சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கு: சாட்சிகளிடம் முறையாக விசாரணை நடத்தப்படவில்லை

சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கில் சாட்சிகளிடம் விசாரணை நடத்துவதற்கு போதிய முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கு: சாட்சிகளிடம் முறையாக விசாரணை நடத்தப்படவில்லை

சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கில் சாட்சிகளிடம் விசாரணை நடத்துவதற்கு போதிய முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
கடந்த 1984-ஆம் ஆண்டு அக்டோபர் 31-ஆம் தேதி, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி தனது சீக்கிய பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். மறுநாள் நவம்பர் 1, 2-ஆம் தேதிகளில், தில்லி ராணுவக் குடியிருப்பு பகுதியில் சீக்கியர்களுக்கு எதிராகக் கலவரம் வெடித்தது. அதில், சீக்கியர்கள் உள்பட 2,800 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்தக் கலவரம் தொடர்பாக, 250-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அவற்றில் பல வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டனர். பல வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன.
இந்நிலையில், 5 வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ள தில்லி முன்னாள் எம்எல்ஏ மகேந்திர சிங் யாதவ் உள்ளிட்ட 11 பேரிடம் விளக்கம் கேட்டு தில்லி உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அதில், இந்த வழக்குகளை ஏன் மீண்டும் விசாரிக்கக் கூடாது? என்று உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது.
இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மகேந்திர சிங் யாதவ் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள், ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் கூறியதாவது:
சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முக்கிய நபருக்கு ஒரு முறை மட்டுமே அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் தலைமறைவான பிறகு, வாக்குமூலம் பதிவு செய்வது கைவிடப்பட்டுள்ளது. முக்கிய நபர்களிடம் விசாரணை நடத்துவதற்கு போதிய முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை.
எனவே, இந்த மனு மீது, வரும் மார்ச் 21-ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும். இதை தில்லி உயர் நீதிமன்றத்தில் மனுதாரர் தரப்பு தெரிவிக்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
முன்னதாக, இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிஐ-யை ஒரு மனுதாரராகச் சேர்க்க வேண்டும் என்று தில்லி போலீஸ் தரப்பு வழக்குரைஞர் பிங்கி ஆனந்த் விடுத்த கோரிக்கையை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com