எங்கள் மீதான நடவடிக்கை நரேந்திர மோடிக்கு தேர்தல் ஆணையர் செய்யும் பதில் மரியாதை: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

தேர்தல் ஆணையரின் நடவடிக்கையில் உள்நோக்கம் உள்ளது என ஆம் ஆத்மி கட்சி செய்தித்தொடர்பாளர் வெள்ளிக்கிழமை குற்றம்சாட்டியுள்ளார்.
எங்கள் மீதான நடவடிக்கை நரேந்திர மோடிக்கு தேர்தல் ஆணையர் செய்யும் பதில் மரியாதை: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

இரட்டைப் பதவி ஆதாயம் பெற்ற புகாரின் அடிப்படையில் தில்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 20 எம்எல்ஏ-க்களை உடனடியாக தகுதி நீக்கம் செய்யுமாறு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு தலைமை தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை பரிந்துரை செய்துள்ளது. 

இதன்மூலம் மிகவும் தரம்தாழ்ந்த செயலில் தலைமை தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளதாக ஆம் ஆத்மி கட்சித் தலைவரும் தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.

இவ்விவகாரம் தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி செய்தித்தொடர்பாளர் சௌரப் பரத்வாஜ், தில்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது:

எங்கள் எம்எல்ஏ-க்கள் மீதான நடவடிக்கை மேற்கொண்ட தேர்தல் ஆணையர் அச்சல் குமார் ஜோதி, 1975-ம் ஆண்டைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆவார்.

இவர் குஜராத் முதல்வராக நரேந்திர மோடி இருந்தபோது அம்மாநிலத்தின் தலைமைச் செயலராக இருந்துள்ளார். எனவே இந்த நடவடிக்கையின் மூலம் நரேந்திர மோடிக்கு தேர்தல் ஆணையர் செய்யும் பதில் மரியாதையாக இருப்பது போன்ற உள்நோக்கம் இருப்பதாகவே நாங்கள் கருதுகிறோம்.

அதுமட்டுமல்லாமல் இந்த விவகாரத்தில் சிலர், எங்கள் மீது எந்த முகாந்திரமும் இல்லாமல் புகார் அளித்துள்ளனர். ஆனால், இதில் ஆம் ஆத்மி எம்எல்ஏ-க்கள் தரப்பில் பதிலளிக்க எந்த வகையிலும் அனுமதி அளிக்கப்படவில்லை. 

இதில் எங்கள் எம்எல்ஏ-க்கள் லாபம் அடைந்தார்களா? இல்லையா? என்பதை அவர்களின் தொகுதிக்குச் சென்று அங்குள்ள மக்களை விசாரித்தால் உண்மை தெரிந்துவிடும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com