மத்திய பட்ஜெட்: பாரம்பரிய முறைப்படி அல்வா தயாரித்தார் அருண் ஜேட்லி

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 29ம் தேதி தொடங்க உள்ள நிலையில், பாரம்பரிய முறைப்படி அல்வா தயாரிக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
மத்திய பட்ஜெட்: பாரம்பரிய முறைப்படி அல்வா தயாரித்தார் அருண் ஜேட்லி


புது தில்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 29ம் தேதி தொடங்க உள்ள நிலையில், பாரம்பரிய முறைப்படி அல்வா தயாரிக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இன்று நடைபெற்ற அல்வா தயாரிப்பு நிகழ்ச்சியில், மத்திய நிதித்துறை அமைச்சர் அருண் ஜேட்லி பங்கேற்று அல்வா தயாரிப்புப் பணிகளை துவக்கி வைத்தார்.

2018-19ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தயாரிப்புப் பணிகள் துவங்குவதன் முதல் நிகழ்ச்சியாக அல்வா தயாரிப்புப் பணி நடைபெறுவது வழக்கம். இதற்காக மிகப்பெரிய கடாய்களில் அல்வா தயாரிக்கப்பட்டு, மத்திய நிதித்துறை அமைச்சக ஊழியர்கள் அனைவருக்கும் வழங்கப்படுவது வழக்கம்.

பட்ஜெட் தயாரிக்கும் முன் அல்வா கிண்டும் விழா நடத்துவது ஏன்? சுவாரஸ்ய தகவல்கள்
பட்ஜெட் என்றால் ஏதோ போரடிக்கும் விஷயம் என்று மட்டும் நினைக்க வேண்டாம். இந்திய பொருளாதாரத்தின் ஆணி வேராக விளங்கும் பட்ஜெட் பற்றிய ஏராளமான சுவாரஸ்ய தகவல்களை இங்கே பார்க்கலாம்.

ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தயாரிக்கும் முன்பு, அல்வா கிண்டும் விழா நடத்தப்படுகிறது. அதிக அளவில் அல்வா தயாரித்து, பட்ஜெட் தயாரிக்க உதவும் அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை அனைவருக்கும் கொடுப்பார் மத்திய நிதித்துறை அமைச்சர்.

எந்த ஒரு நல்ல காரியத்தை செய்யும் முன்பும் இனிப்பு செய்வது இந்தியர்களின் பாரம்பரியம். அதன் அடிப்படையில் தான் பட்ஜெட் தயாரிக்கும் முன்பு அல்வா கிண்டும் விழா நடத்தப்படுகிறது. ஆனால், ஏன் குறிப்பாக அல்வா கிண்டுகிறார்கள் என்று கேட்டால் அதற்கு எங்களிடம் பதில் இல்லை. மன்னிக்கவும்.

ஒரே குடும்பத்தில் மூன்று பேர்
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் மத்திய பொது பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறார்கள். அவர்கள் யார் என்று பலருக்கும் தெரியும்.

ஆம், 1958ம் ஆண்டு ஜவகர்லால் நேரு பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பிறகு அவரது மகள் இந்திரா காந்தி 1970ம் ஆண்டு பட்ஜெட்டை தாக்கல் செய்ய, பிறகு 1987ம் ஆண்டு ராஜீவ் காந்தி பட்ஜெட் தாக்கல் செய்தார்.

பொது பட்ஜெட்டை தாக்கல் செய்த ஒரே பெண்
இந்தியப் பிரதமராக பதவி வகித்த இந்திரா காந்தி தான், பொது பட்ஜெட்டை தாக்கல் செய்த ஒரே ஒரு பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

கால் நூற்றாண்டு இடைவெளியில் பட்ஜெட்
சரியாக கால் நூற்றாண்டு இடைவெளியில் பட்ஜெட்டை தாக்கல் செய்தவர் என்ற பெயரை பெறுபவர் பிரணாப் முகர்ஜி. நிதியமைச்சராக இருந்த பிரணாப் 1982-83, 1983-84, 1984-85 ஆகிய 3 ஆண்டுகள் தொடர்ந்து பொது பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதன் பிறகு 2009ல் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் மீண்டும் பொது பட்ஜெட் தாக்கல் செய்தார்.

பட்ஜெட் தாக்கல் செய்யும் நேரம்
பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் மதியத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. சுதந்திரம் அடைந்த பிறகு 1999ம் ஆண்டு வரை பொது பட்ஜெட் என்பது பிப்ரவரி மாதம் கடைசி நாளில் மாலை 5 மணிக்குத்தான் தாக்கல் செய்யப்பட்டு வந்தது.

அதன்பிறகு பாஜக தலைமையிலான மத்திய அரசு பதவியேற்றதும், வாஜ்பாயி பிரதமரானார். மத்திய நிதியமைச்சராக யஷ்வந்த் சின்ஹா பொறுப்பேற்றார். அப்போதுதான் பட்ஜெட்டை முற்பகல் 11 மணிக்கு தாக்கல் செய்யும் நடைமுறை மாற்றப்பட்டது.

சுதந்திர இந்தியாவில் தாக்கல் செய்யப்பட்ட முதல் பட்ஜெட்டில் மத்திய அரசின் மொத்த செலவு ரூ.164 கோடியாகும். 

முன்பு, பொது பட்ஜெட், ரயில்வே பட்ஜெட் என நாடாளுமன்றத்தில் இரண்டு பட்ஜெட்கள் தாக்கல் செய்யப்படும். ஆனால் தற்போது இரண்டு பட்ஜெட்டுகளும் ஒருங்கிணைக்கப்பட்டு பொது பட்ஜெட்டாகவே தாக்கல் செய்யப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com