விவசாயிகளை வாக்கு வங்கியாக பயன்படுத்தியது காங்கிரஸ்: மோடி குற்றச்சாட்டு

ஒரு குடும்பத்தின் நலன்களை பாதுகாக்கும் வகையில், விவசாயிகளை வாக்கு வங்கியாக மட்டுமே காங்கிரஸ் கட்சி பயன்படுத்தியது என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டினார்.
பஞ்சாப் மாநிலம், மலோட்டில் புதன்கிழமை நடைபெற்ற விவசாயிகள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கெளர் பாதல், ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டார், 
பஞ்சாப் மாநிலம், மலோட்டில் புதன்கிழமை நடைபெற்ற விவசாயிகள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கெளர் பாதல், ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டார், 

ஒரு குடும்பத்தின் நலன்களை பாதுகாக்கும் வகையில், விவசாயிகளை வாக்கு வங்கியாக மட்டுமே காங்கிரஸ் கட்சி பயன்படுத்தியது என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டினார்.
மிகக் கடுமையாக உழைத்த போதிலும், சுபிட்சமான வாழ்வு குறித்து விவசாயிகள் நினைத்து கூட பார்க்க முடியாமல் போனதாகவும், காங்கிரஸ் அரசுகளின் தவறான கொள்கைகள் காரணமாக விவசாயிகள் பல ஆண்டுகளாக நம்பிக்கை இழந்தும், விரக்தியிலும் வாழ்ந்து வந்தனர் என்றும் அவர் கூறினார்.
இந்தச் சூழலை மாற்றியமைக்கும் நோக்கில் மத்தியில் உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு செயல்பட்டு வருவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
மத்திய அரசு அண்மையில் நெல், பருப்பு வகைகள் உள்ளிட்ட 14 பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை அதிகரித்தது. இந்த சாதனையை விளக்கும் வகையில், பஞ்சாப் மாநிலம், மலோட் என்ற இடத்தில் பொதுக்கூட்ட நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
ஹரியாணா மாநில பாஜக முதல்வர் மனோகர் லால் கட்டார், மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கெளர் பாதல், கூட்டணிக் கட்சியான சிரோன்மணி அகாலி தளம் தலைவர் சுக்பீர் சிங் பாதல், பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் உள்ளிட்ட பல தலைவர்களும், பஞ்சாப், ஹரியாணா, ராஜஸ்தான் ஆகிய மூன்று மாநில விவசாயிகளும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அதில் மோடி பேசியதாவது:
கடந்த 4 ஆண்டுகளில் உங்களது அபரிமிதமான உற்பத்தியால் களஞ்சியங்களை நிறையச் செய்து வருகிறீர்கள். உங்களை நான் தலைவணங்குகிறேன். கோதுமை, நெல், பருத்தி, கரும்பு மற்றும் பருப்பு வகைகள் என எதுவாயினும், முந்தைய சாதனைகளை முறியடிக்கும் வகையில் உங்களது உற்பத்தி அமைந்திருக்கிறது. தற்போது கூட, உற்பத்தியில் நீங்கள் புதிய சாதனையை செய்வீர்கள் என கணிக்கப்பட்டுள்ளது.
சூழ்நிலைகள் எதுவாயினும், எப்போதும் மிகக் கடுமையாக உழைத்தவர்கள் நீங்கள். ஆனால், கடின உழைப்பு இருந்த போதிலும், மகிழ்ச்சியாக இருந்திருக்க வேண்டிய உங்களது வாழ்வில் பல ஆண்டுகளாக நம்பிக்கையின்மையும், விரக்தியுமே நிறைந்திருக்கிறது.
கடந்த 70 ஆண்டுகளாக நாட்டை ஆட்சி செய்தவர்களே இதற்கு காரணமானவர்கள். இதில், பெரும்பாலான காலங்களில் தங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான பொறுப்பை விவசாயிகள் எந்தக் கட்சியிடம் (காங்கிரஸ்) ஒப்படைத்தார்களோ, அந்தக் கட்சி விவசாயிகளுக்கும், அவர்களது உழைப்புக்கும் மதிப்பளிக்கவில்லை.
விவசாயிகளுக்கு வெறும் வாக்குறுதிகள் மட்டுமே அந்தக் கட்சியால் தரப்பட்டது. இந்த 70 ஆண்டுகால வரலாறு நமக்கு கூறுவது யாதெனில், அவர்களுக்கு இருந்த ஒரே கவலை எல்லாம், ஒரு குடும்பத்தை பற்றியதும், அவர்களது வாழ்வை சுபிட்சமாக மாற்றுவதும் ஆகும். ஒரு குடும்பத்தை பலனடையச் செய்வது மட்டுமே காங்கிரஸின் கனவாக இருந்தது. ஒட்டுமொத்த தேசமும் இதனை அறியும்.
பல ஆண்டுகளாகவே உற்பத்திச் செலவில் வெறும் 10 சதவீதத்தை மட்டுமே விவசாயிகள் லாபமாக பெற முடிந்தது. இதற்கான காரணத்தை நான் அறிவேன். விவசாயிகள் தான் இந்த தேசத்தின் ஆன்மா. அன்னபூரணி அவர்கள்தான். ஆனால், காங்கிரஸ் கட்சி அவர்களை எப்போதும் பொய் சொல்லி ஏமாற்றி வந்தது. விவசாயிகளை வாக்கு வங்கியாக மட்டுமே காங்கிரஸ் பயன்படுத்திக் கொண்டது என்றார் மோடி.
இந்த நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பஞ்சாபி மொழியில் பேசியபோது, எல்லைகளைக் காப்பதானாலும், உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதானாலும், பஞ்சாப் மக்கள் எப்போதும் நாட்டைக் கவரும் வகையில் செயல்பட்டு வருகின்றனர்'' என்று மோடி தெரிவித்தார்.
விவசாயக் கழிவுகளை உரமாக்குவோம்''
பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களில் அறுவடைக்குப் பின் தேங்கும் விவசாயக் கழிவுகளை எரித்து விடுவதால் காற்று மாசுபாடு ஏற்படுகிறது. இப்பிரச்சனையை எதிர்கொள்ள மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது என பிரதமர் மோடி கூறினார்.
வட இந்தியாவில் அறுவடைக் காலங்களில் விவசாயக் கழிவுகளை எரிப்பதனால், தில்லி மற்றும் அருகில் உள்ள பகுதிகள் கடும் காற்று மாசுபாட்டுக்கு உள்ளாகின்றன. இதுகுறித்து பஞ்சாப்பில் நடந்த விவசாயிகள் மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது:
நான் இங்கு விவசாயக் கழிவுகளை எரிக்கும் பிரச்சனை குறித்து பேச விரும்புகிறேன். பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களில் இந்தப் பிரச்னையை எதிர்கொள்ள மத்திய அரசு ரூ. 50 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. மொத்த நிதி ஒதுக்கீட்டில் பாதிக்கு மேல் பஞ்சாபுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 
விவசாயக் கழிவுகளை கையாள்வதற்கான கருவிகள் வாங்குவதற்கு ஆகும் செலவில் 50 சதவீதத்தை அரசே ஏற்றுக்கொள்ளும்.
இந்தத் திட்டத்தின் மூலம் நிலத்தின் உற்பத்தி தன்மையை மேம்படுத்தலாம். மேலும் விவசாயக் கழிவுகளை எரிக்காமல் நிலத்திலேயே தங்க விடுவதனால் உரங்கள் வாங்கும் செலவில், ஒரு ஹெக்டேருக்கு ரூ.2000 வீதம் சேமிக்கலாம் என்று மோடி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com