தாஜ்மஹாலை பாதுகாக்க முடியாவிட்டால் இடித்து தள்ளுங்கள்: உச்ச நீதிமன்றம் ஆவேசம்

தாஜ் மஹாலை பாதுகாக்க முடியாவிட்டால், அதை உங்கள் (அரசு) விருப்பம் போல் இடித்து தள்ளுங்கள் என்று உச்ச நீதிமன்றம் ஆவேசத்துடன் தெரிவித்தது.
தாஜ்மஹாலை பாதுகாக்க முடியாவிட்டால் இடித்து தள்ளுங்கள்: உச்ச நீதிமன்றம் ஆவேசம்

தாஜ் மஹாலை பாதுகாக்க முடியாவிட்டால், அதை உங்கள் (அரசு) விருப்பம் போல் இடித்து தள்ளுங்கள் என்று உச்ச நீதிமன்றம் ஆவேசத்துடன் தெரிவித்தது.
உலகப் பாரம்பரிய சின்னமான தாஜ் மஹாலைப் பாதுகாப்பதில் மத்திய அரசு மற்றும் உத்தரப் பிரதேச மாநில அரசு ஆகியவற்றின் அதிகாரிகள் மெத்தனமாகவும், அக்கறையின்மையோடும் செயல்படுவதைக் கண்டிக்கும் வகையில் உச்ச நீதிமன்றம் இவ்வாறு கூறியது.
இதுதொடர்பான வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மதன் பி லோக்கூர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு புதன்கிழமை விசாரித்தது.
அப்போது, தாஜ்மஹாலை பாதுகாக்க இதுவரை மத்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன? இனி எடுக்கப்போகும் நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்து விரிவான தகவல்களுடன் இரண்டு வாரங்களில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதுகுறித்த வழக்கை, நீண்ட காலமாக விசாரித்து வருகின்ற போதிலும் இதுவரையிலும் உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படாத காரணத்தினால், ஜூலை 31-ஆம் தேதியில் இருந்து வழக்கு விசாரணையை நாள்தோறும் நடத்த உள்ளதாக நீதிபதிகள் கூறினர்.
முன்னதாக, புதன்கிழமை நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது பாரீஸ் நகரில் உள்ள ஈபில் கோபுரத்தையும், தாஜ் மஹாலையும் ஒப்பிட்டு நீதிபதிகள் பல கருத்துக்களை தெரிவித்தனர். 
இது தொடர்பாக நீதிபதிகள் கூறுகையில், பாரீஸ் நகரில் ஈபில் கோபுரம் இருக்கிறது. தாஜ் மஹாலோடு ஒப்பிடுகையில் அதில் ஒன்றுமேயில்லை. ஆனால், அங்கு ஆண்டுதோறும் 8 கோடி மக்கள் சென்று பார்வையிடுகின்றனர். தாஜ் மஹாலின் பார்வையாளர்களை விட இது 8 மடங்கு அதிகமாகும். தாஜ் மஹால் அழிந்து போவதை நீங்கள் (அரசு) வேண்டுமானால் விரும்பலாம். நாங்கள் அதை விரும்பவில்லை'' என்று குறிப்பிட்டனர்.
இதனிடையே, வழக்குரைஞர் ஒருவர் வாதிடுகையில், தாஜ் மஹாலைப் பாதுகாப்பதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது'' என்றார்.
அப்போது நீதிபதிகள் குறுக்கிட்டு, இந்த திட்ட அறிக்கை தாஜ் மஹால் அழிந்து பின்னராவது வெளியிடப்படுமா? தாஜ் மஹால் பாதுகாக்கப்பட வேண்டும் அல்லது அதனை இடித்து தள்ளுவது குறித்து மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும்'' என்று தெரிவித்தனர்.
மேலும், மாசு காரணமாக தாஜ் மஹால் பாதிக்கப்படுவது குறித்து நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும், அதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படாதது குறித்து அதிகாரிகள் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை என நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
மத்திய அரசின் கூடுதல் சொலிஸிட்டர் ஜெனரல் ஏ.என்.எஸ்.நட்கர்னி ஆஜராகி வாதிடுகையில், தாஜ் மஹால் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மாசு அளவை மதிப்பீடு செய்யும் பணியில் கான்பூர் ஐஐடி நிபுணர் குழு ஈடுபட்டுள்ளதாகவும், அந்தக் குழு நான்கு மாதங்களில் அறிக்கை சமர்ப்பிக்கும் என்றும் தெரிவித்தார்.
இதற்கு, மாசு அளவு குறைவாக இருக்கும் மழைக் காலத்தில் தான் இந்த ஆய்வை செய்ய வேண்டுமா என்ன?'' என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இந்த விவகாரத்தில் மத்திய அரசு ஏற்கெனவே தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரங்கள் முழுமையானதாக இல்லை என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com