பணமதிப்பிழப்பு: புதிய ரூபாய் நோட்டுகளை கொண்டு சேர்க்க செலவிடப்பட்ட தொகை ரூ.29.41 கோடியா?

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு புதிய ரூபாய் நோட்டுகளை இந்தியா முழுவதும் கொண்டு சேர்ப்பதற்கு மட்டும் இந்திய விமானப்படை 29.41 கோடி ரூபாய் கட்டணம் விதித்துள்ளது.
பணமதிப்பிழப்பு: புதிய ரூபாய் நோட்டுகளை கொண்டு சேர்க்க செலவிடப்பட்ட தொகை ரூ.29.41 கோடியா?

2016-இல், பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு புதிய ரூபாய் நோட்டுகளை இந்தியா முழுவதும் கொண்டு சேர்ப்பதற்கு மட்டும் இந்திய விமானப்படை 29.41 கோடி ரூபாய் கட்டணம் விதித்துள்ளது. 

நவம்பர் 8, 2016 பிரதமர் மோடி, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். இதனால், இந்திய அரசு புதிய ரூபாய் நோட்டுகளை அச்சடித்து இந்தியா முழுவதும் கொண்டு சேர்க்க வேண்டிய நிலை ஏற்பட்டது. புதியதாக அச்சடிக்கப்பட்ட 500, 2000 ரூபாய் நோட்டுகள் இந்திய விமானப்படையின் சி-17, சி-130ஜே சூப்பர் ஹெர்குலஸ் விமானங்கள் மூலம் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு சேர்க்கப்பட்டது. 

இந்த சேவைக்கு இந்திய விமானப்படை நிர்ணயித்த கட்டணம் குறித்தான தகவல் தற்போது தகவல் அறியும் சட்டம் மூலம் வெளியாகியுள்ளது. இந்திய கப்பல் படையில் பணியாற்றி ஓய்வுபெற்ற லோகேஷ் பத்ரா இந்த தகவலை பெற்றுள்ளார். 

தகவல் அறியும் சட்டம் மூலம் வெளியான தகவலின் படி, 

"ரூபாய் அச்சடிக்கும் கழகங்களில் இருந்து இந்தியாவின் பல்வேறு இடங்களுக்கு இந்திய விமானப்படையின் விமானங்கள் சி-17, சி-130ஜே சூப்பர் ஹெர்குலஸ் மூலம் புதிய ரூபாய் நோட்டுகள் கொண்டு சேர்க்கப்பட்டது.

இந்த சேவைக்காக இந்திய அரசின் பணம் அச்சடிக்கும் கழகத்துக்கும், ரிசர்வ் வங்கிக்கும் இந்திய விமானப்படை ரூ.29.41 கோடியை கட்டணமாக நிர்ணயித்துள்ளது."

பணமதிப்பிழப்புக்குப் பிறகு 2016-இல் புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பதற்கு ரிசர்வ் வங்கி ரூ.7,965 கோடி செலவழித்துள்ளது. அதற்கு முந்தைய வருடம் ரூபாய் அச்சடிக்கப்பட்ட செலவை (ரூ.3,421 கோடி) காட்டிலும் புதிய ரூபாய் நோட்டுகளை அச்சடித்த செலவு இரட்டிப்பாக இருந்தது.  

பணமதிப்பிழப்பு அறிவித்ததை அடுத்து 2016-17-ஆம் ஆண்டில் ரிசர்வ் வங்கியின் வருமானம் 23.56 சதவீதம் குறைந்துவிட்டது. அதேசமயம் செலவு 107.84 சதவீதம் அதிகரித்துள்ளது. 

கறுப்பு பணம் ஒழிப்புக்காக இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்று மத்திய அரசால் காரணம் கூறப்பட்டது. ஆனால், பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகளில் 99 சதவீத தொகை ரிசர்வ் வங்கியிடமே மீண்டும் வந்து சேர்ந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com