தில்லியில் தமிழக மருத்துவ மாணவர் மர்மச் சாவு: போலீஸார் தீவிர விசாரணை

தில்லியில் தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவ பட்ட மேற்படிப்பு மாணவர் சரத் பிரபு (28), மர்மமான முறையில் புதன்கிழமை காலை அவரது வாடகை குடியிருப்பு
தில்லியில் தமிழக மருத்துவ மாணவர் மர்மச் சாவு: போலீஸார் தீவிர விசாரணை

தில்லியில் தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவ பட்ட மேற்படிப்பு மாணவர் சரத் பிரபு (28), மர்மமான முறையில் புதன்கிழமை காலை அவரது வாடகை குடியிருப்பு அறையில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது சாவு குறித்து தில்லி போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம், பாரப்பாளையத்தைச் சேர்ந்தவர் செல்வமணி. இவர் சாயப்பட்டறை தொழில் நடத்தி வருகிறார். இவரது மகன் சரத் பிரவு (28) கோவை மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பை (எம்பிபிஎஸ்) முடித்தார். பின்னர், தில்லி பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் குரு தேக் பகதூர் (ஜிடிபி) மருத்துவமனையுடன் இணைந்த யு.சி.எம்.எஸ். மருத்துவக் கல்லூரியில் பட்ட மேற்படிப்பில் (எம்டி) சேர்ந்து முதலாமாண்டு படித்து வந்தார். தில்ஷாத் கார்டன் பகுதியில் அக்கல்லூரி மருத்துவமனை அருகே குடியிருப்பு ஒன்றில் அறை எடுத்து தங்கியிருந்தார். அதே கல்லூரியில் படிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த சிலர் அதே குடியிருப்பில் வேறு அறைகளில் தங்கி படித்து வருகின்றனர்.
வழக்கம் போல செவ்வாய்க்கிழமை இரவு உணவு சாப்பிட்ட பிறகு தனது அறைக்கு சரத் பிரவு தூங்கச் சென்றார். இந்நிலையில், புதன்கிழமை காலை சுமார் 7 மணியளவில் தனது அறையின் கழிப்பறைக்கு வெளியே சரத் பிரபு மயங்கிய நிலையில் கிடந்ததாகவும், அதை பக்கத்து அறையில் தங்கியிருக்கும் மாணவர்களில் ஒருவர் பார்த்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, அவர் உடனடியாக அருகில் உள்ள யுசிஎம்எஸ் மருத்துவக் கல்லூரியின் ஜிடிபி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 
இது குறித்து தகவல் அறிந்த போலீஸார் சரத் பிரபு தங்கியிருந்த அறைக்குச் சென்று சோதனையிட்டனர். அப்போது, அங்கு ஊசி போடும் சிரிஞ்சு, இன்சுலின் மற்றும் வேதிப்பொருள் இருந்ததைக் கண்டறிந்தனர். தடயவியல் துறையினரும் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டனர். இதனிடையே, இச்சம்பவம் குறித்து சரத் பிரபுவின் பெற்றோருக்கு தொலைபேசியில் தகவல் தெரிவிக்கப்பட்டது. 
தற்கொலையா?: சரத் பிரபுவின் பக்கத்து அறையில் தங்கியிருந்த மாணவர்களிடமும் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, சரத் பிரபுவின் அண்மைக்கால நடவடிக்கைகள் குறித்து போலீஸாரிடம் அவர்கள் தெரிவித்தனர். மேலும், அதே கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயிலும் முதுநிலை மாணவர்கள் சிலருக்கு கடந்த டிசம்பரில் சரத் பிரபு குறுந்தகவல் அனுப்பியுள்ளார். அதில், தனது வாழ்க்கையின் விரக்தியை வெளிப்படுத்தியிருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், சம்பந்தப்பட்ட மாணவர்களிடமும் போலீஸார் விசாரணை நடத்தினர். 
இதுகுறித்து ஷாதரா காவல் சரக துணை ஆணையர் நுபுர் பிரசாத் கூறுகையில், 'மாணவர் சரத் பிரபுவின் இறப்புக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. விசாரணை நடைபெற்று வருகிறது. சம்பவ இடத்தில் சில சிரிஞ்சுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பிரேதப் பரிசோதனைக்குப் பிறகே அவரது சாவுக்கான உண்மைக் காரணம் தெரியவரும்' என்றார். 
இதுகுறித்து தில்லி தில்ஷாத் கார்டனில் உள்ள யுசிஎம்எஸ் மருத்துவக் கல்லூரி முதல்வர் அலுவலகத்தைத் தொலைபேசிடயில் தொடர்பு கொண்டு கேட்ட போது, 'மாணவர் சரத் பிரபு, கல்லூரியில் எம்.டி. பிரிவில் முதலாமாண்டு படித்து வந்தார். அவரது மரணம் தொடர்பாக போலீஸ் விசாரணை நடைபெற்று வருகிறது. இதனால், கருத்துக் கூற இயலாது' என்று தெரிவிக்கப்பட்டது.
இன்று பிரேதப் பரிசோதனை: இதனிடையே, சரத் பிரபுவின் தந்தை செல்வமணி மற்றும் உறவினர் புதன்கிழமை மாலை விமானம் மூலம் தில்லி வந்தனர். மகனின் உடல் வைக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்குச் சென்று மருத்துவர்களிடம் பேசினர். காவல் துறை அதிகாரிகளையும் சந்தித்தனர். அப்போது செவ்வாய்க்கிழமை இரவு தங்கள் குடும்பத்தினருடன் சரத் பிரபு வழக்கம் போல பேசியதாக அவரது தந்தை தெரிவித்தார். இதனால், தில்லி அரசின் வெவ்வேறு மருத்துவர்கள் அடங்கிய குழு மூலம் பிரேதப் பரிசோதனை நடத்த வேண்டும் என்று தந்தை தரப்பில் கோரப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, சரத் பிரபுவின் பிரேதப் பிரசோதனை வியாழக்கிழமை நடைபெற உள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்நிலையில், தமிழக அரசின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து, சரத் பிரபுவின் பிரேதப் பரிசோதனை, காவல் துறை நடைமுறைகள், தில்லி வந்துள்ள அவரது குடும்பத்தினர், உறவினர்கள் ஆகியோருக்கு ஒருங்கிணைப்பு உதவிகளை தில்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். தமிழ்நாடு இல்லத்தின் முதன்மை உறைவிட ஆணையர்கள் தில்லி அரசின் சம்பந்தப்பட்ட துறைகளிடம் பேசி வருகின்றனர். மாணவரின் உடல் வைக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு இரு ஊழியர்களை அனுப்பி தேவையான உதவிகளை செய்து வருகின்றனர்.
கடந்த காலத்தில்...: கடந்த 2016, ஜூலை 10-ஆம் தேதி, தில்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் முதுநிலை பட்டப்படிப்பு படித்து வந்த திருப்பூரைச் சேர்ந்த மாணவர் சரவணன் மர்மான முறையில் உயிரிழந்தார். அவரது பிரேதப் பரிசோதனை அறிக்கையில், விஷ ஊசி செலுத்தப்பட்டு அவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த வழக்கு கொலை வழக்காகப் பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com