு விமானங்களுக்கும் விரிவுப்படுத்தப்பட்டது.

பிற மானியங்கள்
ஹஜ் யாத்திரைக்கு வழங்கப்பட்டது போல், மத்திய அரசால் பல்வேறு ஆன்மிக யாத்திரைகளுக்கும் மானியம் அளிக்கப்படுகிறது. ஹரித்வார், உஜ்ஜைனி, நாசிக், அலாகாபாத் ஆகிய இடங்களில் நடக்கும் 4 கும்ப மேளாக்களுக்கும் அரசு அதிக அளவு நிதி செலவு செய்கிறது. வட இந்தியாவில் இருந்து திபெத்தில் உள்ள கைலாஷ் மானசரோவர் பகுதிக்கு செல்வதற்கும் அரசு தனது செலவில் பாதுகாப்பு உள்ளிட்ட ஏற்பாடுகளை செய்து தருகிறது. இந்த யாத்திரைக்கான மானியத்தை உத்தரகண்ட் அரசு கடந்த வாரம் ரூ.25 ஆயிரத்திலிருந்து ரூ.30 ஆயிரமாக அதிகரித்தது.

1932-இல் இருந்து ஹஜ் மானியம்
பிரிட்டிஷாரின் காலனியாதிக்கத்தின்கீழ் இந்தியா இருந்தபோது, ஹஜ் யாத்திரைக்கு மானியம் அளிக்கும் முறை கடந்த 1932-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. மும்பை, கொல்கத்தா ஆகிய துறைமுகங்களில் இருந்து ஹஜ் யாத்திரைக்கு இந்திய முஸ்லிம்கள் சென்றனர். பிரிவினையின்போது முஸ்லிம்கள் விடுத்த கோரிக்கைகளை ஏற்று, முஸ்லிம் தனிநபர் சட்டத்துடன் சேர்த்து ஹஜ் கமிட்டி சட்டமும் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது. நாட்டின் சுதந்திரத்துக்குப் பிறகு, இந்தச் சட்டத்துக்குப் பதிலாக புதிய சட்டம் இயற்றப்பட்டது.
ஹஜ் மானியத்துக்கு எதிர்ப்பு
ஹஜ் யாத்ரீகர்களை சவூதி அரேபியாவுக்கு அழைத்துச் செல்வதில் ஏர் இந்தியா விமானம் ஆதிக்கம் செலுத்தியது உள்ளிட்ட காரணங்களினால், இந்த மானியத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த மானியத்தால், யாத்ரீகர்களை விட அதிக பயனடைந்தது ஏர் இந்தியா விமான நிறுவனம்தான் என்று தெரிவிக்கப்பட்டது. சில அரசியல் கட்சிகள், இந்த மானியத்தை, சிறுபான்மை சமூகத்தினரை திருப்திப்படுத்தும் செயல் என்றும் விமர்சித்தன.

காங்கிரஸ் கண்டனம்; விஹெச்பி வரவேற்பு
கேரள மாநில காங்கிரஸ் தலைவர் எம்.எம்.ஹசன்: இந்த முடிவானது சிறுபான்மை சமூகத்திடம் மத்திய அரசு கொண்டிருக்கும் விரோத மனப்பான்மைக்கு சமீபத்திய உதாரணமாகும். அரசு இந்த முடிவைக் கைவிட வேண்டும். 
கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி: மத்திய அரசின் முடிவு துரதிருஷ்டவசமானது. 
முஸ்லிம் லீக் தலைவர் பி.கே.குஞ்ஞாலிக்குட்டி: ஹஜ் மானியத்தை நிறுத்தும் முடிவை, அரசியல் ஆதாயத்தை எதிர்பார்த்து மத்திய அரசு எடுத்துள்ளது. எங்கள் கட்சி இம்முடிவை எதிர்க்கும்.
அகில இந்திய முஸ்லிம் தனிச்சட்டவாரியம்: ஹஜ் மானியம் என்ற பெயரில் முஸ்லிம்கள் ஏமாற்றப்பட்டு வந்தனர். உண்மையில் இந்த மானியம் நஷ்டத்தில் இயங்கும் ஏர் இந்தியாவுக்கே வழங்கப்பட்டது. 
விஹெச்பி செயல் தலைவர் தொகாடியா: தாமதமாக எடுக்கப்பட்டிருந்தாலும், மத்திய அரசின் முடிவை வரவேற்கிறோம். ஹஜ் மானியம் நிறுத்தப்படுவதால் சேமிக்கப்படும் பணத்தை ஏழை ஹிந்துச் சிறுமிகளின் கல்விக்குப் பயன்படுத்தலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com