திருமணத்தின் புனிதத் தன்மையைக் காப்பதற்காக கள்ளத் தொடர்பை குற்றமாகக் கருத வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு

திருமணத்தின் புனிதத் தன்மையைக் காப்பதற்காக கள்ளத் தொடர்பை குற்றமானதாகவே கருத வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

திருமணத்தின் புனிதத் தன்மையைக் காப்பதற்காக கள்ளத் தொடர்பை குற்றமானதாகவே கருத வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கேரளத்தைச் சேர்ந்த ஜோசஃப் ஷைன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொது நலன் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், கள்ளத் தொடர்பு விஷயத்தில் ஆண்கள் மட்டுமே பாதிக்கப்படுகின்றனர். கள்ளத் தொடர்பை குற்றமாகக் குறிப்பிடும் இந்திய தண்டனையியல் சட்டத்தின் 497-ஆவது பிரிவு, அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. இரு பாலினத்தவரும் விருப்பப்பட்டு கள்ளத் தொடர்பில் ஈடுபடும்போது, பெண்களை மட்டும் குற்றவாளிகளாகக் கருதாதது ஏற்றுக் கொள்ள முடியாது. பிரிட்டன் மற்றும் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் கள்ளத் தொடர்பு குற்றம் கிடையாது. எனவே, 497-ஆவது பிரிவை ரத்து செய்ய வேண்டும் என்று ஜோசஃப் ஷைன் கோரிக்கை விடுத்திருந்தார்.
அந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் புதன்கிழமை வந்தது. அப்போது, மத்திய அரசு 11 பக்கங்கள் அடங்கிய பதில் மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
திருமண பந்தத்தின் புனிதத் தன்மையைப் பாதுகாப்பதற்காக கள்ளத் தொடர்பை குற்றமானதாகவே கருத வேண்டும். கள்ளத் தொடர்பை குற்றமானதாகக் கருதும் சட்டத்தை நீர்த்துப் போக செய்துவிட்டால் திருமணத்தின் புனிதத்தன்மை பாதிக்கும். தேசத்தின் சமுதாயப் பண்பும், திருமணம் என்ற முறையும் அழிந்துவிடும். இந்திய தண்டனையியல் சட்டத்தின் 497-ஆவது பிரிவு திருமணம் என்ற நடைமுறையைப் பாதுகாக்கவும், ஆதரிக்கவுமே இருக்கிறது என்று மத்திய அரசு வாதத்தை முன்வைத்தது.
பிறர் மனைவியுடன் கள்ளத் தொடர்பில் ஈடுபடும் ஆணுக்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். கள்ளத் தொடர்பில் ஈடுபடும் பெண்களுக்கு தண்டனை கிடையாது.
இதற்கு முன்பு இந்தச் சட்டப் பிரிவுக்கு எதிராக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. கடந்த 1954, 1985, 1988 ஆகிய ஆண்டுகளில் இந்தச் சட்டப் பிரிவுக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com