தில்லி குப்பையில் புதைகிறது; மும்பை தண்ணீரில் மூழ்குகிறது: கவலை தெரிவித்த உச்ச நீதிமன்றம்

தலைநகர் தில்லி குப்பையில் புதைந்து கொண்டு வருகிறது, மும்பையோ வெள்ள நீரில் மூழ்கிக் கொண்டிருக்கிறது. அரசுகள் என்னதான் செய்து கொண்டிருக்கின்றன என்று உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
தில்லி குப்பையில் புதைகிறது; மும்பை தண்ணீரில் மூழ்குகிறது: கவலை தெரிவித்த உச்ச நீதிமன்றம்


புது தில்லி: தலைநகர் தில்லி குப்பையில் புதைந்து கொண்டு வருகிறது, மும்பையோ வெள்ள நீரில் மூழ்கிக் கொண்டிருக்கிறது. அரசுகள் என்னதான் செய்து கொண்டிருக்கின்றன என்று உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

தில்லியில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றுவது தொடர்பான வழக்கு விசாரணையின்போது நீதிபதிகள், "மலைப்போல் தேங்கி கிடக்கும் குப்பைகளுக்கு அடியில் தில்லி புதைந்து கொண்டிருக்கிறது. அதேபோல் மும்பை நகரம் மழை நீரில் மூழ்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் அரசாங்கங்கள் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. ஆனால் நீதிமன்றங்கள் தலையிட்டால், அதன் மீது எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது என்று கருத்து தெரிவித்தனர்.

இந்த வழக்கில், தில்லியில் மலைப்போல் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்றுவது மாநில அரசின் பொறுப்பா அல்லது மத்திய அசின் பொறுப்பா என்பதை புதன்கிழமை தெளிவுபடுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆட்சி அதிகாரத்தில் தில்லி அரசுக்கே அதிகாரம் உள்ளது என்று உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு கடந்த 4ஆம் தேதி தீர்ப்பு அளித்திருந்தநிலையில், உச்ச நீதிமன்றம் இவ்வாறு தெரிவித்துள்ளது. 

தில்லியில் மலைப்போல் தேங்கியிருக்கும் குப்பைக் கிடங்குகளை அகற்ற வேண்டும் என்று தொடுக்கப்பட்ட வழக்கை செவ்வாய்க்கிழமை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மதன் பி லோகூர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, "தில்லி பால்ஸ்வா, ஓக்லா, காஜிபூர் ஆகிய பகுதிகளில் மலைப்போல் குப்பைக் குவிந்துள்ளது. 

இவற்றை அகற்ற வேண்டியது தில்லி அரசின் பொறுப்பா? அல்லது மத்திய அரசின் பொறுப்பா? தற்போது உச்ச நீதிமன்ற தீர்ப்புதான் உள்ளதே. 

யாருடைய கட்டுப்பாட்டின் கீழ் குப்பை மேலாண்மை திட்டம் வருகிறது என்று புதன்கிழமைக்குள் இதுதொடர்பான விளக்கத்தை அளிக்கவும்' என்று உத்தரவிட்டனர்.

இதையடுத்து, இதுதொடர்பாக புதன்கிழமை பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்படும். ஆகையால், வழக்கை 12ஆம் தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும்'என்று மத்திய அரசின் சார்பில் ஆஜராகியிருந்த கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பிங்கி ஆனந்த் தெரிவித்தார்.

மேலும், திடக்கழிவுகள் மேலாண்மை கையாள்வது குறித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யாத 10 மாநிலங்களுக்கும், 2 யூனியன் பிரதேசங்களுக்கும் அபராதம் விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com