மனைவியின் இல்லத்தில் திருடியதாக நடிகர் கைது! 

தகராறு காராணமாக பிரிந்திருக்கும் மனைவியின் இல்லத்தில் திருடியதாக தெலுங்கு நடிகர் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். 
மனைவியின் இல்லத்தில் திருடியதாக நடிகர் கைது! 

ஹைதராபாத்: தகராறு காராணமாக பிரிந்திருக்கும் மனைவியின் இல்லத்தில் திருடியதாக தெலுங்கு நடிகர் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். 

ஆந்திராவைச் சேர்ந்த நடிகர் சம்ரத் ரெட்டி. இவரது இயற்பெயர் கிருஷ்ணா ரெட்டி.இவர் 2010-ஆம் ஆண்டு வெளியான 'பஞ்சாக்ஷரி' என்னும் திரைப்படத்தில் அனுஷ்காவுடன் கதாநாயகனாக நடித்துள்ளார். அத்துடன் 'கிட்டு உன்னாடா ஜாக்ரதா' என்னும் திரைப்படத்திலும் கதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கும் ஹரிதா என்னும் பெண்ணுக்கும் கடந்த 2015-ஆம் ஆண்டு திருமணம் நடந்ததது.

ஆனால் அது முதல் தொடர்ந்து இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு நிலவி வந்தது. கிருஷ்ணாவுக்கு போதைப்பழக்கம் இருப்பதாகவும், மற்றொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகவும் ஹரிதா குற்றம் சாட்டி வந்தார். அத்துடன் வரதட்சனை கேட்டு தன்னைக் கொடுமைப்படுத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார். சமீபத்தில்தான் இது தொடர்பான வழக்கு ஒன்றில் கிருஷ்ணாவுக்கு ஜாமீன் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் தனது மனைவி தன் மீது கூறிய புகார்கள் எல்லாவற்றையும் கிருஷ்ணா மறுத்தார். சினிமாவில் நடிப்பதைக் கைவிடுமாறு தன்னை ஹரிதா தொடர்ந்து வற்புறுத்தியதாவும், அதற்கு மறுத்ததால் இத்தகைய குற்றசாட்டுகளை கூறுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் தான் இல்லாத நேரத்தில் தனது இல்லத்தில் திருடியதாக ஹரிதா அளித்த புகாரில் சம்ரத் என்னும் கிருஷ்ணா புதன்கிழமை  கைது செய்யப்பட்டிருக்கிறார். தனது புகாரில் அவர் கூறி இருப்பதாவது:

நான் ஊரில் இல்லாத நேரமாகப் பார்த்து கடந்த 13 -ஆம் தேதியன்று கிருஷ்ணாவும் அவரது சகோதரி சஹிதியும் மதப்பூரில் உள்ள எனது இல்லத்துக்குள் அத்துமீறி நுழைந்துள்ளார்கள் அங்குள்ள பொருட்களை திருடிச் சென்றுள்ளனர். மேலும் வீட்டுக்குள் நுழைந்ததற்கான சாட்சிகளை அழிக்கும் பொருட்டு கிருஷ்ணா அங்கிருந்த சிசிடிவி கேமராவினை உடைத்து, பதிவாகியிருக்கும் டிவிஆர் கருவியினையும் எடுத்துச் சென்றுள்ளார்.

இவ்வாறு அவரது புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹரிதாவின் புகாரின் பேரில் எடுத்துள்ள நடவடிக்கை பற்றித் தெரிவித்த மதப்பூர் காவல்துறை கண்காணிப்பாளர் கலிங்க ராவ், கடந்த 25-ஆம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டு, புதனன்று கிருஷ்ணா கைது செய்யப்பட்டதாகத் தெரிவித்தார். மேலும் கோவாவில் உள்ள அவரது சகோதரி சஹிதி திரும்புவதற்காக காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com