'லவ் ஜிஹாத்' வழக்கு: ஹாடியாவின் திருமண நிலை குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்க முடியாது! 

கேரள 'லவ் ஜிஹாத்' வழக்கில் தொடர்புடைய இளம்பெண் ஹாடியாவின் திருமண நிலைகுறித்து தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
'லவ் ஜிஹாத்' வழக்கு: ஹாடியாவின் திருமண நிலை குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்க முடியாது! 

புதுதில்லி: கேரள 'லவ் ஜிஹாத்' வழக்கில் தொடர்புடைய இளம்பெண் ஹாடியாவின் திருமண நிலைகுறித்து தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

கேரள மாநிலம், வைக்கம் மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் அகிலா அசோகன். இவர் சேலத்தின் சித்தர் கோவில் பகுதியில் உள்ள ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் ஹோமியோபதி இன் மெடிக்கல் சயின்ஸ் இளநிலை பட்டப்படிப்பில் நான்கரை ஆண்டுகள் தனது படிப்பை முடித்துவிட்டு கேரளா சென்றவர் இதுவரை இன்டெர்ன்ஷிப்பை முடிக்கவில்லை.

கேரளா சென்ற அவர் ஷஃபீன் ஜஹான் என்ற முஸ்லிம் இளைஞரை மதம் மாறி திருமணம் செய்து கொண்டார். மேலும், அவர் தனது பெயரை ஹாடியா என்றும் மாற்றிக் கொண்டார்.

இந்நிலையில், தனது மகளை மூளைச்சலவை செய்து, மதம் மாற்றி திருமணம் செய்து கொண்டதாகக் கூறி, அந்தப் பெண்ணின் தந்தை அசோகன் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அந்த மனுவை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், அந்தத் திருமணம் செல்லாது என்று அறிவித்தது.

அதை எதிர்த்து, அந்தப் பெண்ணின் கணவர் ஜஹான், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், அந்தப் பெண்ணின் ஒப்புதலின்படியே திருமணம் நடைபெற்றுள்ளதா என்பதை அறிய, தேசியப் புலனாய்வு அமைப்பின் (என்ஐஏ) விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தது. அதையடுத்து என்ஐஏ விசாரணைக்கு தடை கோரி, அந்தப் பெண்ணின் கணவர் மனு தாக்கல் செய்தார்.

இந்த விவகாரத்தை விசாரித்த என்ஐஏ அமைப்பு, அந்தப் பெண்ணை, ஜஹான் மூளைச்சலவை செய்து, சிரியாவில் செயல்பட்டு வரும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் சேர்க்க திட்டமிட்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்தது.

இந்நிலையில், அந்தப் பெண்ணின் விருப்பப்படியே திருமணம் நடைபெற்றதா என்பதை அறிவதற்கு அவரை நேரில் ஆஜர்படுத்துமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி தனது பெற்றோர் வீட்டில் தங்கியிருந்த ஹாடியா, உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேரில் ஆஜர்படுத்தப்பட்டார்.

2 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த விசாரணையின்போது, அந்தப் பெண் தனது கணவருடனே செல்வதற்கு விருப்பம் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து, அந்தப் பெண் தமிழகத்தில் கல்வியைத் தொடருமாறு நீதிபதிகள் அனுப்பி வைத்தனர்.

மேலும் அந்தப் பெண், தமிழ்நாட்டின் சேலம் நகருக்கு விரைவில் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என்றும், அந்தப் பெண்ணுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் கேரள காவல் துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், அந்தப் பெண் பயிலும் சேலம் நகரில் உள்ள அந்த தனியார் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியின் தலைவரை, ஹாடியாவுக்கு பாதுகாவலராக நியமித்தும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் கன்வில்கர் மற்றும் சந்திரசூட் அடங்கிய அமர்வு முன் செவ்வாயன்று விசாரணைக்கு வந்தது. அப்பொழுது இந்த வழக்கில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தேசிய புலனாய்வு அமைப்பு சார்பாக நீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார். அதன் பின்னர் நீதிமன்ற அமர்வு தெரிவித்ததாவது:

நாங்கள் உங்கள் விசாரணை குறித்து கவலைப்படவில்லை. நீங்கள் உங்கள் விசாரணையைத் தொடரலாம்,அல்லது யாரையேனும் கைது செய்யலாம். அதனைக் குறித்து நாங்கள் கவலை கொள்ளவில்லை. நீங்கள் லவ் ஜிஹாத் பற்றி மட்டுமே விசாரிக்கலாம் ஒழிய, ஹாடியாவின் திருமண நிலை குறித்து விசாரிக்கக் கூடாது.

நீதிமன்ற அமர்வின் முன் ஆஜரான ஹாடியா தனது சுய விருப்பத்தின் பேரிலயே திருமணம் செய்து கொண்டதாக நேரடியாக தெரிவித்துள்ளார். கேரளா உயர் நீதிமன்றம் அவரது திருமணத்தினை ரத்து செய்தது குறித்து, ஹாடியா தந்தை தாக்கல் செய்துள்ள 'ஹேபியஸ் கார்பஸ்' மனு விசாரணையின் பொழுது விசாரிக்க உள்ளோம். ஒரு பருவமடைந்த பெண்ணின் திருமண தேர்வு குறித்து மட்டுமே நாங்கள் கவலை கொண்டுள்ளோம். 

இவ்வாறு தெரிவித்த நீதிபதிகள் வழக்கினை பிப்ரவரி 22-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com