ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் 20 பேர் தகுதி நீக்கம்: தேர்தல் ஆணையம் பரிந்துரை

ஆதாயம் தரும் இரட்டைப் பதவி வகித்த விவகாரத்தில் தில்லி சட்டப்பேரவையின் ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர்கள் 20 பேர்களை தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் 20 பேர் தகுதி நீக்கம்: தேர்தல் ஆணையம் பரிந்துரை

ஆதாயம் தரும் இரட்டைப் பதவி வகித்த விவகாரத்தில் தில்லி சட்டப்பேரவையின் ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர்கள் 20 பேர்களை தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை அனுப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது.
அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சிக்கு வந்தது. இந்நிலையில், 2015, மார்ச் 13-இல் ஆம் ஆத்மி கட்சியின் 21 எம்எல்ஏக்களை பார்லிமென்ட்ரி செயலர்களாக நியமிக்கும் உத்தரவை தில்லி அரசு பிறப்பித்தது. அவர்கள் தில்லி அமைச்சர்களுக்கும், பொதுமக்களுக்கும் பாலமாக இருப்பார்கள் என்று முதல்வர் கேஜரிவால் கூறினார்.
காங்கிரஸ் புகார்: சம்பந்தப்பட்ட 21 எம்எல்ஏக்களும் ஆதாயம் தரும் இரட்டைப் பதவியை வகிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இது தொடர்பாக தில்லி காங்கிரஸ் சார்பில் 2016, ஜூன் 9-ஆம் தேதி தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது. அதில், ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் 21 பேரையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரப்பட்டது. இந்த விவகாரத்தை தேர்தல் ஆணையம் விசாரித்து வந்தது. 
நீதிமன்றம் உத்தரவு: இந்த விவகாரம் தொடர்பாக தில்லி உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில், 'துணைநிலை ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை பார்லிமென்ட்ரி செயலராக நியமித்த நடவடிக்கை சட்டவிரோதமானதாகும். இதனால், இது தொடர்பான முதல்வரின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது' என்று நீதிமன்றம் 2016, செப்டம்பரில் உத்தரவிட்டது. 
எம்எல்ஏ ராஜிநாமா: கடந்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெற்ற பஞ்சாப் மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக ரஜௌரி கார்டன் தொகுதி ஆம் ஆத்மி உறுப்பினர் ஜர்னைல் சிங் தனது பதவியை ராஜிநாமா செய்தார். இதையடுத்து, 20 எம்எல்ஏக்கள் மீதான விசாரணையை தேர்தல் ஆணையம் தொடர்ந்தது.
கோரிக்கை நிராகரிப்பு: பார்லிமென்ட்ரி செயலர் பதவியை ராஜிநாமா செய்துவிட்டதால், தங்கள் மீதான ஆதாயப் பதவி விவகார வழக்கு விசாரணையை கைவிடுமாறு சம்பந்தப்பட்ட எம்எல்ஏக்கள் தேர்தல் ஆணையத்தில் முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். ஆனால், அதை தேர்தல் ஆணையம் நிராகரித்தது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு அவர்களுக்கு தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு அக்டோபரில் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
தேர்தல் ஆணையம் முடிவு: இந்நிலையில், விசாரணை முடிந்த நிலையில், இந்த விவகாரத்தில் தொடர்புடைய ஆம் ஆத்மி எல்ஏக்கள் 20 பேரையும், பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. மேலும், இது தொடர்பாக குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக தேர்தல் ஆணையம் பரிந்துரையை அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதில், 'மார்ச் 13, 2015 - 2016, செப்டம்பர் 8-ம் தேதி வரை பார்லிமென்ட்ரி செயலராக இருந்ததால், ஆதாயம் தரும் பதவியை 20 எம்எல்ஏக்கள் வகித்துள்ளனர். இதனால், தில்லி சட்டப்பேரவையின் உறுப்பினராக இருப்பதற்கான தகுதியை இழக்கும் பொறுப்புக்கு உள்ளாகின்றனர்' என்று கூறப்பட்டுள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. எனினும், இது தொடர்பாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாகத் தகவல் எதையும் வெளியிடவில்லை. இது குறித்து தலைமைத் தேர்தல் ஆணையர் ஏ.கே. ஜோதி கூறுகையில் 'இந்த விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளதால் இதுபற்றி கருத்துக் கூற முடியாது' என்றார். 
ஆம் ஆத்மி அரசுக்கு ஆபத்தா?
மொத்தம் 70 உறுப்பினர்களைக் கொண்ட தில்லி சட்டப்பேரவையில் ஆம் ஆத்மி கட்சிக்கு 66 எம்எல்ஏக்கள் இருந்தனர். முன்னாள் அமைச்சர் கபில் மிஸ்ரா கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டதால் தற்போது அக்கட்சிக்கு பேரவையில் 65 எம்எல்ஏக்கள் பலம் உள்ளது. இந்நிலையில், 20 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டாலும் அரசுக்கு பாதிப்பு ஏற்படாது.

தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு


தேர்தல் ஆணைய பரிந்துரைக்கு எதிராக ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் தாக்கல் செய்த மனு மீது உடனடியாக உத்தரவு பிறப்பிக்க தில்லி உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை மறுத்துவிட்டது.
இந்த விவகாரத்தை விசாரித்த நீதிபதி ரேக்கா பாலி, இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் உத்தரவு ஏதும் பிறப்பித்துள்ளதா என்பது குறித்து ஜனவரி 22-ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டார். இது தொடர்பாக வேறு எந்த உத்தரவும், நோட்டீஸும் பிறப்பிக்கப்படாது என்று அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com