இந்தியா தொடர் கண்காணிப்பு: வெளியுறவுத் துறை அமைச்சகம்

டோக்கா லாம் நிலவரத்தை தொடர்ந்து கண்காணித்து வருவதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

டோக்கா லாம் நிலவரத்தை தொடர்ந்து கண்காணித்து வருவதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியா - சீனா - பூடான் எல்லையில் சிக்கிம் மாநிலத்தையொட்டி அமைந்துள்ள சர்ச்சைக்குரிய டோக்கா லாம் பகுதிக்கு மிக அருகே பெரிய அளவிலான கட்டுமான நடவடிக்கைகளை சீன ராணுவம் மேற்கொண்டு வருவதாக அண்மையில் தகவல்கள் வெளியாகின. 
அதனை உறுதிப்படுத்தும் வகையில் பேசிய சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் லூ காங்ஸ், 'டோங்லாங் (டோக்கா லாம்) பகுதியை பொருத்தவரை சீனாவின் நிலைப்பாடு தெளிவாகவும் உறுதியாகவும் உள்ளது. 
டோங்லாங் பகுதி, சீனாவுக்கு சொந்தமானது. அப்பகுதியில் வாழும் மக்களின் மேம்பாட்டுக்காக கட்டுமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன' என்றார்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார், தில்லியில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
டோக்கா லாம் நிலவரத்தை, தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். நாட்டின் பாதுகாப்புக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் தடுப்பதற்குரிய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 
டோக்கா லாம் விவகாரத்தில் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகளைக் களைவதற்காக, ஏற்கெனவே வரையறுக்கப்பட்ட நடைமுறைகளை இரு தரப்பும் பயன்படுத்தி வருகின்றன என்றார் ரவீஷ் குமார்.
பாகிஸ்தானுக்கு வலியுறுத்தல்: இதேபோல், மும்பை தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவரான ஜமாத் - உத் - தாவா பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் ஹஃபீஸ் சயீதுக்கு எதிராக உறுதியான நடவடிக்கையை பாகிஸ்தான் மேற்கொள்ள வேண்டும் என்று ரவீஷ் குமார் வலியுறுத்தினார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், 'ஹஃபீஸ் சயீது விவகாரத்தில், நிலைமையின் தீவிரத்தை பாகிஸ்தான் உணர்ந்துகொள்ள வேண்டும். அற்பமான காரணங்களைக் கூறுவதை விடுத்து, சயீதுக்கு எதிராக உறுதியான நடவடிக்கையை அந்நாடு மேற்கொள்ள வேண்டும்' என்றார்.
இதேபோல், எல்லையில் அத்துமீறி தாக்குதல்களை நடத்தும் பாகிஸ்தானின் செயலுக்கு, இந்தியா தொடர்ந்து கண்டனங்களைத் தெரிவித்து வருவதாகவும் அவர் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com