மக்களவை, பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல்

'மக்களவைக்கும், அனைத்து மாநில சட்டப் பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அப்படிச் செய்வதன் மூலம் ஏராளமான நேரமும் பணமும் மிச்சமாகும்'
மக்களவை, பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல்

'மக்களவைக்கும், அனைத்து மாநில சட்டப் பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அப்படிச் செய்வதன் மூலம் ஏராளமான நேரமும் பணமும் மிச்சமாகும்' என்று பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் வலியுறுத்திக் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனியார் செய்தி சேனல் ஒன்றுக்கு வெள்ளிக்கிழமை அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
மக்களவைக்கும் அனைத்து மாநில சட்டப் பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். பண்டிகைகளைப் போல் தேர்தல் தேதிகள் நிர்ணயிக்கப்பட வேண்டும். அப்போதுதான் அரசியல்வாதிகள் பிரசாரப் பணியிலும், அதிகாரிகள் தேர்தல் பணிகளிலும் ஆண்டு முழுவதும் ஈடுபடாமல் இருக்க முடியும். அதேபோல், மக்களவை, சட்டப் பேரவை மற்றும் உள்ளாட்சித் தேர்தல் ஆகியவற்றுக்கு ஒரே வாக்காளர் பட்டியல் இருக்க வேண்டும். 
ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் செயல்திட்டமானது பாஜகவுடையதோ, மோடியுடையதோ அல்ல. இது தொடர்பாக அனைவரும் கூடி ஆலோசிக்க வேண்டும். மக்களவைக்கும் பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதன் மூலம் ஏராளமான நேரமும் பணமும், மிச்சமாகும்.
டாவோஸ் பொருளாதார மாநாடு: இந்தியா உலக அளவில் முத்திரை பதித்துள்ளது. பலன்களை அறுவடை செய்ய வேண்டியுள்ளது. இந்தியப் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது. இதனை, தரவரிசை அமைப்புகள் உள்பட உலகமே ஒப்புக் கொண்டுள்ளது. 
ஸ்விட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் வரும் 22-ஆம் தேதி தொடங்கும் உலகப் பொருளாதார மாநாடு, இந்தியாவுக்கு நல்ல வாய்ப்பாகும். இம்முறை அதில் பங்கேற்கிறேன். அந்த மாநாட்டுக்கு கடந்த காலங்களில் என்னால் செல்ல முடியவில்லை.
மிகப்பெரிய மக்கள்தொகையுடன் பெரிய சந்தையாக இந்தியா திகழ்கிறது. நம் நாடு தற்போது அன்னிய நேரடி முதலீடுகள் அதிகரித்து வருவதைக் காண்கிறது. இந்தியாவுடன் நேரடியாகப் பேசவும், அதன் கொள்கைகள் மற்றும் திறன் குறித்து நேரடியாகக் கேட்டறியவும் உலகம் விரும்புவது இயற்கையானதே. ஒரு விஷயத்தை நீங்கள் தலைவரிடம் இருந்து கேட்கும்போது அது முக்கியத்துவம் பெறுகிறது. 
நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு வளர்ச்சி சரியும்போதெல்லாம் அது பற்றி விமர்சனம் எழுவது குறித்துக் கேட்கிறீர்கள். நாட்டின் கவனம் பொருளாதாரம் மற்றும் வளர்ச்சி ஆகியவற்றின் மீது திரும்பியுள்ளது நல்லதுதான். விமர்சனத்தை கெட்ட விஷயமாக பார்க்கக் கூடாது. ஏனெனில், அதுதான் ஜனநாயகத்தின் பலம். நல்ல விஷயங்கள் பாராட்டப்படுவதும், குறைகள் விமர்சிக்கப்படுவதும் இயல்புதான் என்றார் மோடி.
மக்களவைக்கும், அனைத்து மாநில சட்டப் பேகரவைகளுக்கும் ஒரேநேரத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று பிரதமர் ஏற்கெனவே கருத்து கூறியுள்ளார். 
தற்போது மீண்டும் அக்கருத்தை அவர் வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com