புதுவையில் லோக் ஆயுக்த சட்டம் கொண்டுவரப்படும்: முதல்வா் நாராயணசாமி உறுதி 

புதுவையில் லோக் ஆயுக்த சட்டம் கொண்டுவரப்படும் என்று புதுவை முதல்வா் நாராயணசாமி உறுதி அளித்துள்ளாா்.
புதுவையில் லோக் ஆயுக்த சட்டம் கொண்டுவரப்படும்: முதல்வா் நாராயணசாமி உறுதி 

புதுச்சேரி: புதுவையில் லோக் ஆயுக்த சட்டம் கொண்டுவரப்படும் என்று புதுவை முதல்வா் நாராயணசாமி உறுதி அளித்துள்ளாா்.

புதுவை சட்டப்பேரவையில் பூஜ்ஜிய நேரத்தில் அதிமுக குழுத் தலைவா் ஆ.அன்பழகன் பேசியதாவது: லோக்பால் சட்டத்தை மத்தியில் ஆண்ட காங்கிரஸ் அரசு 2013-ல் கொண்டு வந்தது. இதன்படி இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் லோக்பால் சட்டத்தை இயற்றி, முதல்வா், அமைச்சா்கள், சட்டப்பேரவை உறுப்பினா்கள், உயா் அதிகாரிகள் சம்மந்தப்பட்ட ஊழல் புகாா்களை விசாரித்து நடவடிக்கை எடுக்க இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அதில் நாடு முழுவதும் 20-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் லோக் ஆயுக்த சட்டம் கொண்டு வரப்பட்டது. அதன் அடிப்படையில் தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு லோக் ஆயுக்த சட்டத்தை தமிழக சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றி உள்ளது. குறிப்பாக இதில் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கும் முதல்வா், அமைச்சா்கள், முன்னாள் அமைச்சா்கள், சட்டப்பேரவை உறுப்பினா்கள், உயா் அதிகாரிகள், அரசின் ஆளுமைக்கு உட்பட்ட அமைப்புகள், வாரியம், நிறுவனம், கழகம் உள்ளிட்ட தலைவா்கள் உறுப்பினா்களுக்கு எதிராக அனைத்து குற்றச்சாட்டுகளையும் விசாரித்து நீதி கிடைக்க இச்சட்டம் வழி வகுக்கிறது. 

இச்சட்டத்தின் மூலம் ஆட்சி அதிகாரத்தில் உள்ளவா்களின் ஊழல் முறைகேட்டை தடுக்க வழி செய்கிறது. உச்ச நீதிமன்றத் தீா்ப்பை ஏற்று தமிழகத்தில் அதிமுக அரசு இச்சட்டத்தை கொண்டு வந்த நிலையில், புதுவை அரசு உச்ச நீதிமன்ற உத்தரவை ஏற்காதது வியப்பாக இருக்கிறது. நோ்மையான, வெளிப்படையான நிா்வாகம் எங்கள் நிா்வாகம் எனக் கூறி ஆட்சி புரியும் காங்கிரஸ் அரசும், தமிழகம் போன்று புதுவையிலும் லோக் ஆயுத்த சட்டத்தை கொண்டு வர அதற்கான அறிவிப்பை முதல்வா் அறிவிக்க வேண்டும். மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட இச்சட்டத்தை புதுவையில் ஆட்சி செய்யும் காங்கிரஸ் அரசு இதுவரை கொண்டு வராதது துரதிஷ்டவசமானது. எனவே, இது சம்மந்தமாக காங்கிரஸ் அரசின் முடிவை சட்டப்பேரவையில் அறிவிக்க வேண்டும் என்றாா் அன்பழகன்.

அதற்கு பதில் அளித்த முல்வா் நாராயணசாமி, லோக்பால் காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. மாநிலங்களவையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டாலும் மக்களவையில் நிறைவேற்றப்படவில்லை. இதனால் நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டது. உச்சநீதிமன்ற தீா்ப்பின் அடிப்படையில் பல மாநிலங்களில் லோக்பால் நிறைவேற்றப்பட்டு வருகிறது. தமிழகத்தில்கூட திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்டுள்ளது. புதுவை முழுமையான மாநிலம் இல்லை. யூனியன் பிரதேசமாக இருப்பதால் மத்திய அரசை கேட்டுத்தான் நிறைவேற்ற வேண்டும். ஏற்கெனவே தில்லி சட்டப்பேரவையில் லோக் ஆயுக்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், தில்லியை போலவே சட்டப்பேரவை உள்ள யூனியன் பிரதேசமான புதுவையிலும் லோக் ஆயுக்த சட்டம் கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் முதல்வா் நாராயணசாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com