தில்லி புராரி சம்பவத்தின் பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளியானது.. 10 பேரும் தற்கொலையா?

தில்லி புராரி பகுதியில், மர்மமான முறையில் உயிரிழந்த  ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேரில் 10 பேருடைய பிரேதப் பரிசோதனை அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. 
தில்லி புராரி சம்பவத்தின் பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளியானது.. 10 பேரும் தற்கொலையா?

தில்லி புராரி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தில், ஒரு வாரமாகியும் மர்மம் நீடிக்கிறது. இது கொலையா? தற்கொலையா? என்பது இன்னமும் உறுதிப்படுத்தப்படுத்தப்பட முடியாத நிலை நீடித்து வருகிறது. 

இந்நிலையில், இந்த 11 பேரின் பிரேதப் பரிசோதனையில் 10 பேருடைய பிரதேப் பரிசோதனை அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. இதுகுறித்து போலீஸார் கூறுகையில், "10 பேரும் தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளனர். அவர்களுடைய உடலில் எந்த காயங்களும் இல்லை. அந்த குடும்பத்தில் உள்ள நாராயண் தேவி எனும் வயதான மூதாட்டியின் பிரதேப் பரிசோனையை எதிர்நோக்கி இருக்கிறோம். அவருடைய உடல் மற்றும் மற்ற 10 பேரிடம் இருந்து வேறுபட்டு தரையில் இருந்தது" என்றனர்.

இதன்மூலம், அந்த 10 பேரும் ஆன்மிகம் அல்லது கடவுளின் மாயையை அறியும் முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை மேலும் உறுதிசெய்கிறது.    

வழக்கு:

புராரியை அடுத்த சந்த் நகர் இரண்டாவது தெருவில் உள்ள குடியிருப்பின் முதலாவது மாடியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் வசித்து வந்தனர். அவர்களில் 4 ஆண்கள், 6 பெண்கள் உள்ளிட்ட 10 பேர் கடந்த ஜூலை 1-ஆம் தேதி வீட்டில் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தனர். வயதான மூதாட்டி ஒருவர் அருகில் உள்ள அறையில் இறந்த நிலையில் கிடந்தார்.

விசாரணையில் அவர்கள் நாராயண் தேவி (77), அவரது மகன்கள் புவனேஷ் (50), லலித் (45), மருமகள்கள் சவிதா (48), தீனா (42), நாராயண் தேவியின் மகள் பிரதீபா (57), பேரன், பேத்திகளான பிரியங்கா (33), நிதி (25) , மீனு (23), துருவ் (15), சிவம் (15) ஆகியோர் எனத் தெரிய வந்தது. இதையடுத்து, தில்லி காவல் துறையின் குற்றத் தடுப்புப் பிரிவினர், தடயவியல் துறையினர் சம்பவ வீட்டில் சோதனை நடத்தி, கையால் எழுதப்பட்ட சில குறிப்புகள் அடங்கிய நோட்டுகளை மீட்டனர். 

ஆன்மிகம் அல்லது கடவுளின் மாயையை அறியும் முயற்சியில் இறந்தவர்கள் ஈடுபட்டிருப்பதற்கான அறிகுறிகள் அந்தக் குறிப்புகள் மூலம் தெரியவந்ததாக போலீஸார் தெரிவித்தனர். மேலும், பிரதீபாவின் மகள் பிரியங்காவுக்கு ஜூன் மாதம் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. நிகழாண்டு இறுதியில் அவருக்கு திருமணம் நடைபெறவிருந்ததும், அதற்காக குடும்பத்தினர் தயாராகி வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. அவர்கள் அனைவரும் போராடி இறக்கவில்லை என்பது போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது. எனினும், 11 பேரின் மரணம் விடை காண முடியாத புதிராக இருந்து வருகிறது.

அதேவேளையில், அவர்கள் அனைவரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்யவில்லை என்றும், வெளிநபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் உறவினர்கள் சந்தேகம் எழுப்பினர்.

எனினும், இச்சம்பவம் கொலையா, தற்கொலையா என்பது உறுதி செய்வதற்கான துப்பு கிடைக்காமல் போலீஸார் திணறி வருகின்றனர். ஏனெனில், இறந்த குடும்பத்தினர் நல்ல வசதி படைத்தவர்கள். எனவே, பொருளாதார நெருக்கடி எதுவும் அவர்களுக்கு இல்லை. அவர்கள் தற்கொலைதான் செய்தார்கள் என்றால் அதற்கான காரணம் என்ன? அவர்கள் கொலை செய்யப்பட்டிருந்தால், அதற்கான நோக்கம் என்ன? கொலையாளிகள் யார்? என்பன போன்ற கேள்விகளுக்கு விடை கிடைக்கவில்லை.

எனினும், பிரேத பரிசோதனை அறிக்கைக்காக போலீஸார் காத்திருந்தனர். அதன் பிறகு,  உளவியல் ரீதியான பிரேத பரிசோதனையும் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் இறப்பதற்கு முன் 11 பேரின் ஆழ்மனத்தில் என்ன இருந்தது என்பதை உறுதிப்படுத்த முடியும் என்று போலீஸார் கூறுகின்றனர்.

இந்நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கை தற்போது வெளயாகியுள்ளது. அதில், அவர்களது உடலில் எந்தவித காயமும் இல்லை. 

அதனால், இதையடுத்து உளவியல் ரீதியான பிரேத பரிசோதனை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com