பிரசவத்தின் பொழுது இடம்மாறிய குழந்தைகள்: நீதிமன்றத்தின் நெகிழ்ச்சித் தீர்ப்பு என்ன தெரியுமா? 

அசாம் மாநிலத்தில் பிரசவத்தின் பொழுது இடம்மாறிய இரண்டு குழந்தைகள், அவர்கள் பெரியவர்களாகி தீர்மானிக்கும் வரை  அவர்களது புதிய பெற்றோருடனே இருக்கலாம் என்று அசாம் நீதிமன்றம் ஒன்று ..
பிரசவத்தின் பொழுது இடம்மாறிய குழந்தைகள்: நீதிமன்றத்தின் நெகிழ்ச்சித் தீர்ப்பு என்ன தெரியுமா? 

கெளஹாத்தி:  அசாம் மாநிலத்தில் பிரசவத்தின் பொழுது இடம்மாறிய இரண்டு குழந்தைகள், அவர்கள் பெரியவர்களாகி தீர்மானிக்கும் வரை  அவர்களது புதிய பெற்றோருடனே இருக்கலாம் என்று அசாம் நீதிமன்றம் ஒன்று சம்மதம் தெரிவித்துள்ளது நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

அசாம் மாநிலத்தின் மங்கலதோய் மாநிலத்தில் உள்ள சிறிய கிராமம் பட்லிச்சர். இங்கு பள்ளி ஒன்றில் ஆசிரியராக இருப்பவர் சஹாபுதீன் அஹமத். இவரது மனைவி பிரசவத்திற்காக 2015-ஆம் ஆண்டு மார்ச் மாதம் அருகில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டார். அதே மருத்துவமனையில் பக்கத்து கிராமமான பேஜர்பராவில் வசிக்கும் போடோ பழங்குடியினத்தினைச் சேர்ந்த அனில் போடோவின் மனைவியும் பிரசவத்திற்காகச் சேர்க்கப்பட்டார். இருவருக்கும் ஒரே நேரத்தில் பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது.

ஆனால் அங்குள்ள செவிலியர்களின் அலட்சியத்தின் காரணமாக இரண்டு குழந்தைகளும் இடம் மாற்றப்பட்டு விட்டன. இதனை அறியாத இரண்டு பெற்றோர்களும் குழந்தைகளை எடுத்துக் கொண்டு சென்று விட்டனர்.பின்னர் குழந்தைகள்  வளர வளர அவர்களிடையே காணப்பட்ட வித்தியாசத்தினை இரண்டு பெற்றோர்களும் உணர ஆரம்பித்தனர்.

இதனால் முதலில் சஹாபுதீன் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் குறிப்பிட்ட அரசு மருத்துவமனையில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்தார். அப்பொழுதுதான் அவரது மனைவி அனுமதிக்கப்பட்ட அதே நேரத்தில் இந்து போடோ தம்பதி ஒருவரது மனைவியும் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டது தெரிய வந்தது. பின்னர் அவர்களை சஹாபுதீன் தொடர்பு கொண்ட பொழுதுதான் அவர்களும் குழந்தை குறித்த இதேபோன்ற குழப்பத்தில் இருப்பது தெரிய வந்தது.

பின்னர் இரு குடும்பத்தாரின் சம்மதத்துடன் டி.என்.ஏ சோதனை நடைபெற்றது. சோதனையின் முடிவில் குழந்தைகள் இடம்மாறியுள்ள விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது. பின்னர் இருவரும் சேர்ந்து மருத்துவமனையின் அலட்சியத்தன்மை குறித்து வழக்குத் தொடர்ந்தனர். அதன் காரணமாக இரண்டு செவிலியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். மேலும் துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக சஹாபுதீன் அஹமத் மற்றும் அனில் போடோ இருவரும் இணைந்து நீதிமன்றத்தில் தாக்கல்  செய்த பிரமாணப்பத்திரத்தில், குழந்தைகளின் மேல் தாங்கள் கொண்டுள்ள அன்பின் காரணமாக, அவர்களை மாற்றிக் கொள்ள  விரும்பவில்லையென்று கூட்டாகத் தெரிவித்தனர். மேலும் அவர்கள் வளர்ந்து பெரியவர்களாகி சொந்தப் பெற்றோருடன் இருக்கத் தீர்மானித்தால், அதற்கு பரஸ்பரம் எதிர்ப்பு தெரிவிப்பதைல்லை என்றும் முடிவு செய்துள்ளதாக நீதிமன்றத்திற்கு அறிவித்தனர். அவர்களின் இந்த முடிவினை நீதிபதி தாரங் ஏற்றுக் கொண்டார்.

இஸ்லாமியர்கள் மற்றும் போடோ பழங்குடியினரிடையே அடிக்கடி மோதல்கள் நடைபெற்று வரும் அந்தப் பகுதியில், இந்த சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com