1 சதவீத இந்தியர்களிடம் நாட்டின் 73% சொத்து: ஆய்வு நிறுவனம் தகவல்

நாட்டின் 73 சதவீத சொத்துகள், ஒரு சதவீத இந்தியர்களிடம் மட்டுமே குவிந்திருப்பதாக ஆக்ஸ்ஃபோம் என்ற ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
1 சதவீத இந்தியர்களிடம் நாட்டின் 73% சொத்து: ஆய்வு நிறுவனம் தகவல்

நாட்டின் 73 சதவீத சொத்துகள், ஒரு சதவீத இந்தியர்களிடம் மட்டுமே குவிந்திருப்பதாக ஆக்ஸ்ஃபோம் என்ற ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலகப் பொருளாதார அமைப்பின் வருடாந்திர கூட்டம், ஸ்விட்சர்லாந்தில் உள்ள டாவோஸ் நகரில் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது. இந்த நிலையில், மக்களின் வருவாய் தொடர்பான ஆய்வறிக்கையை ஆக்ஸ்ஃபோம் என்ற ஆய்வு நிறுவனம் திங்கள்கிழமை வெளியிட்டது. பின்னர், அந்த அறிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது. அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
இந்தியாவில் கடந்த ஆண்டு ஈட்டப்பட்ட மொத்த வருவாயில் 73 சதவீதத்தை, செல்வந்தர்களாக இருக்கும் ஒரு சதவீதம் பேர், தங்கள் வசம் வைத்துக் கொண்டுள்ளனர். நாட்டின் மொத்த மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள், அதாவது 67 சதவீதம் பேரின் வருவாய், 1 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது.
இதேபோல், சர்வதேச அளவில் கடந்த ஆண்டு ஈட்டப்பட்ட மொத்த வருவாயில் 82 சதவீதத்தை செல்வந்தர்களான ஒரு சதவீதம் பேர் தங்களது வசம் வைத்துக் கொண்டுள்ளனர். உலக மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்களின் (370 கோடிப் பேர்) வருவாயில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.
கடந்த ஆண்டில் (2017), இந்தியாவில் ஒரு சதவீத செல்வந்தர்களின் வருவாய் ரூ. 20.9 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இந்தத் தொகையைக் கொண்டு அனைத்து மாநிலங்களின் கல்வி, சுகாதாரம் ஆகிய துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய முடியும்.
இந்தியாவில் கிராமப்புறத்தில் பணியாற்றும் கூலித் தொழிலாளி ஒருவர், நகரத்தில் முன்னணி ஆடைத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் உயர் பதவியில் இருக்கும் அதிகாரியின் தற்போதைய ஆண்டு வருமானத்தை ஈட்டுவதற்கு 971 ஆண்டுகளாகும். 
எனவே, அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில், பொருளாதாரக் கொள்கைகளை வகுப்பதை இந்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும். இதற்காக, அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் தொழிலாளர் துறையை மேம்படுத்த வேண்டும். விவசாயத் திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும். சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை சரியாக அமல்படுத்த வேண்டும். மற்றொரு புறம், வரி ஏய்ப்பைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆக்ஸ்ஃபோம் இந்தியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி நிஷா அகர்வால் கூறியதாவது:
நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் பலன்களை சிலர் மட்டுமே அனுபவிப்பது ஆபத்தான நிலைமையாகும். கடினமாக உழைப்பவர்கள், உணவு உற்பத்தியில் ஈடுபடுவோர், கட்டுமானத் துறை, தொழிற்சாலைகள் ஆகியவற்றில் பணியாற்றுவோரில் பெரும்பாலானோர் தினமும் 2 வேளை மட்டுமே சாப்பிடுகிறார்கள். அவர்கள் தங்களது பிள்ளைகளின் கல்விச் செலவுக்குப் பணம் கட்ட முடியாலும், மருத்துவ சிகிச்சைக்குப் பணமில்லாமலும் அவதிப்படுகிறார்கள். இந்த மிகப்பெரிய இடைவெளி, ஜனநாயகத்தை பலவீனப்படுத்துகிறது. இதனால், ஊழலும், முறைகேடுகளும் அதிகரிக்கும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com