ஆயுஷ்மான் பாரத் திட்டபயனாளர்களுக்கு ஆதார் கட்டாயமல்ல: சுகாதார அமைச்சகம்

மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத்-தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பயன்பெற ஆதார் கட்டாயமல்ல என்று மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.

மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத்-தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பயன்பெற ஆதார் கட்டாயமல்ல என்று மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் மருத்துவக் காப்பீடு பெற பயனாளர்கள் ஆதார் அட்டை வைத்திருப்பது கட்டாயம் என மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளதாக ஊடகத் தகவல்கள் வெளியான நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் இவ்வாறு கூறியுள்ளது.
இதுதொடர்பாக அந்த அமைச்சகம் அளித்துள்ள விளக்க அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
ஆதார் சட்டப் பிரிவு 7-இன் கீழ் மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையானது, ஆயுஷ்மான் பாரத் திட்ட பயனாளிகளின் அடையாளத்தை உறுதி செய்ய, திட்ட அமலாக்க அமைப்புகளானது சம்பந்தப்பட்ட பயனாளிகளிடம் ஆதார் அட்டை கோர வழிவகை செய்கிறது.
அவ்வாறு பயனாளிகளின் அடையாளத்தை உறுதி செய்ய ஆதார் அட்டையை பயன்படுத்துவது விருப்பத்துக்கு உள்பட்டதே தவிர, கட்டாயம் அல்ல. ஆதார் அட்டை இல்லாததை காரணமாகக் கூறி எவருக்கும் திட்டத்தின் பலன் மறுக்கப்படக் கூடாது. ஆதார் அட்டை இல்லாத பட்சத்தில், குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்ட அடையாள அட்டை உள்ளிட்ட இதர அரசு அடையாள அட்டைகளையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என வரைவு அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், ஆதார் அட்டை இல்லாத நபர்கள் அதற்காக விண்ணப்பிக்கும் வகையிலான மையங்களை வசதிக்கு உகந்த இடங்களில் அமைக்கும் பொறுப்பும் திட்ட அமலாக்க அமைப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ளது என்று அந்த விளக்க அறிக்கையில் மத்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.
ஆயுஷ்மான் பாரத்- தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டத்தின் கீழ் நாட்டிலுள்ள 10.74 கோடி ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சத்துக்கு மருத்துவக் காப்பீடு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com