டோக்கா லாம் பகுதியில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதை உறுதி செய்தது சீனா

சிக்கிம் எல்லையில் உள்ள டோக்கா லாமில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதை சீனா உறுதி செய்துள்ளது.
டோக்கா லாம் பகுதியில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதை உறுதி செய்தது சீனா

சிக்கிம் எல்லையில் உள்ள டோக்கா லாமில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதை சீனா உறுதி செய்துள்ளது.
டோக்கா லாம் பகுதியில் சீனா மிகப்பெரிய ராணுவ வளாகம் கட்டுவதாக தெரிவித்து, அதுதொடர்பாக எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. டோக்கா லாமில் இந்தியத் துருப்புகளுக்கு பதிலடி கொடுக்க சீனா தயாராகி வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் செய்தியாளர்களைச் சந்தித்த அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் லூ ஹாங்கிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:
அந்தச் செய்திகளை நானும் படித்தேன். அந்தப் புகைப்படங்களை யார் தந்தார்கள் என்பது தெரியவில்லை. ஆனால், அங்கு அத்தகைய பணிகள் நடக்கிறதா என்பது குறித்து எனக்குத் தெரியாது.
டோக்கா லாம் விவகாரத்தைப் பொறுத்தமட்டில், சீனாவின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. டோக்கா லாம் பகுதியானது சீனாவுக்குச் சொந்தமான பகுதியாகும். சட்ட ரீதியில் அது அங்கீகரிக்கப்பட்டது. அதுதொடர்பாக எந்தச் சர்ச்சைகளும் கிடையாது.
டோக்கா லாமில் இருக்கும் சீனப் படையினர் ரோந்து சென்று வருவதை எளிமைப்படுத்தவும், அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்காகவும் அங்குள்ள உள்கட்டமைப்புகளை சீனா மேம்படுத்தி வருகிறது. டோக்கா லாமில் சாலைகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை சீனா மேற்கொண்டு வருகிறது.
இந்தியா கருத்து தெரிவிக்கக் கூடாது: இந்தியா தனது பகுதிகளில் உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்வது குறித்து சீனா கருத்து தெரிவிப்பது கிடையாது. அதேபோல், சீன பகுதிகளில் எங்கள் நாட்டு அரசு மேற்கொண்டு வரும் உள்கட்டமைப்பு பணிகள் குறித்து பிற நாடுகளும் கருத்து தெரிவிக்கக் கூடாது. 
டோக்கா லாம் பகுதி குறித்து இந்திய மூத்த அதிகாரி (இந்திய ராணுவ தலைமைத் தளபதி விபின் ராவத்) கருத்து கூறுகையில், அங்கு இந்திய ராணுவம் எல்லைத் தாண்டி வந்ததை ஒப்புக் கொண்டுள்ளார்.
டோக்கா லாமில் ஏற்கெனவே இருதரப்புக்கும் இடையே நீடித்த முற்றுகையில் இருந்து இந்தியா படிப்பினைகளைக் கற்க வேண்டும். அந்தச் சம்பவம் போல் எதிர்காலத்தில் நடக்காமல் இந்தியா தவிர்க்கும் என நம்புகிறோம். டோக்கா லாம் சம்பவத்துக்குப் பிறகு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜீ ஜின்பிங் இடையே இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக கருத்தொற்றுமை எட்டப்பட்டது. அதை இருதரப்பும் பின்பற்றும் என நம்புகிறோம் என்றார் லூ ஹாங்.
டோக்கா லாம் பகுதியை சீனாவைப் போல பூடானும் உரிமை கொண்டாடி வருகிறது. அப்பகுதியை நோக்கி, சீனா கடந்த ஆண்டு சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டபோது, இந்தியா அதைத் தடுத்து நிறுத்தியது. இதனால், இரண்டு நாடுகளுக்கும் இடையே சுமார் 2 மாதங்களுக்கு பதற்றம் நிலவியது. 
இந்தியாவுக்கு எதிராக சீன ஊடகங்கள் பல குற்றச்சாட்டுகளையும், மிரட்டல்களையும் விடுத்தன. இருப்பினும், இந்திய, சீனத் தலைவர்கள் சந்தித்துப் பேசியதும் அந்த பதற்றம் முடிவுக்கு வந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com