மிக முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டாக 2018 விளங்குகிறது: ராம்நாத் கோவிந்த் உரை

இந்தியாவுக்கு 2018ம் ஆண்டு மிக முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டாக விளங்குகிறது என்று நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றி வரும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த கூறியுள்ளார்.
மிக முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டாக 2018 விளங்குகிறது: ராம்நாத் கோவிந்த் உரை


புது தில்லி: இந்தியாவுக்கு 2018ம் ஆண்டு மிக முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டாக விளங்குகிறது என்று நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றி வரும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த கூறியுள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார்.

பிப்ரவரி 1ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ள நிலையில், குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட பின் முதன்முறையாக ராம்நாத் கோவிந்த் நாடாளுமன்றத்தில்  உரையாற்றி வருகிறார்.

குடியரசுத் தலைவரின் உரையில் இடம்பெற்றிருப்பதாவது, இந்தியாவுக்கு 2018ம் ஆண்டு மிக முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டாக விளங்குகிறது. ஏன் என்றால், புதிய இந்தியா திட்டத்தின் தொடக்கமாக 2018 அமைந்துள்ளது. புதிய இந்தியாவிற்கான பயணத்தில் அனைவரின் பங்கும் இடம்பெற்றிருக்கும். 2018ம் ஆண்டு இந்தியாவுக்கான ஆண்டாக இருக்கும்.

தேசத்தைக் கட்டமைக்கும் திட்டத்தில் கழிவறைக் கட்டுவது  முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். காந்தியின் 150வது பிறந்த நாளை அடுத்த ஆண்டு கொண்டாடும் போது நாடு சுத்தமாக இருக்க வேண்டும்.

பிரதமரின் திட்டங்கள் ஏழைப் பெண்களை சென்றடைந்துள்ளன. சமூக நீதி, பொருளாதாரத்தை வலுப்படுத்தும் வகையில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. நடப்புக் கூட்டத் தொடரில் முத்தலாக் தடை மசோதா நிறைவேறும் என்று நம்புகிறேன். முத்தலாக் தடை மசோதா முஸ்லிம் பெண்கள் மேம்பாட்டுக்கு உதவும்.

கடந்த ஆண்டில் 275 மில்லியன் டன் உணவு தானியங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. 2022ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருவாயை இரண்டு மடங்கு அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 

பேறுகால விடுப்பை 26 வாரங்களாக அதிகரிக்கும் மசோதாவுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது.  பெண்களுக்கு பேறுகால வசதியை மத்திய அரசு அதிகரித்து வருகிறது. 

மின் வசதி இல்லாத கிராமங்களில் சுமார் 4 கோடி வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளன. முன்னேறுவதற்கான வாய்ப்பை ஏழைகள் பெற்றுள்ளனர். 2019ம் ஆண்டுக்குள் அனைத்து கிராமங்களுக்கும் சாலை வசதி ஏற்படுத்தித்தரப்படும்.

வேலை வாய்ப்பை அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. நாட்டின் 640 மாவட்டங்களில் பெண் குழந்தைகளின் மேம்பாட்டு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. 

ஏழை பெண்களின் பெயரில் 3 லட்சம் குடும்பங்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வசதி படைத்தவர்கள் மானியங்களை விட்டுத்தருவதன் மூலம், ஏழைகளுக்கு உதவ முடியும் என பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

2022க்குள் வீடில்லாத அனைத்து ஏழைகளுக்கும் வீடு கட்டித் தர இலக்கு, குறைந்த கட்டணத்தில் அனைவருக்கும் மருத்துவம் அளிக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. விவசாயிகள், நலிவடைந்தவர்களின் பக்கம் நிற்கிறது மத்திய அரசு என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com