உன்னாவ் பாலியல் வழக்கு: பாஜக எம்எல்ஏவுக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்

உத்தரப் பிரதேச மாநிலம், உன்னாவ் மாவட்டத்தில் 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக தொடுக்கப்பட்ட வழக்கில், பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கருக்கு எதிராக சிபிஐ புதன்கிழமை

உத்தரப் பிரதேச மாநிலம், உன்னாவ் மாவட்டத்தில் 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக தொடுக்கப்பட்ட வழக்கில், பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கருக்கு எதிராக சிபிஐ புதன்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
முன்னதாக, உன்னாவ் பகுதியிலுள்ள குல்தீப் சிங்கின் இல்லத்துக்கு வேலை தேடி கடந்த ஆண்டு தாம் சென்றதாகவும், அப்போது அவர் தன்னை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாகவும் 17 வயது சிறுமி ஒருவர் புகார் அளித்திருந்தார். 
அதன் பேரில் போலீஸார் நடவடிக்கை எடுக்காததால், முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் இல்லம் முன் அந்த சிறுமி கடந்த ஏப்ரலில் தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து, இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. 
குல்தீப் சிங்கை கைது செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இதைத் தொடர்ந்து, குல்தீப் சிங் கைது செய்யப்பட்டார். மேலும், இந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில், குல்தீப் சிங்குக்கு எதிராக லக்னௌவிலுள்ள சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ புதன்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில், பாலியல் பலாத்காரம், குற்றச் சதி, கடத்தல் உள்ளிட்ட பல்வேறு சட்டப் பிரிவுகள் மற்றும் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டப் பிரிவுகளின்கீழ் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மேலும், குல்தீப் சிங்குக்கு எதிராக சிறுமி தெரிவித்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கத்தக்கவையே; குல்தீப்பின் வாக்குமூலத்துக்கும் கடந்த 3 மாதங்களில் நாங்கள் திரட்டிய ஆதாரங்களுக்கும் முரண்பாடு உள்ளது. சம்பவம் தொடர்பாக புகார் கிடைக்கப் பெற்ற உடனேயே காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டிருந்தால் கூடுதல் ஆதாரங்களை திரட்டியிருக்க முடியும்' என்றும் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்ததாக அந்த சிறுமியின் தந்தை போலீஸாரால் கைது செய்யப்பட்டார். பின்னர், போலீஸ் காவலில் அவர் உயிரிழந்தார். எம்எல்ஏவின் சகோதரர் தாக்கியதால்தான் அவர் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாகவும் சிபிஐ விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com