நாப்கின், கைத்தறி, கைவினை பொருள்களுக்கு வரி குறைய வாய்ப்பு

மத்திய நிதியமைச்சர் தலைமையிலான, அனைத்து மாநில அரசுகளின் பிரதிநிதிகள் அங்கம் வகிக்கும், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தில்லியில் வரும் 21-ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.

மத்திய நிதியமைச்சர் தலைமையிலான, அனைத்து மாநில அரசுகளின் பிரதிநிதிகள் அங்கம் வகிக்கும், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தில்லியில் வரும் 21-ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.
இதில், குறைவான வருவாய் கொண்ட பல்வேறு பொருள்கள் மீதான வரியை குறைப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
குறிப்பாக, கைத்தறி ஆடைகள், கைவினைப் பொருள்கள் மற்றும் நாப்கின் எனப்படும் அணையாடை உள்ளிட்ட பொருள்கள் மீதான வரியை குறைப்பது குறித்து பரிசீலனை செய்யப்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பெரும்பாலான கைவினைப் பொருள்கள், கைத்தறி ஆடைகள் மற்றும் அணையாடைக்கு தற்போது 12 சதவீத வரி விதிக்கப்படுகிறது. அதே சமயம், பொது சுகாதாரம், அமைப்பு சாரா வேலைவாய்ப்பு ஆகியவற்றோடு தொடர்புடைய இந்தப் பொருள்களுக்கு முற்றிலுமாக வரியை ரத்து செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வெகுநாள்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஜிஎஸ்டி வரி விதிப்பு: கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் அமல்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில், பொதுவாக நான்கு அடுக்கு வரி விதிப்பு கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி, பொருள்களுக்கு ஏற்றாற்போல 5, 12, 18 மற்றும் 28 சதவீதம் என்ற அளவில் வரி விதிக்கப்படுகிறது.
முன்னதாக, ஜிஎஸ்டி கவுன்சில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கூடி ஆலோசித்தபோது, 28 சதவீத வரி விதிக்கப்பட்டு வந்த 178 பொருள்கள் மீதான வரி குறைக்கப்பட்டது. அதேபோன்று, உணவகங்களில் சாப்பிடுவதற்கான வரி 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. அதன் பின்னர், கடந்த ஜனவரி மாதம் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில், 54 சேவைகள் மற்றும் 29 பொருள்கள் மீதான வரிகளை குறைக்க முடிவெடுக்கப்பட்டது.
ஜிஎஸ்டி அமலாக்கம் செய்யப்பட்ட கடந்த ஓராண்டில் மத்திய அரசுக்கு ரூ.7.41 லட்சம் கோடி வருவாய் கிடைத்தது. மாதம் ஒன்றுக்கு சராசரியாக ரூ.89,885 கோடி வரி வருவாய் உள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில், புதிய உட்சமாக அரசுக்கு ரூ.1.03 லட்சம் கோடி அளவுக்கு ஜிஎஸ்டி வரி வசூலானது. அதன் பிறகு, மே மாதம் ரூ.94,016 கோடியும், கடந்த மாதம் ரூ.95,610 கோடியும் ஜிஎஸ்டி மூலம் அரசு வருவாய் ஈட்டியது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com